தூய்மை நகரங்கள் பட்டியல் வெளியீடு..! தமிழக நிலைமை படுமோசம்..! இருபத்தைந்தில் ஒன்று கூட இல்லை..!
20 August 2020, 2:32 pmமத்திய அரசு 2020’ம் ஆண்டிற்கான இந்தியாவின் தூய்மை நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 25 நகரங்களின் பட்டியலில் இந்தூர் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ள நிலையில், இந்த பட்டியலில் தமிழக நகரங்கள் ஒன்று கூட இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கடந்த 2016’ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள நகரங்களை தூய்மையின் அடிப்படையில் வகைப்படுத்தி பட்டியலை வெளியிடுகிறது. முதல் வருடம் இந்த பட்டியலில் கர்நாடகாவின் மைசூரு நகரம் முதலிடத்தைப் பிடித்தது.
இதையடுத்து 2017’ம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2016’ம் ஆண்டில் அகில இந்திய அளவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் தமிழகத்தின் திருச்சி மூன்றாம் இடத்தையும், கோவை 18’ம் இடத்தையும் பிடித்து அசத்தியது.
2017’ம் ஆண்டு திருச்சி ஆறாவது இடத்திற்கு பின்தங்கியிருந்தாலும், கோவை இரண்டு இடங்கள் முன்னேறி 16’வது இடத்தை பிடித்தது. இதையடுத்து 2018’இல் திருச்சி மேலும் பின்தங்கி 13’ம் இடத்திற்கு இறங்கியது. அதே நேரத்தில் கோவை 16’வது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.
இந்நிலையில் கடந்த 2019’ம் ஆண்டில் திருச்சி 39’வது இடத்திற்கும், கோவை 40’வது இடத்திற்கும் பின்தங்கி, முதல் 25 இடங்களில் ஒரு தமிழக நகரம் கூட இல்லாத நிலையை உருவாக்கியது. இந்நிலையில் தற்போது 2020’ம் ஆண்டிலும் இந்த அவளை நிலை தொடர்ந்து நீடிக்கிறது.
ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தூய்மையான முதல் 25 நகரங்களின் பட்டியலிலும் இதே நிலையே உள்ளது. ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் முதல் 25 இடங்களில் 20 இடங்களை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்து அசத்தியுள்ளது.
தமிழகம் சந்தோசப்பட ஒரே ஒரு விஷயமாக, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில், தூய்மைப் பணிகளுக்காக புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக சென்னை பெருநகரத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.