சிக்கினார் சித்தாண்டி..! வெளிச்சத்துக்கு வரும் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவரங்கள்…!

4 February 2020, 3:25 pm
Quick Share

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த  சித்தாண்டி சிபிசிஐடி போலீஸாரால் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது  தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.

அரசுதுறைகளை சேர்ந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 14 பேரும், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2 முறைகேடு வழக்குகளிலும் தொடர்புடைய சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர்.

ஜெயக்குமாரின் 12 வங்கிக் கணக்குகளை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர். இதேபோல சித்தாண்டி மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகத்  தேடி வந்தனர்.

இந் நிலையில், இன்று அவரை சிவகங்கையில் வைத்து  கைது செய்துள்ளனர். முன்னதாக, அவர் மீது, கூட்டுச்சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.