செந்தில் பாலாஜியின் சிக்கல் தீர்ந்ததா…? அச்சுறுத்தும் அமலாக்கத்துறை வழக்கு..!திக் திக் கிளைமேக்ஸ்!!

Author: kavin kumar
10 August 2021, 10:08 pm
Quick Share

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 5-வது முறையாக வெற்றி பெற்றுள்ள 46 வயது செந்தில் பாலாஜி 2018-ம் ஆண்டு திமுகவில் இணைவதற்கு முன்பாக டிடிவி தினகரனின் அமமுகவிலும், அதற்கு முன்னர் அதிமுகவிலும் இருந்தவர்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011-15-ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.பின்னர் அமைச்சர் பதவியில் இருந்தும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்தும் ஜெயலலிதாவால் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதற்கிடையே அமைச்சராக இருந்த கால கட்டத்தில் வேலை வாங்கி வருவதாக கூறி 81 பேரிடம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி, சண்முகம், அசோக்குமார், ராஜ்குமார் என்கிற ஜெயராஜ் குமார் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக 2018-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் மீதும் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகை நகலை வாங்கிக் கொள்ள வருமாறு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அப்போது மற்ற மூவரும் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டனர். ஆனால் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. அதற்கான காரணமும் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே, இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின்போது, புகார்தாரர்களுடன் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும், எனவே வழக்கை ரத்து செய்யவேண்டும் என்றும் முறையிடப்பட்டது.

இதை உறுதி செய்த சென்னை ஐகோர்ட் செந்தில்பாலாஜி, சண்முகம் உள்ளிட்டோர் மீதான பண மோசடி வழக்கை அதிரடியாக ரத்துசெய்து உத்தரவு பிறப்பித்தது. இதுபற்றி பல்வேறு கருத்துகளையும், கடுமையான விமர்சனங்களையும் சமூக ஆர்வலர்கள் பொதுவெளியில் வைத்தனர்.அவர்கள் கூறும்போது, “பண மோசடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிகழ்வு 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது. இந்த புகார் மீது 4 ஆண்டுகள் வரை ஆரம்ப கட்ட விசாரணையும் நடந்து இருக்கிறது. அதன் பிறகு வழக்கு 3 ஆண்டு நடந்துள்ளது. அதுவரை புகார் அளித்தவர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இரு தரப்பினர் இடையே எந்த சமரசமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

பணத்தைப் பறிகொடுத்தவர்கள் இந்த 7 ஆண்டுகளில் எவ்வளவு மன உளைச்சல் கண்டிருப்பார்கள்?… பணம் கிடைக்குமா என்று படாதபாடு அல்லவா பட்டிருப்பார்கள்?…அவர்களின் குடும்பம் என்ன நிலைக்கு உள்ளாகி இருக்கும்?…ஆனால், இப்போது திடீரென ஒரே நாளில் சமரசம் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள். இதில் எந்த மாதிரியான சமரசம் ஏற்பட்டது என்பதும் வெளிப்படையாக தெரியவில்லை. 7 ஆண்டுகளாக சமரசம் செய்ய முயற்சிக்காதவர்கள் இப்போது மட்டும் அதை எப்படி செய்து முடித்தார்கள்?… அப்படியென்றால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யப்பட்ட பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக அர்த்தமாகிறது.

7 வருடத்திற்கும் வட்டியுடன் சேர்த்து இந்த பணம் திருப்பி கொடுக்கப்பட்டதா? என்பதும் தெரியவில்லை. இது சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடியதானா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. உதாரணத்திற்கு விலை மதிப்புமிக்க ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற ஒரு நபர், சில காலம் தலைமறைவாக இருந்துவிட்டு தன்னை காவலர்கள் சுற்றிவளைத்து விடுவார்கள் என்பது தெரிந்ததும் அந்த மோட்டார் சைக்கிளை அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்துவிட்டால் காவலர்கள் சும்மா விடுவார்களா?… திருட்டில் ஈடுபட்ட நபர் வேறு எங்கேனும் அதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறாரா? என்று முழுமையாக விசாரிக்கத்தானே செய்வார்கள்?… எனவே இந்த நிகழ்வு பாரபட்சத்தைதான் இந்த காட்டுகிறது.

இப்படி மோசடியில் ஈடுபட்டவர்கள், வழக்கு விசாரணைக்கும், தண்டனைக்கும் பயந்து சில காலம் கழித்து மோசடி செய்த தொகையை, திருப்பிக் கொடுக்கலாம் என்றால் இதேபோல் நிறைய பேர் கிளம்பி விடுவார்கள் என்பது நிச்சயம். அதுவும் ஒரு வருடம் அல்ல. பல வருடங்கள் கழித்து பார்த்துக்கொள்ளலாம் என்றால் யாரும் சட்டத்துக்கு பயப்படவே மாட்டார்கள். இதனால் மோசடிகளும், ரகசிய செட்டில்மென்ட்களும் தொடர்கதையாகி விடும். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது” என்று வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மேலும் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின்கீழ் மத்திய அரசின் அமலாக்கத்துறை கடந்தவாரம் அவர் மீது ஒரு வழக்கை பதிவு செய்தது.

இதற்கான விரிவான பதிலை ஜூலை 11-ந் தேதி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மத்திய அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பியும் இருக்கிறது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “அமலாக்கத்துறையிடம் நேரில் விளக்கம் அளிக்கவேண்டும் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தர்மசங்கட நிலைதான். அதிகாரிகள் சில மணிநேரமாவது கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்து விடுவார்கள். அவர்கள் கேட்கிற கேள்விக்கு சரியான பதில் கிடைக்காத வரை மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். ஆஜர் ஆகாமல் தவிர்த்தாலும் பிரச்சனைதான். கோர்ட்டு மூலம் நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடு செய்வார்கள். செந்தில் பாலாஜி மீதான ஒரு வழக்கு ரத்து செய்யப்பட்டு விட்டாலும் கூட மற்ற 2 வழக்குகளும் அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடியவை. எனவே அவருடைய சிக்கல் தீர்ந்ததுபோல் தெரியவில்லை” என்று குறிப்பிட்டனர்.

Views: - 291

0

0