ஒரே நாளில் 21 பாடல்களை பாடி சாதித்த எஸ்.பி.பி., : பன்முக திறமை கொண்ட நாயகனின் காலம் போற்றும் சாதனைகள்..!
25 September 2020, 5:00 pmசென்னை : மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உயிர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், அவரது பாடல்களும் சாதனைகளும் என்றும் நினைவில் இருந்து நீங்காது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் குணமடைய வேண்டும் என்று உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களும், பிரபலங்களும் பல்வேறு கட்ட பிரார்த்தனைகளை முன்னெடுத்தனர்.
மீண்டு வந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி.பி.யின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, சினிமா பிரபலங்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1966ம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாத ராமனா என்னும் தெலுங்கு படத்தில் கே.ஏ. கோதாண்டபாணியின் இசையில் முதல் பாடலை பாடினார்
அதிக பாடல்களை பாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
17 மொழிகளில் 41,000க்கும் கூடுதலான பாடல்களை பாடியுள்ளார்.
ஏக் துஜே கேலியே படத்தின் வெற்றிக்கு பின் அவர் மும்பையில் ஒரே நாளில் தமிழ், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் 21 பாடல்களை பாடிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
சிறந்த பின்னணி பாடகருக்காக 6 முறை (1979, 1981, 1983, 1988, 1995, 1996) தேசிய திரைப்பட விருதை வென்றுள்ளார்.
மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
பாடகர், இசைமைப்பாளர், டப்பிங் கலைஞர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.