‘ஏழை குடும்பத்தில் ஒரு மருத்துவர்’ : கண்ணீர் மல்க முதலமைச்சரின் காலில் விழுந்து நன்றி கூறிய மாணவியின் தந்தை..!! (வீடியோ)

18 November 2020, 7:30 pm
Quick Share

சென்னை : 7.5% உள்ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ஆணையை பெற்ற அரசு பள்ளி மாணவி ஒருவர், தனது தந்தையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலில் கண்ணீர் மல்க விழுந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பை பெற்ற முதல் 18 மாணவர்களுக்கு, சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார்.

அப்போது, திண்டுக்கல் மாவட்டம் நாகைய கோட்டையை அடுத்த புதுரோடு கிராமத்தைச் சேர்ந்த மாணவி, தனது தந்தையுடன் மேடைக்கு வந்தார். ஏழை குடும்பத்தினரும், டாக்டராகலாம் என்பதை செய்து காட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அந்த சமயம் மாணவியின் தந்தை மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

அவர் பேசியதாவது :- எனக்கு என்ன பேசுதரதுனே தெரியலைங்க, என் பிள்ளை பிறக்கும் போதே டாக்டர்னு நினைச்சேன். ஆனால், அரசு பள்ளிக் கூடத்துல படிக்கும் போது ஒவ்வொரு நாளும் அழுதிட்டு இருந்தேன். எப்படி உன்ன டாக்டர் ஆக்க போரேன்னு நினைச்சுட்டு இருந்தங்க. கூலி வேலைக்குதான் போயிட்டு இருக்கேன்.

ஐயா, 7.5% இடஒதுக்கீட்டை அறிவித்ததனாலே என் புள்ள இப்ப டாக்டருங்க. என் அப்பா, தாத்தா படிக்காதவங்க. என் புள்ளைக்கு டாக்டர் சீட் கொடுத்த ஐயா 100 வருஷம் நல்லா இருக்கனும். கடவுள் கிட்ட கேட்டு குடுக்காத இந்தக் காலத்துல, சாமி நீங்க கொடுத்துருக்கீங்க, ரொம்ப நன்றி ஐயா, வாழ்க்கையில மறக்கவே முடியாது,” எனக் கூறி விட்டு, கண்ணீருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர்.

Views: - 0

0

0