பஞ்சாப் காங்., தலைவராக நாளை சித்து பொறுப்பேற்பு : முதலமைச்சர் அமரீந்தர்சிங் பங்கேற்பார் என தகவல்

22 July 2021, 8:25 pm
Amarinder Singh - sidhu - updatenews360
Quick Share

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நாளை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் பங்கேற்பார் என தெரிகிறது.

பஞ்சாப்பில் முதலமைச்சர் அமரீந்தர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது அமைச்சரவையில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நவ்ஜோத் சிங் சித்துவும் இடம்பெற்றிருந்தார். ஆனால், முதலமைச்சர் அமரீந்தருக்கும், சித்துவுக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. முதலமைச்சரின் செயல்களை சித்து நேரடியாகவே விமர்சித்து வந்தார். இதனால், பஞ்சாப் அரசில் மோதல் வெடித்தது.

இதன் காரணமாக அமரீந்தர் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து சித்து விலகினார். அடுத்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு முக்கிய தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில், காங்கிரஸ் மேலிடமும் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டது.

அதாவது, அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை வழங்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. தலைவர் பதவிக்கு சித்து வந்து விட்டால், தன்னுடனான மோதலை மேற்கொண்டு அவர் தீவிரப்படுத்தி விடுவார் என்று முதலமைச்சர் அமரீந்தருக்கு அச்சம் எழுந்துள்ளது. இதனால், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்கக் கூடாது என்று வெளிப்படையாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமரீந்தர் கடிதம் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.ஆனால், அமரீந்தர் சிங்கின் எதிர்ப்பை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இருப்பினும், அமரீந்தர் சிங்குடன் தேசிய தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, மேலிடத்தின் முடிவை ஏற்றுக் கொள்ளச் செய்தனர்.

இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நாளை பதவியேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கும் பங்கேற்பார் என்று சொல்லப்படுகிறது.

Views: - 108

0

0

Leave a Reply