ஆளுநர் ரவிக்கு சு.சாமி திடீர் கடிதம் : திக்கு முக்காடும் திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2022, 8:06 pm
Su Samy Dmk Warn - Updatenews360
Quick Share

திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக ஏதாவது ஒரு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபடுவது பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமியின் வழக்கம்.

திமுக ஆட்சியை கலைத்த சு.சாமி!!

1991-ம் ஆண்டு ஜனவரி மாதம் திமுக ஆட்சி கலைக்கப்பட்டதற்கு அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகரின் மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியசாமிதான் மூல காரணம்.

திமுகவுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது. அதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது எனக் கூறி அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி கருணாநிதி தலைமையிலான அன்றைய திமுக அரசை கலைத்தார். இதனால் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவருடைய விஷயத்தில் திமுக தலைமை மிகுந்த எச்சரிக்கையாகவே இருக்கும்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் 3-தேதி திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ்காந்தி, பிராமண சமூகத்தினர் குறித்து பேசியதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் பேசுபொருளாக ஆனது.

திமுகவை திகைக்க வைத்த கடிதம்

இதனால் கொதித்துப் போன சுப்பிரமணியசாமி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவசர கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில் “தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுகவின் செயலாளர் ஒருவர், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கொள்கைகளை மீறியுள்ளார். பெரியார் சொன்னதைப் போலப் பிராமணர் சமூகம் இனப்படுகொலை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். 

இந்த அச்சுறுத்தல் தமிழகத்தில் உள்ள பிராமண சமூகத்தினரின் அடிப்படை உரிமைகளை நேரடியாகப் பாதிக்கிறது. தேர்தலில் பிராமணர்கள் வாக்களிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் தேர்தலில் திமுக எளிதில் வெற்றி பெறும் சூழல் ஏற்படும். எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திமுகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், உதய சூரியன் சின்னத்தையும் முடக்கவேண்டும். இது அவசரமான விஷயம், திமுகவினரை நீதியின் முன் நிறுத்த ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. என்றபோதிலும், இந்த விவகாரத்தை சுப்பிரமணியசாமி கைவிடவில்லை போலிருக்கிறது.

ஆளுநருக்கு கடிதம்

இந்த நிலையில்தான் திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அவர் திடீரென்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை வைத்தவர் இப்போது திடீரென்று தமிழக ஆளுநருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இப்படி எழுதி இருப்பதன் மூலம் இப்பிரச்சினையை, அவர் பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான ஒரு முயற்சியாகவே இது அரசியல் சட்ட வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது.

சு.சாமி எடுத்த அதிரடி முடிவு

சரி, தமிழக ஆளுநர் ரவிக்கு எழுதிய கடிதத்தில் சுப்பிரமணியசாமி அப்படி என்னதான் கூறியிருக்கிறார்?…

“திமுகவின் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ஆர்.ராஜீவ்காந்திக்கு எதிராக நான் தாக்கல் செய்ய உள்ள எனது குற்றப் புகாரை இத்துடன் இணைத்துள்ளேன். இந்த புகாரை தாக்கல் செய்வதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-ன் பிரிவு 196-ன் கீழ் உங்கள் அனுமதி தேவைப்படுகிறது. 2022 ஜூன் 3-ம் தேதி தமிழ் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று தனது சொந்த ட்விட்டர் கணக்கின் வழியாக விளம்பரப்படுத்தியதன் மூலம், ஆர்.ராஜீவ் காந்தி இணைக்கப்பட்டுள்ள இந்த கிரிமினல் புகாரில் இருந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களைச் செய்துள்ளார் என்பது முதன்மையாகத் தெரிகிறது.

சுப்பிரமணியசாமிக்கு எதிராக மன்மோகன் சிங், வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உங்கள் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அதன்படி இதில் வழக்குத் தொடர அனுமதி வழங்குவதற்கான கொள்கைகளை நீதிமன்றம் விளக்கியுள்ளது. எனவே, பொது அமைதியைச் சீர் குலைக்கும் வகையில், நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, மேற்படி புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குத் தொடர, தயவுசெய்து அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சுப்பிரமணியசாமி அப்பதிவுடன் “திரு.ஸ்டாலின் அவர்களே, பிராமணர்களிடையே கடினமான மனிதர்களும் இருக்கிறார்கள் என்று உங்கள் ராஜீவ் காந்தியிடம் சொல்லுங்கள். குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக ஆளுநருக்கு சுப்பிரமணியசாமி எழுதிய இந்தக் கடிதம், வீரியம் மிகுந்த ஒன்றாகவே தென்படுகிறது” என டெல்லியில் அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

திமுக செய்தி தொடர்பாளருக்கு செக்

“திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்திக்கு எதிராக ஒரு கடுமையான புகாரை தமிழக காவல் துறையிடம் அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க மாதக்கணக்கில் ஆகலாம்.

போலீஸ் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கீழ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால் அதன் மீது தீர்ப்பு வருவதற்கும் சிறிது காலம் பிடிக்கும். ஆனால் வழக்கு தொடுப்பதற்கு ஆளுநர் அனுமதி வழங்கிவிட்டால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும், இதற்கு திமுக தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் வரும். அது திமுகவிற்கு தர்மசங்கட நிலையை உருவாக்கும். அதுமட்டுமின்றி,தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக சுப்பிரமணியசாமி அளித்த புகார் உண்மைத்தன்மை கொண்டது என்பதும் உறுதி செய்யப்படலாம்.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான், ஆளுநர் ரவிக்கு அவர் கடிதம் எழுதி இருப்பதாக தோன்றுகிறது. மேலும் பல்வேறு விஷயங்களில் ஆளுநருடன் மோதல் போக்கை திமுக அரசு கொண்டிருப்பதால் திமுக செய்தி தொடர்பாளர் மீது வழக்கு தொடர ஆளுநர் ரவி எளிதில் அனுமதி கொடுத்து விடுவார் என்று சுப்பிரமணியசாமி உறுதியாக நம்புகிறார்.

ஒருவேளை ஆளுநர் அனுமதி தராவிட்டால், அதைக் காரணம் காட்டி நேரடியாக உயர்நீதி மன்றத்திலோ, உச்சநீதி மன்றத்திலோ சுப்ரமணியசாமி வழக்கு தொடர வாய்ப்பும் உள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து, அவருக்கு தண்டனை வாங்கி கொடுத்து விட்டால் அதன் மூலம் தேசிய அளவில் திமுகவுக்கு அவப்பெயரை உருவாக்கலாம் என்பது சுப்பிரமணியசாமியின் கணக்காக இருக்கலாம்.

குருமூர்த்தி போல கோழைகள் அல்ல

அதேநேரம் குருமூர்த்தி போல் அனைவரும் கோழைகள் அல்ல என்று கோபமாக பாய்ந்து இருப்பதன் மூலம், இப்பிரச்சினையை ஆடிட்டர் குருமூர்த்தி, கண்டுகொள்ளாமல் மௌனமாகி விட்டார் என்பதை அவர் கண்டித்தும் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் +2 மாணவிகளுக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு ஆசிரியர் மீது புகார் கூறி நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஆனால் திராவிடர் கழகம் போன்ற பல்வேறு அமைப்பினர் பள்ளி நிர்வாகத்தை தமிழக அரசு உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சர்ச்சையை உருவாக்கினர். அப்போது சுப்பிரமணியசாமி தான் அந்தப்பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்தார்.

திமுக ஆட்சி கலையும் சூழல்?

நீண்ட காலத்துக்குப் பின், திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பெரிய மெஜாரிட்டியில் வெற்றி பெற்று வரவில்லை. அதனால், எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும் செயல்பட வேண்டும். இல்லையென்றால், ஆட்சியை கலைக்கும் சூழல்தான் உருவாகும். திமுக அரசு, இந்த விஷயத்தில் உள்நோக்கம் கொண்டு பள்ளி நிர்வாகத்தை நசுக்க நினைத்தால், ஆட்சியை கலைப்பதை தவிர, வேறு வழியில்லை. கட்டாயம் அதை செய்து காட்டுவேன் என்று அதிரடியும் காட்டினார். அதன்பிறகு பள்ளி நிர்வாகத்தை கைப்பற்ற வேண்டும் என்ற கோஷத்தை முன் வைத்தவர்கள் அப்படியே, கப்சிப் ஆகிப்போனார்கள்.

எனவே திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி பிராமணர்கள் பற்றி தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தையும் சுப்பிரமணியசாமி லேசில் விட்டுவிட மாட்டார் என்றே தோன்றுகிறது” என்று அந்த சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Views: - 511

0

0