திருப்பதியில் விஐபி பக்தர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் : தரிசனத்தை தலைகீழாக மாற்றிய தேவஸ்தானம்.. பிரமுகர்கள் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 12:43 pm
Tirupati - Updatenews360
Quick Share

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் நடைபெற்ற பின் விஐபி பக்தர்களை அவர்களின் தகுதிக்கு ஏற்ற வகையில் சாமி கும்பிட அனுமதிப்பது வழக்கம்.

முதலில் மிக முக்கிய பிரமுகர்கள், புரோட்டாகால் தகுதி வாய்ந்த பிரமுகர்கள், அதனை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை அடிப்படையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்கள் ஆகியோருக்கு சாமி கும்பிட அதிகாலை துவங்கி காலை எட்டு மணி நேற்று வரை அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று முதல் காலை 8 மணிக்கு துவங்கி விஐபி பக்தர்களுக்கு சாமி கும்பிட அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய சேவைகள் முடிந்தபின் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் இலவசமாக தரிசனத்திற்காக காத்து கிடக்கும் பக்தர்களுக்கு இன்று அதிகாலை முதல் 8 மணி வரை ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் அதன்பின் விஐபி பக்தர்களுக்கு உரிய தரிசன முறையை தலைகீழாக மாற்றிய தேவஸ்தான நிர்வாகம் முதலில் பரிந்துரை கடிதங்களின் அடிப்படையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வாங்கிய பக்தர்களை சாமி கும்பிட கோவிலுக்குள் அனுமதித்தது.

அதன் பின்னர் மிக முக்கிய பிரமுகர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இதுநாள் வரை விஐபி தரிசனத்தில் முதலில் ஏழுமலையானை வழிபட்ட முக்கிய, மிக முக்கிய பக்தர்கள் ஆகியோர் இப்போது அதே விஐபி தரிசனத்தில் கடைசியாக வழிபடுகின்றனர்.

இதற்கு காரணம் திருப்பதி மலையில் நிலவும் தங்கும் அறைகளுக்கான கடும் தட்டுப்பாடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய, மிக முக்கிய பக்தர்களுக்கு திருப்பதி மலையில் தங்குவதற்காக ஒதுக்கீடு செய்யும் போது அவர்கள் ஸ்டார் ஓட்டல் அறைகள் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

அப்படி கிடைக்காவிட்டால் இந்த அறை எங்களுக்கு தேவையில்லை. வேறு அறை வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கின்றனர். விஐபி பிரேக் தரிசனத்தில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம் காரணமாக தங்குவதற்கு சிறப்பான அறைகள் தேவை என்று கருதும் விஐபி பக்தர்கள் திருப்பதியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கி காலை 8 மணி அளவில் புறப்பட்டு திருப்பதி மலைக்கு சென்று ஏழுமலையானை வழிபடலாம்.

ஆனால் அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை வழிபடுவதில் கிடைக்கும் ஒரு விதமான அலாதியான மன திருப்தி எட்டு மணி அளவில் வழிபடுவதன் மூலம் கிடைக்காது என்றும், திருப்பதி மலையில் இரவு தங்கி அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை வழிபடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று அதே பக்தர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதனால் விஐபி பிரேக் தரிசன முறையில் தேவஸ்தான நிர்வாகம் கொண்டு வந்துள்ள தலை கீழ் மாற்றம் விஐபி பக்தர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் உறுதி.

Views: - 366

1

1