காலணி வீச்சு விவகாரம் : திமுக -பாஜக டிஷ்யூம் டிஷ்யூம் உச்சம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 8:11 pm
PTR Car Slipper DMK Bjp - Updatenews360
Quick Share

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த நமது ராணுவ வீரரும் மதுரையை சேர்ந்தவருமான லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் மதுரை மாவட்ட பாஜக தலைவராக பதவி வகித்த சரவணனுக்கும் மதுரை விமான நிலையத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைச்சர் கார் மீது காலணி வீசப்பட்டது, தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் திமுகவினர் கடும் கொந்தளிப்புக்கும் உள்ளாகி இருக்கின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலையையும், பாஜகவையும் சமூக ஊடங்களில் கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர்.

பிணத்தை வைத்து சாக்கடை அரசியல்

தனது கார் மீது காலணி வீசப்பட்டதால் கோபமடைந்த நிதியமைச்சர் தியாகராஜன் கூறும்போது, “ராணுவ வீரரை அடக்கம் செய்த நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து நான் பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணமும் அல்ல. அதுபோல அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்” என்று குமுறினார்.

அசிங்க அரசியல் மட்டும்தான் பாஜகவுக்கு தெரியும்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது கண்டன அறிக்கையில், “தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி வீசியது கண்டனத்திற்குரியது. தேசியக் கொடி ஏற்றிய காரின் மீது காலணி வீசியிருக்கும் பாஜகவின் செயல் அருவருக்கத்தக்கது. இதன் மூலம் பாஜகவின் கீழ்த்தர அரசியலை மக்கள் உணர்ந்துள்ளனர். செருப்பு வீசுவது, சிலைகளை சேதப்படுத்துவது போன்ற அசிங்க அரசியலை தவிர பாஜகவுக்கு வேறு எதுவும் தெரியாது என்பது அவர்களது பண்பாடற்ற நடவடிக்கைகளால் தெரிகிறது” என ஆவேசமாக கூறியுள்ளார்.

பாஜகவின் உண்மையான முகம்

அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில் ” அமைச்சர் பிடிஆர் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார், தமிழக பாஜக தலைவர். அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறைகளை தூண்டும் இவர்களின் உண்மையான முகத்தை தமிழக மக்கள் உணரவேண்டும்” என்று பொங்கியுள்ளார்.

செருப்புகளை கொச்சைப்படுத்த விரும்பவில்லை

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தனது பதிவில் “எங்கள் கால்களிலும் செருப்பு உள்ளது என்பதை அண்ணாமலை உணர்வார்! நாங்கள் போராடித்தான் அந்த செருப்பினை கூட எங்கள் கால்களில் போட உரிமை பெற்றோம். அப்படி பெற்ற உரிமையான செருப்பை உங்கள் மீது வீசி எங்கள் செருப்புகளை கொச்சைபடுத்த விரும்பவில்லை” ஏளனமாக விமர்சித்துள்ளார்.

திமுக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அமைச்சர் தியாகராஜனுக்கு ஆதரவாகவும் தமிழக பாஜகவினருக்கு எதிராகவும் பொங்கியெழுந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மாநில பாஜக தலைவர்களும் வரிசை கட்டி பதிலளித்துள்ளனர்.

அண்ணாமலை பதிலடி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்த சம்பவம் பற்றி கூறுகையில், “பாஜகவினருக்கு அஞ்சலி செலுத்த எந்த தகுதியும் இல்லை அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் தியாகராஜன் கூறியிருக்கிறார். இதனை எப்படி பாஜக தொண்டர்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? இப்படி கூறியதற்காக அமைச்சர் பதவி விலகவேண்டும்.

நான் வன்முறையை கையில் எடுக்க கூடிய கட்சியை வழி நடத்தவில்லை. பாஜக தேசிய கலாச்சார சிந்தனை கொண்ட கட்சி. இது போன்ற சம்பவங்கள் நடக்க கூடாது என்றே கட்சியினருக்கு அறிவுறுத்துகிறேன். அமைச்சர் பாஜக தொண்டர்களை ஏன் சீண்டிப் பார்க்க வேண்டும்? எதற்காக அஞ்சலி செலுத்த தகுதியற்றவர்கள் என்று சொல்ல வேண்டும்? இதற்கு முதலமைச்சரிடம்தான் விளக்கம் கேட்க வேண்டும்”என்று அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியல் பற்றி பேசினால் நாறிப்போய்விடும்

மாநில பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி, அடுத்தடுத்து தனது டுவிட்டர் பதிவுகளில் திமுக மீது வசைமாரி பொழிந்து, பழைய சம்பவங்களையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இந்திரா காந்தியை மதுரையில் திமுகவினர் தாக்கி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அவர் நின்றபோது, அது குறித்து உங்கள் தலைவர் சொன்ன அரசியல் அசிங்கமும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனந்தநாயகியிடம் கேட்ட கேள்வியும், தி மு கவின் பண்பாடு குறித்தும், கலாச்சாரம் குறித்தும் பறை சாற்றும்.

பத்து வருடங்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் குண்டுகள் வெடித்து நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்து,கோடிக்கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களாக எல்லையை தவிர்த்து, குண்டு வெடிப்பே இல்லாத பாதுகாப்பான இந்தியாவை
நிர்வாகம் செய்துள்ள பாஜகவை பார்த்து “தகுதி இல்லையா” என்று கேட்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை, உரிமையும் இல்லை. திமுகவை சேர்ந்த பழனிவேல் தியாகராஜனுக்கு பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல் செய்ய வந்தது யார்? என்று தெரியும்.

உதயகுமாரை, ஒன்றரை லட்சம் இலங்கை தமிழர்களை,முத்துக்குமாரை,அனிதாவை வைத்து அரசியல் செய்த சாக்கடை யார் என்பது உலகிற்கு தெரியும். 55 ஆண்டு கால தமிழக அரசியலை பேசினால் நாறி விடும்” என்று சீறியுள்ளார்.

கொந்தளித்த எஸ்ஆர் சேகர்

மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக, மதுரை நகர போலீஸாரிடம், பாஜக நிர்வாகி ராஜ்குமார் என்பவர் அளித்த புகாரை சுட்டிக்காட்டி, மாநில பாஜக பொருளாளர் எஸ் ஆர் சேகர் தனது ட்விட்டர் பதிவில், “பாஜக தலைவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமின்றி, தனது கார் டிரைவரிடம் பாஜக தொண்டர்களின் மீது காரை ஏற்றி கொல்லும்படி அமைச்சர் தியாகராஜன் கூறியிருக்கிறார். அதனால்தான் அராஜக அமைச்சருக்கு பாடம் புகட்டியுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், இப்பிரச்சனைக்கு மூலகாரணமாக கருதப்படும் மதுரை மாவட்ட பாஜக தலைவராக பதவி வகித்து வந்த டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இனி பாஜகவில் அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அமைச்சரை சந்தித்த சரவணன்

முன்னதாக ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவதில் எழுந்த பிரச்சனை தொடர்பாக நள்ளிரவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து டாக்டர் சரவணன் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

இது பற்றி மாநில பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் பிரிவின் தலைவரான சி.டி.நிர்மல்குமார் தனது பதிவில், “நேற்று மதுரையில் நடந்த விரும்ப தகாத நிகழ்வை தூண்டியதே டாக்டர் சரவணன் தான். ஆதாயத்திற்காக மீண்டும் திமுகவில் இணையும் 1 வருட கனவு மற்றும் மதுரை அமைச்சர் மூர்த்திக்கு எதிரான ஒருங்கிணைப்பையும் தனது அடிப்பொடிகளை வைத்து நேற்று மதுரையில் நாடகம் நடத்தி விட்டார் சரவணன்” என்று காலணி வீச்சு சம்பவத்திற்கு முழுப்பொறுப்பும் டாக்டர் சரவணன்தான் என்றும் அவர் திமுகவில் மீண்டும் இணைவதற்காக இப்படியொரு நாடகத்தை திட்டமிட்டு நடத்தி இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

திமுக – பாஜக பேச்சுக்கு முடிவு

அரசியல் விமர்சகர்கள் கூறும் போது, “தமிழக நிதியமைச்சர் தியாகராஜனின் கார் மீது
காலணி வீச்சு தொடர்பாக திமுக, பாஜக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை இப்போதைக்கு ஓய்வது மாதிரி தெரியவில்லை. இதனால் திமுக அரசு சமீபகாலமாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பக்கமாக சாய்கிறது என்ற பேச்சுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அதனால் அவருடைய எதார்த்த பேச்சு பற்றி எப்போதுமே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டலடிப்பது உண்டு. அதனால் திமுகவினர் அண்ணாமலை மீதும், பாஜகவினர் தியாகராஜன் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை. இந்த மோதல் போக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

இனிதான் ஆட்டம் ஆரம்பம்

இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் 48-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெற உள்ளது.

இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் திமுக அரசு தரப்பில் எந்த மாதிரியான கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது என்பதை பொறுத்து மத்திய அரசின் மீது அது காட்டும் வீரியம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்” என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Views: - 174

1

0