நீச்சல் குளத்தில் குளித்தும்… கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டக்காரர்கள் ரவுசு… இலங்கை வெடித்த பிரளயம்.. கப்பலில் தப்பியோடிய கோத்தபய?

Author: Babu Lakshmanan
9 July 2022, 2:55 pm
Quick Share

கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோத்தபயா ராஜபக்சே கப்பல் மூலம் தப்பியோடிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், எரிபொருள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் மக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டீசல், பெட்ரோல் வாங்க பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையாக காத்து கிடந்தனர். இதனையடுத்து, இதையடுத்து, மக்களின் போராட்டத்தால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சராக இருந்த அவரது மகன் உள்ளிட்ட பலரும் பதவி விலகி தப்பியோடினர். நிலைமையை சமாளிக்க புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். ஆனால், அதிபர் கோத்தபயா மட்டும் பதவி விலக மறுத்து வந்தார்.

இருப்பினும், பொருளாதார நெருக்கடி தீராததால், கோத்தபயாவும் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. அவர் பதவி விலகக்கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இதற்காக பஸ்கள், ரயில்கள் மூலம் ஆயிரகணக்கானோர் தலைநகர் கொழும்புவில் கூடினர். அவர்கள் ஒன்று சேர்ந்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பாதுகாப்பு படையினர் வீசினர்.

ஆனால், அதனையும் தாண்டி போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து அதனை கைப்பற்றி உள்ளே நுழைந்தனர். அப்போது, அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய ஆம்புலன்ஸ் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பிச் சென்றதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தும், அதிபருக்கு சொந்தமான சொகுசு கார்களை எடுத்து ஓட்டியும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அதேவேளையில், கோத்தபய ராஜபக்சே, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு கப்பலில் தப்பிச் செல்வது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், உண்மையில் அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அவர் விமானம் தப்பிச் சென்றுவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.

போராட்டத்தால் இலங்கையே ஸ்தம்பித்து வரும் நிலையில், இலங்கை – ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் மைதானத்தை சுற்றி வலம் வருவதும், இதனால், கிரிக்கெட் வீரர்கள் சில நிமிடங்கள் போட்டியை நிறுத்தியது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, பதவியை ராஜினாமா செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 102

0

1