இலங்கை கடற்படை அத்துமீறல்….மீனவர்கள் படுகொலை: மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம்..!!

3 February 2021, 1:05 pm
parliement - updatenews360
Quick Share

புதுடெல்லி: இலங்கை கடற்படையின் அத்துமீறல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் திமுக, அதிமுக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக மீனவர்களை 2020 டிசம்பர் முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து ஜனவரி18ல் சென்ற மீனவர்கள் படகை இலங்கை கடற்படை கப்பல் மோதி மூழ்கடித்தது. இதில் நான்கு மீனவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் இன்று திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் மீனவர்கள் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கொன்றுவிட்டதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இலங்கை கடற்படையால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழிலை கைவிடுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு அதிமுக எம்பி தம்பிதுரையும் கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.

இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்ததாகவும், மீனவர்கள் கொல்லப்பட்டது ஏற்க முடியாத நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டதாகவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0