இசைத்த குயிலுக்கு இனிய தமிழின் இரங்கல்..!!!
26 September 2020, 9:15 pmதமிழுலகமும், பாடல் உலகமும், இசைபிரியர்களும் எதற்கு அஞ்சி பதறினார்களோ அந்த பெரும் கொடுமை நடந்தே விட்டது. சுமார் 50 ஆண்டுகாலம் இங்கு சோலையில் பாடிகொண்டிருந்த குயில் ஒன்று ஓய்வினை தேடி பறந்துவிட்டது.
பாடும் நிலா என கொண்டாடபட்ட அந்த நிலா, நம்மையெல்லாம் தீரா இருளில் தள்ளிவிட்டு மறைந்துவிட்டது. நீண்ட காலம் பாடியபடி ஓடி கொண்டிருந்த அந்த நதி வற்றிவிட்டது. கிட்டதட்ட 4 தலைமுறைகளால் கொண்டாடபட்டவரும், தீரா புகழ கொண்டவருமான எஸ்.பி பாலசுப்பிரமணியம் எனும் அந்த தேன்குரல் பாடகன் இனி இல்லை.
கொஞ்சமும் பிசிறில்லாத குரல், அட்சரம் பிறழாத ராகங்கள், எல்லா வகை ராகங்களிலும் நொடி பொழுதில் ஏறி இறங்கும் லாவகம், பாடும் பாடலின் உணர்ச்சிகளுக்கு ஏற்ற குரலில் வரும் மாற்றங்கள் என அவரின் வித்தைகள் ரசிகர்களை கட்டி போட்டிருந்தன.
எம்.ஜி ராம்சந்தர் காலத்தில் பாட வந்து, சிவகார்த்திகேயன் காலம் வரை பாடகராக நின்ற, அதுவும் பன்மொழி பாடகராக நின்ற அவரின் உழைப்பும் பெருமையும் கொஞ்சமல்ல. ஒரு வகையான கட்டிபோடும் குரல் அது, அந்த குரலில் வரும் பாடல்கள் கேட்போரை அப்படியே உள் இழுத்து செல்லும் ரகம். நினைக்க நினைக்க சிந்தை கலங்குகின்றது, மனம் எங்கெங்கோ தாவி அழுகின்றது.
அவரின் பாடல் திறமை, சாதனை, அனுபவங்கள் என இனி பக்கம் பக்கமாக விளக்குவார்கள், அவரின் பெருமைகளெல்லாம் இனி சில நாட்களுக்கு உரக்க பேசுவார்கள். பேசித்தான் ஆக வேண்டும் அவரின் சாதனை அப்படி. அவர் பல்லாயிரம் பாடல் பாடிய உலக சாதனையாளர், இது போக பன்மொழி பாடகர் என ஏக பெருமை அவருக்கு உண்டு அவரிடம் பாடலை தாண்டியும் கற்க வேண்டிய பண்புகள் ஏராளம் இருந்தன.
எம்.ஜி ராம்சந்திரன் அவரை கொண்டாடினார், அப்படியே என்.டி ராமராவும் கொண்டாடினார். ஆனால் அவர்களிடம் எந்த காலத்திலும் கையேந்தியோ காரியம் சாதிக்கவும் எஸ்.பி சென்றதில்லை. பாடல்களை தவிர அவர் பெயர் வீண் சர்ச்சைகளில் அடிபட்டதில்லை, ஒரு ஒழுக்கம் அவரிடம் இருந்தது.
கோடிகணக்கான வசூலை கொட்டும் குரலை அவர் மேடைகளை தவிர எங்கும் வியாபாரமாக்கவில்லை, அதுவும் நற்காரியத்துக்கும் நல்ல விஷயங்களுக்குமே அவர் தனியே பாட வந்தாரே தவிர தனக்காக அல்ல. மிகபெரிய பெருந்தன்மை அவருக்கு இருந்தது. தெய்வம் தனக்கு அருளிய தனிவரத்தை அவன் ஒருகாலமும் தவறாக பயன்படுத்தவில்லை.
பாடகனை போலவே ஒரு நடிகனும் அவருக்குள் இருந்தான், கவுரவமான வேடங்களில் நடித்து கவுரவமாகவே ஓய்வும் பெற்றார். கலையுலகில் யாரையும் போட்டியாக கருதாமல், யாருடனும் பகை வளர்க்காமல், யாரை பற்றியும் குறை சொல்லாமல், கொஞ்சமும் கர்வமில்லாமல் அமைதியாய் “எல்லோருக்கும் இனியராய்” இருந்தல் என்பது முடியாத காரியம்.
அந்த அசாத்திய சாதனையினை பாலசுப்பிரமணியம் செய்தார். திரைபாடல்களை போலவே அவரின் பக்திபாடல்களும் பிரசித்தி பெற்றவை காலம் கடந்து நிற்பவை. பக்தி அவருக்கு இயல்பாய் இருந்தது, அவரின் வெற்றிகளுக்கெல்லாம் அதுதான் காரணம். கடைசி வரை நேற்று வந்த பாடகன் போல் ஒரு எளிமை இருந்தது, மிகபெரிய பாடகன், சாதனையாளன் எனும் கர்வமெல்லாம் ஏதும் அவரிடமில்லை.
இவ்வளவுக்கும் எவ்வளவோ படங்கள் அவரால் வென்றன, அவரின் குரலால் மட்டும் வென்ற படங்கள் உண்டு. அவர் பாடினால் படம் வெற்றி எனும் சென்டிமென்ட் ரஜினி வரைக்கும் உண்டு. எந்த ராகமும் அவருக்கு சிரமமில்லை, எந்த உச்சஸ்தானியோ இந்துஸ்தானியோ அசால்ட்டாக தாண்டி வந்தார். அவருக்கு சவாலான பாடல் என எதையும் சொல்லமுடியாது, யானை மரகட்டையினை தூக்குவது போல் தூக்கி எறிந்தார்.
ஆனால் இந்த கொரோனா எனும் கொடும் தொற்றினை அவரால் சமாளிக்க முடியவில்லை, நீண்ட போராட்டம் நடத்தி தன் வாழ்வினை முடித்து கொண்டார். எந்த தொண்டை அவருக்கு கணீர் என குரல் கொடுத்ததோ, எந்த நுரையீரலில் மூச்சடக்கி வித்தை காட்டினாரோ அந்த தொண்டையும், நுரையீரலும் கொரோனா கிருமியால் முடக்கபட்டு உயிரை பறித்தது.
ஒரு பொறியல் கல்லூரி மாணவனாக அவன் படிப்பினை தொடர்ந்திருந்தால் ஒரு பொறியாளர் கிடைத்திருப்பார், யாருக்கும் தெரியாமலே வாழ்ந்து மறைந்திருப்பார். ஆனால் விதி அவரை சரியாக இழுத்து வந்து பெயர் பெற வைத்து, வாழ்வாங்கு வாழவைத்து அனுப்பியும் விட்டது.
அது தன் கடமையினை சரியாக செய்தது, அவரும் அதற்கு ஒத்துழைத்தார். அதனால் சிகரம் தொட்டார். இந்த மானிட உலகம் கொடுமையான விளையாட்டு திடல், ஒவ்வொருவனின் ஆட்டமும் முடியும் நேரம் வந்ததும் அனுப்பியவன் விசில் கொடுக்கின்றான், அதன் பின் யாரும் உள்ளே நிற்க முடியாது.
உடனே கிளம்பி செல்ல வேண்டியதுதானே தவிர கூட்டம் கதறி அழுதாலோ, ஆர்பரித்தாலோ , உரண்டு புரண்டாலோ ஒன்றும் ஆகபோவதில்லை. அது எவ்வளவு பெரும் ஆட்டகாரன் என்றாலும் மேலிருந்து ஆட்டும் முதலாளி உத்தரவிட்டால் கிளம்ப வேண்டியதுதானே தவிர வேறு வழியில்லை. ஆனால், ஆடும்பொழுது என்ன ஆடினார்கள் என்பதுதான் வரலாறு, அவ்வகையில் பாலசுப்பிரமணியம் மிகபெரும் வரலாற்றை நிகழ்த்திவிட்டு சென்றுவிட்டார்
ஒரு மனிதன் குரலால் எல்லை தாண்டி, கடல் தாண்டி மொத்த உலக இந்தியர்களையும் வசீகரிக்க முடியும் எனும் வித்தையினை அவர் செய்து காட்டினார்.
இனி அந்த சங்கீத பெருமகன் இல்லை, சரஸ்வதி கையில் வீணையாக இங்கு ஒலித்த அந்த இனிய குரலோன் இனி இல்லை. ஆனால் விஞ்ஞானம் வழி தெய்வம் அவரின் பாடலை பதிவு செய்து எல்லோரும் எக்காலமும் கேட்கும் படி வழிசெய்திருக்கின்றது. அதில் கல்வெட்டு போல் அவர் பாடி கொண்டே இருப்பார்.
சுமார் அரை நூற்றாண்டுஎல்லா மொழி சினிமாவிலும் அவர் பாடியிருந்தாலும் தமிழகத்துக்கான அவரின் பங்களிப்பு அதிகம்
அவ்வகையில் ஒவ்வொரு தமிழனும் அவரை நன்றியோடு வழியனுப்பி வைக்கின்றான். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு நாளும் எப்படியாவது கேட்டுவிடும் குரல் அவருடையது, அனுதினமும் அவரின் ஏதாவது ஒரு பாடல் எங்கேனும் ஒலித்து கொண்டே இருக்கும், தமிழகம் மட்டுமல்ல, உலகெங்கும் ஒலித்து கொண்டேதான் இருக்கும்.
இது இனி எக்காலமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும், காரணம் தமிழ் திரையுலகின் பொற்கால பாடல்களும் எஸ்.பியும் பிரிக்க முடியாதவை.
அவ்வகையில் எக்காலமும் அவர் நம்மோடு தொடர்ந்து வருவார். கொடும்சாவு அவரைத்தான் பிரிக்க முடியுமே தவிர அவர் குரலை நம்மிடமிருந்து பிரிக்கவே முடியாது.
கலைமகளின் பாடகன் தன் பூலோக கடமையினை முடித்துவிட்டு கிளம்பிவிட்டான். அவரின் பக்தி பாடல்களை கேட்டபடி அவருக்காய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவோம். அந்த தலைமகன் பாடிய தெய்வங்களெல்லாம் அவனுக்கு நித்திய இளைபாற்றியினை கொடுக்கட்டும்.மேலோகத்தில் தன் இனிய குரலால் தேவதைகளுடன் அவன் இறைவனை போற்றி பாடி கொண்டே இருக்கட்டும்.
தான் பிறந்த வீட்டை வேதபாடசாலைக்கு விட்டுகொடுத்த அந்த புண்ணியம் அவன் தலைமுறையினை காத்து அதிலே அவன் மறுபடியும் பிறந்து வரட்டும்.
என்னதான் ஆறுதல் சொன்னாலும் அந்த கணீர் குரலும், அந்த சிரித்த முகமும், பாடலை சுவாசித்து அவர் பாடும் அந்த அழகும் நினைக்க நினைக்க பெருகி வரும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
பாடி பாடி நம்மை மகிழ்வித்த அவனை, அழுது அழுது வழியனுப்பி வைப்போம். மானிட சாதி அதை தவிர என்ன செய்துவிட முடியும்? இன்று அவருக்காக ஒவ்வொரு குடும்பத்திலும் எல்லோரும் அழுவார்கள்.
முதியோர், நடுத்தர வயதினர், கல்லூரி தரம், பள்ளி வகுப்பு என எல்லோரையும் தொட்ட குரல் அது. ஆம் எல்லோரையும் ஒரு மனிதன் அழவைத்து செல்லுகின்றான் என்றால் அதிலே அவனின் நீண்ட கால சாதனையும் உழைப்பும் அதில் நிலைத்து நின்ற மாண்பும் தெரியும்
உதய கீதம் படத்தில் அவர் பாடிய வரிகளோடு அவர் விடைபெறுகின்றார்
“பிள்ளை நாளை பார்க்குமே
என்னை எங்கே என்று கேட்குமே…
கண்கள் நீரை வார்க்குமே…
அது சிந்தும் கண்ணீர் தீர்த்தமே…
இரு கண்ணி்ல் என்ன வேதனை…
கண்டேன் எந்தன் ஜீவனை…
என் சாவில் கூட சாதனை…
அழுகின்ற உள்ளங்களே…
வாழ்க வாழ்கவே…..”