இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க முடிவு

Author: Babu Lakshmanan
11 March 2022, 9:39 am
Quick Share

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடலோர காவல் படை கைது செய்தது.

இந்திய கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான வஜ்ரா ரோந்து கப்பல் சா்வதேச கடல் பகுதியில் 120 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து இலங்கையைச் சோ்ந்த ஒரு விசைப்படகில் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்திய கடலோர காவல் படையினர், அவா்களை எச்சரித்தபோதிலும் இலங்கை மீனவர்கள் வெளியேறாமல் தொடர்ந்து தங்களது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேரையும், அவா்களது படகையும் கடலோர காவல் படையினா் பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மீனவா்கள் 5 பேரும் இலங்கை புத்தளம் பகுதியைச் சோ்ந்த ஜூட் சம்பத், வர்ணகுல சூரிய வொர்பெர்ட் கின்ஸ்லி பொ்னான்டோ, ரணில் இந்திகா, யுவன் பிரான்சிஸ் சுனில் பிஹாரேரு, அசங்கா ஆண்டன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் 5 பேரையும் கடலோர காவல் படையினா் நேற்று தூத்துக்குடி தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்திற்க்கு அழைத்து வந்தனர். அவர்களிடம், கியூ பிரிவு போலீசார், சுங்கத் துறையினர், மீன்வளத் துறையினர், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு 5 மீனவா்களும் இன்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவாா்கள் என கடலோர காவல் படையினா் தெரிவித்தனா்.

Views: - 344

0

0