டிசி இன்றி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: கட்டணம் வசூலிக்க முடியாமல் திணறும் தனியார் பள்ளிகள்: வாழ்வாதாரம் இழந்த ஆசிரியர்கள்

6 July 2021, 10:07 pm
Quick Share

கடந்த ஆண்டைப் போலவே, இந்த வருடமும் தனியார் பள்ளிகளில் இருந்து, அரசுப் பள்ளிகளுக்கு மாறும் மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், கொரோனா 2-ம் அலையால் தமிழகத்தில் பிறப்பிக்கபட்ட முழு ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்தோர் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதிகம் என்பதுதான்.சென்ற வருடம் கொரோனா முதல் அலையில் வேலைவாய்ப்பை இழக்காதவர்கள் கூட இந்த முறை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி விட்டனர். இதனால் குடும்பத்திற்கு போதிய வருமானமின்றி தவித்த பெற்றோர்கள், தனியார் பள்ளிகளில் படித்துவந்த தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் நிலை உருவானது.

தனியார் பள்ளிகளில் 25 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் ரூபாய் என கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்கள் தற்போது அரசு பள்ளிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2 குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைத்தவர்கள் தங்கள் குடும்பத்தின் எதிர்கால பொருளாதார சூழல் கருதி,அரசு பள்ளிகளுக்கு மாற்றுகின்றனர்.தனியார் பள்ளிகளில் இருந்து மாறுவோர் 8-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் சேர்க்க மாற்றுச் சான்றிதழ் தேவையில்லை, ஆதார் அட்டை இருந்தாலே போதும் என்ற பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவு பெற்றோருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.

ஏராளமானோர் அரசு பள்ளிக்கு மாறிவரும் நிலையில் கல்விக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே டிசி தரப்படும் என தனியார் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.அதேநேரம் இதனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் அவர்களது பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களும் பெரும் பாதிப்பை சந்திப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில்தான் தமிழக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாநிலம் முழுவதும் உள்ள சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்த ஒரு சுற்றறிக்கையில் பல்வேறு கிடுக்குப்பிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.

அதில், ‘அங்கீகாரம் புதுப்பிக்காத பள்ளிகள் உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கை மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணிகளில் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.ஐகோர்ட் தீர்ப்பின்படி இந்த ஆண்டு தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்விக்கட்டணத்தை வசூலிக்கவேண்டும். சீருடை, பேருந்து உட்பட இதர கட்டணங்களை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை இணையதள வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது.அதேபோல், மாணவர் சேர்க்கை விவரங்களை பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து எவ்வித புகார்களும் வராதவண்ணம் பள்ளிகள் செயல்படவேண்டும். மீறினால் துறை சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.கல்விக் கட்டணத்தை 40 சதவீதம், 35 சதவீதம் என இரு தவணைகளில் பெறவேண்டுமென்றும் தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது.டிசி இல்லாமல் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பது மற்றும் கல்விக் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பிறக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மேலும் தங்களது நிலைமையை படு சிக்கலாக்கி விட்டதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புலம்புகின்றனர்.

“8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எத்தனைபேர் எங்களது பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை.எனினும், ஒவ்வொரு பள்ளியிலும் 60 முதல் 75 மாணவர்கள் வரை அரசு பள்ளிகளுக்கு மாறி இருக்கலாம் என்று கருதுகிறோம். கொரோனா காலம் என்பதால் நாங்களும் கல்விக் கட்டணம் பெறுவதில் மாணவர்களின் பெற்றோருக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. இதனால் சுமார் 60 சதவீத மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்தாமலேயே அரசு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். அந்தப் பணத்தை எப்படி வசூலிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்.

இதனால் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் முழுச்சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் குறைந்த பட்சம் 15 ஆயிரம் ரூபாய் கட்டண பாக்கி என்றாலும் சுமார் 10 லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற இழப்பை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 5000 தனியார் பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகள் சந்தித்துள்ளன. ஏற்கனவே தமிழகத்தில் தனியார் நடத்தி வந்த 500க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு விட்டன. அதில் வேலை பார்த்த ஆசிரியர்கள் எல்லாம் அன்றாடம் கிடைக்கும் கூலி வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து நிற்கிறோம்” என்றனர்.தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நிலையோ, இன்னும் பரிதாபகரமாக உள்ளது.குறிப்பாக, தனியார் பள்ளிகளில் 70% வரை பட்டமேற்படிப்பு படித்த பெண்கள் ஆசிரியர்களாக பணிபுரிவது அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டுள்ளது.இந்த ஆசிரியைகள் கூறும்போது, “ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதால், பள்ளி நிர்வாகத்தினர் பாதி சம்பளம்தான் தருகின்றனர். மாணவர்கள் முறையாக கல்விக் கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே அந்தச் சம்பளமும் கிடைக்கும். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில்தான்,

நாமும் தமிழகத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக இருந்திருக்கக்கூடாதோ, என்ற ஏக்கப் பெருமூச்சும் எழுகிறது. 10 வருட பணியில் தினமும் 8 மணிநேர கடும் உழைப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம். எங்களது அதே தகுதி, சர்வீஸ் கொண்ட, நாங்கள் பார்க்கும் வேலையில் நான்கில் ஒரு பங்கு வேலையை மட்டுமே செய்யும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கோ மாதச் சம்பளம் 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய்! அதுவும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே வாங்குகிறார்கள்” என்று தங்களதுஆதங்கத்தை கொட்டினர்.

Views: - 236

0

0