அணில்களால் தமிழகத்தில் மின்தடை : மின்துறை அமைச்சரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

23 June 2021, 2:47 pm
anilum - balajiyum - updatenews360
Quick Share

தமிழக மின்துறை அமைச்சராக பதவி வகிக்கும் 46 வயது செந்தில் பாலாஜியை அரசியல் வட்டாரத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இவர்தான் செந்தில் பாலாஜியா..?

20-வது வயதில் 1995-ல் திமுகவில் சேர்ந்த அவர் 2000-ல் அதிமுகவில் இணைந்தார். 2006, 2011, 2021 என 3 தேர்தல்களில் கரூர் தொகுதியில் இருந்தும் 2016 தேர்தல் மற்றும் 2019 இடைத்தேர்தலில்
அரவக்குறிச்சி தொகுதியில் இருந்தும் அவர் தமிழக சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2011-ல் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் செந்தில் பாலாஜி 4 ஆண்டுகள் போக்குவரத்துதுறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர் 2015-ல் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

Senthil Balaji - Updatenews360

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். அப்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அதிமுக எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். அதன்பிறகு 2018-ல் திமுகவுக்கு திரும்பினார்.

இந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, “ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற அடுத்த 5-வது நிமிடத்தில் அனைவரும் ஆற்றுக்குச் சென்று மணல் அள்ளலாம். எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள். அப்படி தடுத்தால் அவர்கள் அங்கே இருக்க மாட்டார்கள்” என்று அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, குறிப்பிடத்தக்கது.

ஜெ., ஆட்சியில் மின்மிகை மாநிலம் :

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தது முதலே, மாநிலத்தின் பல பகுதிகளிலும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அதிமுக அரசு தான் என்று தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி வருகிறார்.

அதிமுக ஆட்சி காலத்தில் மின் கம்பங்கள், மின்மாற்றிகளை முறையாக பராமரிக்காததால்தான்
மாநிலத்தில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

Minister Thangamani - Updatenews360

இதற்கு முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி பதிலளித்தபோது,”கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபடி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினோம். மத்திய அரசின் அறிவிப்பிலும் இது இடம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு நிமிடம் கூட மின்தடை ஏற்படாத வகையில் பராமரிப்பு பணிகளை எங்கள் ஆட்சி காலத்தில் மேற்கொண்டோம்.

திமுக அரசு பதவியேற்று 10 நாட்களில் மின் வினியோகத்தைச் சீரமைப்போம் என்றனர். தற்போது பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. மே 7-ம் தேதியில் இருந்து மின்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை. அதனால்தான் தற்போது தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அமைச்சர் தனது துறையை முழுமையாக கவனிக்கவில்லை.
அவர் தமிழகத்தில் மின்தடையைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் ஏற்கனவே இருந்த அதிமுக அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்” என்று குறிப்பிட்டார்.

சென்னையிலும் மின்தடை ஏன்..?

பொதுவெளியில் ஊடகங்கள் மூலம் நடந்த இந்த விவாதம் தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அப்போதும் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்தடைக்கு முந்தைய அதிமுக அரசுதான் காரணம் என்று குறை கூறினார்.

tneb-Updatenews360

அதற்கு பதிலளித்த தங்கமணி, “9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். சென்னையில் புதைவடம் மூலமாகத்தானே மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனாலும் மின்தடை ஏன் ஏற்படுகிறது? எந்த மாநிலமும் சொந்தமாக மின்சாரத்தை தயாரித்து மின்மிகை மாநிலமாக முடியாது” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த ஒரு கருத்து பெரும் கேலிபேசும் பொருளாக மாறிப்போனது.

அப்படி அவர் என்னதான் சொன்னார்? மின் தடை பற்றி அவர் விளக்கம் அளித்தபோது, “கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மக்கள் வீடுகளிலேயே இருப்பார்கள். அதனால் முதலமைச்சர் மின்தடையே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு இருக்கிறார்.

அணிலும்… மின்தடையும்…

சில இடங்களில் செடிகள் வளர்ந்து மின் கம்பிகளில் மோதும்போது அதன் மீது அணில் ஓடுகிறது. அதனால் 2 கம்பிகளும் ஒன்றோடு ஒன்றாக உரசுவதால் மின்தடை ஏற்படுகிறது”என்று குறிப்பிட்டார்.

அவ்வளவுதான். நெட்டிசன்களுக்கு கிண்டல் செய்ய லட்டு போல் காரணம் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன? மீம்ஸ்களை போட்டு கலாய்த்து தள்ளி விட்டனர். “இரவிலும் மின்தடை ஏற்படுகிறதே, அணில்கள் தூக்கம் வராமல் அந்த நேரத்திலும் கம்பிகளில் ஏறி விளையாடுகிறதோ?” என்று சில குறும்புக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

twitter squirrel - updatenews360

இன்னும் சிலர் “தமிழக மக்கள் மின் தடையால் அவதிப்படுவதற்கு காரணமான அணில்கள் உடனடியாக பதவி விலகவேண்டும்” என்று வேடிக்கையாக கூறியிருக்கின்றனர்.

சிலர், மின் தடையை ஏற்படுத்தும் அணில்களை உடனே கைது செய்ய வேண்டும் என கலாய்த்துள்ளனர். டிரெண்டிங்கிலும் இந்த அணில் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. இதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் பிடித்துக்கொண்டார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், “மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி – விஞ்ஞானம்…. விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?” என்று கிண்டல்
செய்துள்ளார்.

தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி, தான் கூறியது உண்மை என்று விளக்கம் அளித்து மின்கம்பங்களில் அணில் இருப்பதைப்போல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “எங்கோ அபூர்வமாக நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை அவர் மிகைப்படுத்தி செய்தியாளர்களிடம் கூறியதுதான் கேலியாக பேசப்படுவதற்கு காரணமாகிவிட்டது. அதேநேரம் சென்னையை பொறுத்தவரை புதை வடங்கள் மூலம்தான் மின் வினியோகம் நடக்கிறது. அப்படி இருந்தும் ஏன் சென்னையில் மின்தடை ஏற்படுகிறது? என்று அதிமுகவும் பாமகவும் எழுப்பிய கேள்விக்கான காரணத்தை அமைச்சரால் தெளிவாக சொல்ல முடியவில்லை” என்று குறிப்பிட்டனர்

Views: - 153

0

0