இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 2ம் இடம் : ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை வேகமாக மீட்கும் தமிழக அரசு!!

Author: Babu
9 October 2020, 8:15 pm
Quick Share

சென்னை : கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில், இரண்டாவது காலாண்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக பொருளாதாரத் தகவல்களிலும், ஆராய்ச்சியிலும் நாட்டில் முன்னணியில் இருக்கும் ‘ப்ரொஜெக்ட் டுடே’ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யும் விதத்தில் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இதையே வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாகப் பேசுவோம் என்று கூறிவருகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கிறது என்று ‘ப்ரொஜெக்ட் டுடே’ கூறியுள்ளது.

TN Secretariat - Updatenews360

இரண்டாவது காலாண்டில் ரூ 23 ஆயிரத்து 332 கோடி அளவு முதலீட்டில் 132 திட்டங்களை ஈர்த்துள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. தமிழ்நாட்டை விட அதிகமாக சட்டீஸ்கர் மாநிலம் மட்டும் ரூ. 32 ஆயிரத்து 771 கோடி முதலீட்டைக் கவர்ந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய பொருளாதார வர்த்தக மையமாக இருக்கும் மகாராஷ்டிரா 5-வது இடத்தில் இருக்கும் நிலையில், இந்தியாவின் மொத்த பொருளாதார முதலீட்டில் பத்து சதவீதத்துக்கும் மேற்பட்ட பங்கைத் தமிழகம் தன் பக்கம் திருப்பியுள்ளது. இந்தியா இந்த இரண்டாவது காலாண்டில் மொத்தம் ரூ. 2 லட்சத்து 219 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த முதல் காலாண்டைவிட இது 107 சதவீதம் அதிகமாகும்.

factory - updatenews360

மத்திய பாஜக அரசால் பெரிதும் ஆதரிக்கப்படும் அந்தக் கட்சி ஆளும் மாநிலமான குஜராத்தும், கர்நாடகமும் தமிழகத்தின் பின்னால்தான் இருக்கின்றன. இந்தியாவிலேயே கொரோனாப் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் இருந்தததால், மற்ற மாநிலங்களைவிட மிகவும் தாமதமாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் தமிழ்நாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கர்நாடகத்தில் பொதுப்போக்குவரத்தும், பொருளாதார நடவடிக்கைகளும் முன்பே தொடங்கப்பட்டு, தொழில் முதலீடுகளைத் தன்பக்கம் இழுப்பதில் அவசரமும், முனைப்பும் காட்டியது கர்நாடகம். ஆனால், தமிழகம் மெதுவாகத்தான் தளர்வுகளை அறிவித்தது. பொதுப்போக்குவரத்தையும், தொழில் நடவடிக்கைகளையும் அனுமதித்தது. ஆனால் ‘லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக வருவது’ போல் மற்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வேகத்தில் சென்றால் மூன்றாவது காலாண்டிலும் அனைத்து மாநிலங்களையும் தமிழ்நாடு முந்திச் செல்லும் நிலையே இருக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழக அரசு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்றும், சில மாதங்களுக்கு மட்டும் பொது வினியோகத் திட்டத்தில் இலவசமாக உணவுப்பொருள்கள் வழங்கியது எந்த வகையிலும் பொருளாதாரத்தை முன்னேற்றாது என்றும், ஸ்டாலினும் அவருடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளும் தொடர்ந்து கூறிவருகின்றன.

ஆனால் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும், உணவில்லை என்று ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்று இலவசத் திட்டங்களையும், ஆயிரம் ரூபாயையும் கொடுத்த தமிழக அரசு, நீண்டகாலப் பொருளாதாரத் திட்டங்களையோ, தொலைநோக்குப் பொருளாதார நடவடிக்கைகளையோ எடுக்காமல் இல்லை என்பதையே அரசியல் சாராத வர்த்தகப் புள்ளிவிவர ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

தொழில் முதலீடுகளால் விரைவில் இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் பெருகும் என்றும், இதனால் வாங்கும் சக்தி அதிகரித்து பணப்புழக்கம் ஏற்றம்பெற்று, வளமான நிலை நோக்கித் தமிழ்நாடு விரைவாகவும், உறுதியாகவும் நடைபோடுகிறது என்பதேயே இந்த ஆய்வு அறிக்கை துல்லியமாகப் படம்பிடிக்கிறது.

Views: - 54

0

0