மீண்டும் மீண்டும் ராஜபக்ஷே பிரதர்ஸ்…! மீண்டும் மலருமா இந்தியா – இலங்கை உறவு?

11 August 2020, 12:24 pm
mahinda rajabhakse 3- updatenews360
Quick Share

இதோ, நான்காவது முறையாக மகிந்த ராஜபக்ஷே இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அதுவும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று பிரதமராகி இருக்கிறார். அகில இந்தியாவின் நேரு குடும்பத்தைப் போலவும், தமிழகத்தின் கருணாநிதி குடும்பத்தைப் போலவும் ராஜபக்ஷே குடும்பம் இலங்கை வரலாற்றை முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு விட்டது.

இதோ அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசாக மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷே தயாராகி வருகிறார்.

தம்பி கோத்தபய ராஜபக்ஷே ஜனாதிபதி , அண்ணன் மகிந்த ராஜபக்ஷே பிரதமர், இன்னும் எல்லா அதிகார மட்டத்திலும் அவர்கள் குடும்பத்தினரே! மகிந்த ராஜபக்ஷேவுக்கு இந்தளவு மக்கள் ஆதரவு கொடுத்திருப்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

உலகின் ஒவ்வொரு நாடும் உறுதியான தலைமையையே விரும்புகிறது என்பதே இவ்வெற்றிகள் நமக்குச் சொல்லும் பாடம்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இன்று நேற்றல்ல; இதிகாச காலத்திலிருந்தே தொடர்புகள் உண்டு. அந்தத் தொடர்பு நேரு காலம் வரையிலும் கூடத் தொடர்ந்தது.

முன்னாள் அதிபர் சிரிமாவோ பண்டாரநாயகாவின் கணவரும், சந்திரிகாவின் தகப்பனாருமான பண்டாரநாயகா இலங்கை பிரதமராக இருந்த போது, மர்மமான முறையில் இறந்து போனார். அந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க உலகின் தலையாய துப்பறியும் அமைப்பான ஸ்காட்லண்ட் யார்ட் அழைக்கப்பட்டு, அவர்களால் கண்டுபிடிக்கப்படாமல் போகவே, அடுத்ததாக தமிழ்நாடு போலீஸ் அழைக்கப்பட்டது.

தமிழ்நாடு போலீஸ் மிக அழகாக அந்த பிரதமர் பண்டார நாயகாவைக் கொன்றது யார் என்று கண்டுபிடித்து இலங்கை அரசுக்கு ரிப்போர்ட் தந்தது. இப்படி நேரு காலம் வரையிலும் கூடத் தொடர்ந்த உறவு பின்னாளில் பெரிதும் சீர்குலைந்தது.

அதற்கு இலங்கையில் எழுந்த தமிழர் பிரச்சினை மட்டுமல்ல; இலங்கையின் சீன, பாகிஸ்தானிய உறவுகளும் ஒரு காரணம். இன்று, சீனா மிக அழுத்தமாக இலங்கையில் காலூன்றி விட்ட நிலையில் நம்மோடு இலங்கையின் உறவு எப்படி இருக்கும் என்பதை ஆராய்வோம்.

மகிந்த ராஜபக்ஷேவின் இத்தகு வெற்றிக்கு முதல் காரணம், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான அவரது உறுதியான யுத்தத்தின் வெற்றி, அதற்கு இந்தியாவின் பங்களிப்பை அவரால் புறக்கணித்து விட முடியாது. காரணம், அவருக்கு ஆயிரம்தான் சீனா உதவி செய்தாலும், விடுதலைப் புலிகள் மட்டும் இந்திய ஆதரவைப் பெற்றிருந்தால், ராஜபக்ஷேவால் ஒன்றும் செய்திருக்க முடியாது. விடுதலைப் புலிகளின் தவறான இந்திய எதிர்ப்பே, அவர்களை வெல்லக் கிடைத்த ஆயுதமாக ராஜபக்ஷேவிற்குப் பயன்பட்டது.

இந்த நேரத்தில் இந்திரா இருந்திருந்தால், ராஜபக்ஷேவைக் கட்டுக்குள் வைக்க விடுதலைப் புலிகளை விட வலுவான இயக்கத்தை இலங்கையில் இந்திரா உருவாக்கி இருந்திருப்பார். இந்திரா காந்தியைப் போன்ற ஒரு பிரதமர் இந்தியாவில் இல்லாதது ராஜபக்ஷேவின் பேரதிர்ஷ்டம்.

ஆனால், இலங்கையின் “கடல்” நிலவரமும் சரி, “கடன்” நிலவரமும் சரி, அந்நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக தற்போது மாறியுள்ளன.

ஜப்பான், ரஷ்யா, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கை பெற்ற கடனை விட அபாயமான கடன், சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற கடன்தான். ஹம்பன்கோட்டா துறைமுகத்தைக் கட்டமைக்கும் பணியைச் செய்து தர இலங்கை முதலில் இந்தியாவிடம்தான் கோரியது.

ஆனால், “அந்தத் துறைமுகத் திட்டம் வெற்றிகரமாக இருக்காது” என்று சொல்லி இந்தியா அதை நிராகரித்து விட்டது. பிறகு சீனாவைக் கேட்டவுடன், சீனா பெரும் பொருட்செலவில் அதை கட்டமைத்துக் கொடுத்தது. அந்தக் கடனைச் செலுத்த முடியாத இலங்கை அந்தத் துறைமுகத்தை சீனாவுக்குக் கடைசியில் 99 வருடக் குத்தகைக்கு கொடுத்துவிட்டது.

இதனால் “தம் நாட்டு எல்லைப் பகுதி முனையிலுள்ள இடத்தைத் தன் எதிரி நாட்டுக்குத் தாரை வார்த்து விட்டதே இலங்கை” என்று இந்தியாவிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொண்டது. சீன நெருக்கத்தின் காரணமாக ஜப்பான் போன்ற நாடுகளின் அதிருப்தியையும் சம்பாதித்து விட்டது இலங்கை.

mahinda rajabhakse 4- updatenews360

உள்நாட்டில் தற்போதைய தேர்தலில் ரணில் கணிசமான இடங்களைப் பெற்றிருந்தால் கூட ராஜபக்ஷே கவலைப் பட்டிருக்க மாட்டார். ஆனால், ரணிலிடமிருந்து பிரிந்துபோன சஜித் பிரேமதாசா 55 இடங்களைப் பெற்றிருப்பதை ஓர் அபாய சிக்னலாகவே கணிக்கிறார் ராஜபக்ஷே.

உள்கட்சியிலாவது நிம்மதியான போக்கு இருக்கிறதா என்றால் அதற்கும் இடமில்லை. தன் மகன் நாமல் ராஜபக்ஷேவைத் தனது அரசியல் வாரிசாக நியமிப்பதில் ராஜபக்ஷேவின் தம்பியும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தபய ராஜபக்ஷேவிற்கு விருப்பமில்லை என்பதே ராஜபக்ஷேவின் இப்போதைய இடர்நிலை. இதனால் கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பம்.

கடல் அழுத்தம் –
கடன் அழுத்தம் –
உள்நாட்டு அழுத்தம் –
உள்கட்சி அழுத்தம் –
உள்குடும்ப அழுத்தம் –

இப்படி அழுத்தங்களோடு அரியணை ஏறும் ராஜபக்ஷே, ஏற்கனவே சீனத்தோடு சிந்து பாடி வந்தவர்தான் என்றாலும் கூட, இன்று உலகமே சீனத்திற்கு எதிராக ஓரணியில் திரளுகையில், தன் சீன மோகத்தைத் தொடர்வாரா என்பது கேள்விக்குறி.
அவருக்கு இந்திய, அமெரிக்க, ஜப்பானிய அரவணைப்பே இப்போதைக்குப் பாதுகாப்பு. இதை உணர்ந்து செயல்பட்டால் இலங்கை மேலெழும். இல்லையெனில் இலங்கையின் கதி அதோகதி!