சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா? எந்த அறிகுறியும் காணோமே… திமுகவுக்கு சீமான் கேள்வி

Author: Babu Lakshmanan
27 June 2021, 4:14 pm
Stalin Seeman- Updatenews360
Quick Share

சென்னை : திமுக ஆட்சியமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக வாங்கிய கடிதங்கள் என்னவாகியது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு விதங்களாக பிரச்சாரம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக, மாவட்டம் தோறும் கிராம சபைக் கூட்டம் நடத்தி, மக்களின் கலந்துரையாடல் நடத்தியதுடன், அவர்களின் கோரிக்கைகளை மனுக்களாக வாங்கினார். அந்த மனுக்களை வாங்கி ஒரு பெட்டிக்குள் போட்டு, அந்த சாவியை தானே வைத்துக் கொள்வதாகவும், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.

பின்னர், திமுக ஆட்சியமைந்ததும், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி அதிகாரியையும் முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார்.

இந்தநிலையில், திமுக ஆட்சியமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக வாங்கிய கடிதங்கள் என்னவாகியது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.

என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 254

1

0