என் மீதும் தங்கமணி மீதும் ஸ்டாலின் கோபம் கொள்ள இது தான் காரணம்..! அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொளேர்..!

20 January 2021, 12:18 pm
SP_Velumani_UpdateNews360
Quick Share

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களால், ஓபிஎஸ் அதிமுகவை விட்டு வெளியேறிய நிலையில், ஸ்டாலின் மூன்றே மாதத்தில், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்தபோது, அதற்கு வாய்ப்பில்லாமல் செய்ததால் தான், திமுக தலைவர் ஸ்டாலின் தன் மீதும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மீதும் தொடர்ந்து வெறுப்பை உமிழ்ந்து வருகிறார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பாக புதிய அலுவலகம் இன்று காங்கேயம் சாலையில் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் அதிமுக பொறுப்பாளரான எஸ்.பி.வேலுமணி இதில் கலந்து கொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் அதிமுக தொண்டர்களிடையே உரையாற்றியது பின்வருமாறு :-

“திமுக தன்னால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளையே தொடர்ந்து அளித்து வருகிறது. அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால் அமெரிக்காவின் பட்ஜெட் கூட பத்தாது. 

என்மீதும் அமைச்சர் தங்கமணி மீதும் திமுக தலைவர் ஸ்டாலின் 2016-17’இல் இருந்து தான் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதற்கு காரணம், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைத்த ஸ்டாலினின் கனவைத் தகர்த்து தொடர்ந்து எடப்பாடியார் முதல்வராக நீடிக்க பக்கபலமாக இருந்தது தான்.

ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை இணைத்து அதிமுக நிலையான ஆட்சியை வழங்குவதற்கு உறுதுணையாக இருந்தோம். மேலும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் இணைக்க அயராது உழைத்தோம்.

இந்த கோபத்தில் தான், ஸ்டாலின் எங்கள் இருவர் மீதும் தொடர்ந்து பொய்யான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆனால் 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில் துணை முதல்வராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த ஸ்டாலின் தமிழகத்திற்கு எந்தவொரு நன்மையையும் செய்யவில்லை.

ஆனால் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது, செய்த மக்கள் நல பணிகளுக்காக இதுவரை மத்திய அரசிடமிருந்து 143 விருதுகளை பெற்றுள்ளோம். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவார்.

நமது பொது எதிரி திமுக என்பதை உணர்ந்து, எடப்பாடியாரை மீண்டும் முதல்வராக்க நாம் அனைவரும் சகோதரர்கள் போல் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும்.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
சட்டப்பேரவை துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்எல்ஏக்கள் குணசேகரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0