தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை : 14 இந்திய ராணுவ குழுக்கள் வருகை
25 November 2020, 3:44 pmசென்னை : நிவர் புயல் அதிதீவிரமாக உருமாறும் எனக் கூறிய நிலையில், தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. நிவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல், இன்று நள்ளிரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. மேலும், புயலை கரையை கடக்கும் போது, 155 கி.மீ., வரையில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
நிவர் புயல் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என்றும், நிவர் புயல் இன்று நள்ளிரவு – நாளை அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நிவர் புயலால் தமிழக, புதுச்சேரி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதனிடையே, விழுப்புரம் மாவட்ட புத்துப்பட்டு என்ற இடத்தில் தமிழகம்-புதுச்சேரி மாநிலங்களை இணைக்கும் சாலை தடுப்பு வேலிகள் வைத்து மூடப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதேவேளையில், நிவர் புயல் மீட்பு பணிக்காக 14 இந்திய ராணுவ குழுக்கள் சென்னை, திருச்சி வந்துள்ளதாகவும், ஒவ்வொரு குழுவிலும் 10 ராணுவ வீரர்கள் இருப்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.
0
0