செப்., 12ம் தேதி நீட் தேர்வு… தேர்வு மையங்கள் அதிகரிப்பு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

12 July 2021, 7:01 pm
Quick Share

சென்னை : நாடு முழுவதும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளுடன் செப்., 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டன. அதேபோல, நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவில் 2வது அலையின் தாக்கம் தற்போது இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல மாநிலங்கள் பெரும்பாலான தளர்வுகளுடன் அனைத்து சேவைகளுக்கு அனுமதியளித்து விட்டன.

இந்த நிலையில், நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத தேர்வு செப்., 12ம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ” நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வை நடத்த வேண்டும் என்பதால், தேர்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த 2020ம் ஆண்டு 3,862 ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் ஆகியவை தேர்வு மையங்களிலேயே வழங்கப்படும். மேலும், சமூக இடைவெளியுடன் அமருதல், மாணவர்களின் பதிவை அவர்களையே மேற்கொள்ளச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 154

1

0