அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
25 September 2020, 8:23 pmசென்னை : உடல்நலக்குறைவால் காலமானா பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.
மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. அஞ்சலிக்கு பிறகு, நாளை தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவரது உடல் தாமரைப்பாக்கம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரும் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்,” என அறிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.