கலாச்சாரக் குழு குறித்த முதலமைச்சரின் கோரிக்கைக்கு அறிஞர்கள் வரவேற்பு : கடலடியில் புதையுண்ட தமிழர்களின் வரலாற்றில் வெளிச்சம் பாயுமா?

24 September 2020, 8:30 pm
Cm - tamil - updatenews360
Quick Share

சென்னை: இந்தியப் பண்பாடு பற்றி ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தமிழ் அறிஞர்களைச் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது தமிழக அறிஞர்களிடையேயும் மக்களிடையேயும் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் கலாச்சாரமும் மொழியும் உலகின் மிகவும் பழமையான பாரம்பரியங்களில் ஒன்று என்று அவர் கூறியள்ளதற்கு தமிழ் இலக்கியங்களிலும் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களின் எழுத்துகளில் காணப்படும் சான்றுகளை அவர்கள் அடுக்குகின்றனர்.

இந்திய கலாச்சாரத்தின் 12,000 ஆண்டுகளுக்கு முன்பான தொன்மையை ஆய்வு செய்து நிறுவுவதற்காக 16 உறுப்பினர்களைக் கொண்ட கலாச்சார நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Parliment 01 updatenews360

நாடு முழுக்க உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்று ஆய்வு செய்தால் ஆய்வின் முடிவு முறையாகவும் முழுமையாகவும் இருக்கும். ஆனால், இக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. மேற்கு வங்கம் கிழக்கு இந்தியப் பகுதிகளில் இருந்தும் பிரதிநிதிகள் இல்லை. இது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளின் பண்பாட்டையும் ஆய்வு செய்வதாக இருக்காது என்றும் சமஸ்கிருதமே இந்தியாவின் பழமையான மொழி என்று காட்டுவதற்கான முயற்சி என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் புகழ்பெற்ற கடந்தகாலத்தைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டி தமிழக அறிஞர்களை இக்குழுவில் சேர்க்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். முதல்வரின் கருத்து புகழ்பெற்ற ஆய்வாளர்களின் கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

Edappadi palanisamy - updatenews360

தமிழர் வரலாறும், தமிழ் மொழியின் வரலாறும் தற்போதைய தமிழகத்துக்குத் தெற்கே கடலில் ஆழ்ந்துள்ள குமரிக்கண்டத்தில் இருந்து தொடங்குகிறது என்று ஞா, தேவநேயப்பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். அக்கண்டம் ஆசியாவின் பகுதியாக இருக்கவில்லை என்றும் அது இருந்தபோது இமயமலையும் கங்கைச் சமவெளியும் இருக்கவில்லை என்று புகழ்வாய்ந்த தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை கூறுகிறார். இமயமலை மீது கடல் இருந்தது என்று கூறும் அவர் அம்மலை மீது கண்டெடுக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களின் எலும்புக்கூடுகள் அதற்குச் சான்று மேலை நாட்டு அறிஞர்களை மேற்கோள் காட்டி அவர் எழுதியுள்ளார்.

அந்நாட்டில் வடக்கே குமரி என்றவொரு ஆறும் தெற்கே பஃறுளியாறும் இருந்ததாகவும் என்று கூறும் பாவாணர் ‘பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகாரப் பாடலையும் எடுத்துக்காட்டி அக்கண்டம் கடலில் மூழ்கி அழிந்ததாகவும் விளக்குகிறார்.

குமரிக்கண்டத்தில் 49 தமிழ் பேசும் நாடுகள் இருந்தது என்று கூறும் மொழி அறிஞர் அப்பாத்துரை, அந்த நாடுகளின் பெயர்களையும் ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ் குணசாரை நாடு, ஏழ் குறும்பனை நாடு என்று பட்டியலிடுகிறார். அவரது கணக்குப்படி முதல் தமிழ் சங்கம் 15,000 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்டது. அவர் முதல் தமிழ் சங்கம் அமைந்த இடமாகிய தென்மதுரை அக்கண்டத்தில் இருந்தது என்று கருத்தைக் கூறுகிறார். தென்மதுரை தற்போதைய இந்தோனேசியா அருகே கடலில் இருந்திருக்க வேண்டும் என்று கந்தையா பிள்ளை கருதுகிறார். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை ஆகிய நூல்கள் முதல் சங்கத்தைச் சேர்ந்தவை.

தென்மதுரை உள்ளிட்ட குமரிக்கண்டம் மிகப்பெரிய மிகப்பெரிய கடல் கோளை சந்தித்து பேரழிவு ஏற்பட்டபோது அதன் அரசனாக இயமன் என்பவன் இருந்ததால் தென் திசை இயமனுடைய உலகம் என்றும் தமிழர் தமது முன்னோரை ‘தென்புலத்தார்’ என்று அழைக்கின்றனர் என்றும் கந்தையா பிள்ளை எழுதுகிறார். தென்மதுரை கடலில் மூழ்கியதும் கபாடபுரம் என்னும் இடத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டதாகக் கூறும் அவர் வால்மீகி ராமாயணத்தில் ராமர் தெற்கே வரும்போது பாண்டியன் தலைநகராக கபாடபுரம் இருந்தது என்று கூறப்படுவதையும் வால்மீகி அந்நகரத்தின் அழகை வர்ணித்துப் பாடுவதையும் காட்டுகிறார். ராமாயண காலத்தில் இரண்டாம் தமிழ் சங்கம் இருந்தது என்றால் முதல் தமிழ் சங்கம் ராமாயண காலத்துக்கு முந்தையது என்றும் அவர் தெளிவுபடுத்துகிறார். நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகியவற்றில் காணப்படும் பல பாடல்களும் இரண்டாம் சங்கத்தைத் சேர்ந்தவை என்பதால் சங்கத் தமிழ் இலக்கியம் வால்மீகி ராமாயணத்துக்கும் முன்பு எழுதப்பட்டது என்றாகிறது. கபாடபுரம் கடலில் ஆழ்ந்தபின் தற்போதுள்ள வடமதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

சுவாமி விவேகானந்தர் எழுதிய பிரபுத்த பாரதத்தில் ‘தமிழரின் ஒரு பிரிவினர் மிகப்பழைய காலத்தில் யூப்ரடீஸ் நதிக்கரையில் தங்களுடைய நாகரிகத்தைப்பரப்பினர். தமிழர்களுடைய சோதிடம், சமயம், காதல், நீதி, கிரியை முதலியன அசீரிய, பாபிலோனிய நாகரிகத்துக்கு அடிப்படையாயிருந்தன’ என்று விவேகானந்தர் எழுதியுள்ளார். தமிழில் இன்று வழக்கில் இருக்கும் நூல்களில் இலக்கண நூலான தொல்காப்பியம் மிகப்பழமையானது. ஆனால், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் கருத்துப்படி கங்கைச் சமவெளியில் இயற்றப்பட்ட காலத்துக்கு முன்பே தொல்காப்பியம் எழுதப்பட்டது என்று கூறுகிறார். தொல்காப்பியத்தின் காலம் 5,000 ஆண்டுகளுக்குப் பழமையானது என்று தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை. தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம் இருப்பதால் அதற்கு முன்பே தமிழில் எழுத்துகள் இருந்திருக்க வேண்டும் என்று அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.

தேவநேயப் பாவாணரின் குமரிக்கண்டம் குறித்த ஆய்வையும் அக்கண்டத்தில் பேசப்பட்ட தமிழே மனிதர்கள் முதல் மொழியென்றும் மறைமலை அடிகளும் எடுத்துக்காட்டி எழுதியுள்ளார். இதுபோன்ற தமிழறிஞர்களின் கருத்தும் இந்தியப் பண்பாடு குறித்த ஆய்வில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் பழைய தமிழ் இலக்கியங்களிலும் கூறப்பட்ட செய்திகளூம் மூத்த தமிழ் அறிஞர்களின் கருத்துகளும் இந்திய கலாச்சாரத் துறையால் முறையாக ஆராயப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது. கீழடி அகழ்வாராய்ச்சி போன்ற ஆராய்ச்சிகள் கடலுக்கு அடியிலும் மேற்கொள்ளப்படுவதற்கும் ஆழ்கடலுக்கு அடியில் தமிழர் வரலாறு முறையான அறிவியல் ஆராய்ச்சிகளால் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

Views: - 7

0

0