மாணவி சுவேதா கொலை சம்பவம்… தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை : ஓபிஎஸ் கவலை

Author: Babu Lakshmanan
23 September 2021, 6:24 pm
OPS - chennai murder - updatenews360
Quick Share

சென்னை : தாம்பரம் ரயில்நிலையத்தில் மாணவி சுவேதா கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில்‌ கடந்த பத்து நாட்களாக கொலைச்‌ சம்பவங்கள்‌அதிகரித்து வருவதைச்‌ சுட்டிக்காட்டி இன்று நான்‌ அறிக்கை வெளியிட்ட நிலையில்‌, தாம்பரம்‌ தனியார்‌ கல்லூரி மாணவி செல்வி சுவேதா, இன்று, தாம்பரம்‌ இரயில்‌ நிலையம்‌ வாயிலில்‌ கத்தியால்‌ பட்டப்‌ பகலில்‌ குத்தி கொலை செய்யப்பட்டார்‌ என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத்‌ துயரமும்‌, மிகுந்த மன வேதனையும்‌ அடைந்தேன்‌.

இதுபோன்ற கொலைச்‌ சம்பவங்கள்‌ தமிழ்நாட்டில்‌ அதிகரித்து வருவதும்‌, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகி வருவதும்‌ கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. இதுபோன்ற கொலைச்‌ சம்பவம்‌ பொதுமக்கள்‌ மத்தியில்‌, குறிப்பாக பெண்கள்‌ மத்தியில்‌ பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக்‌ கொலைச்‌ சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை உடனடியாக கைது செய்து, சட்டத்தின்முன்‌ நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத்‌ தர காவல்‌ துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌. கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட செல்வி சுவேதாவின்‌ குடும்பத்திற்கு என்‌ ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தினையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 291

0

0