குறித்த நேரத்தில்தான் பயணம்… சென்னை புறநகர் ரயில்களில் 4 மாவட்ட ஆண்களுக்கு திடீர் தடை… வாழ்வாதாரம் இழக்கும் கூலித்தொழிலாளர்கள்!!!

25 June 2021, 12:16 pm
train - updatenews360
Quick Share

தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னையில் மாநிலத்தின் பிற நகரங்களை விட பொது போக்குவரத்து வசதிகள் அதிகம்.

10 லட்சம் பேர்..

இதற்கு முக்கிய காரணம் சென்னையின் புறநகர் பகுதியையொட்டியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னைக்கு வேலை நிமித்தமாகவும், இதர பணிகள் காரணமாகவும் வந்து செல்வோர் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகம்.

இவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய உதவிகரமாக இருப்பவை புறநகர் மின்சார ரயில்கள்தான்.

மின்சார ரயில் ஃபர்ஸ்ட் சாய்ஸ் :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வரையிலும், சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரையிலும்
இன்னொரு வழித்தடத்தில் வேளச்சேரிக்கும் புறநகர் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. இதுதவிர சென்னை நகருக்குள் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களும் இயக்கப்படுகின்றன.

உள்ளூர் பஸ்களிலும், தொலைதூர விரைவு மற்றும் சொகுசு பஸ்களிலும் பயணிக்கும்போது பஸ் கட்டணம் அதிகமாக இருக்கும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 50 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு 3 மணி நேரத்திற்கும் மேல் பயண நேரம் நீடிக்கும்.

chennai train emu - updatenews360

புறநகர் மின்சார ரயிலில் இதே 50 கிலோ மீட்டர் தூரத்தை அதிகபட்சம் ஒன்றரை மணிநேரத்துக்குள் சென்றடைந்து விடலாம். போக்குவரத்து நெரிசல் என்ற பேச்சுக்கும் அதிக இடமிருக்காது என்பதால், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பயணிக்க அனைவரும் முதல் விருப்பமாக தேர்வு செய்வது மின்சார ரயில்களைத்தான்.

எண்ணிக்கை மட்டுமே குறைப்பு

தமிழகத்தில் தற்போது கொரோனா 2-வது அலை வெகுவாக குறைந்துள்ளது.
இதன் காரணமாக ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் கடந்த 21-ந் தேதி முதல் பஸ் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது விமானம், ரயில், பஸ் சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு அனைத்து சேவைகளும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கிய பின்னர் விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் மின்சார ரயில்களின் சேவை ஒரு போதும் நிறுத்தப்படவே இல்லை.

இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை மட்டும்தான் குறைக்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது ரயில் சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. அதேநேரம், அரசு ஊழியர்களும் முன்கள பணியாளர்களும் மட்டுமே
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆண்களுக்கு கட்டுப்பாடுகள் :

இந்நிலையில்தான் இன்று முதல் பொது மக்களுக்காக மீண்டும் சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி புறநகர் மின்சார ரயில்களை பொறுத்தவரை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் உரிய அனுமதி கடிதம் வைத்திருக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். இவர்கள் எல்லா நேரங்களிலும் பயணிக்கலாம்.
ஒரு வழி, இரு வழி மற்றும் சீசன் டிக்கெட்டுகளும் இவர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

train ticket booking centre - updatenews360

அதேபோல் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு வைத்துள்ளவர்கள் ரயில் நிலையத்திற்கு வந்தும் பயணம் முடிந்து வீடு திரும்புவதற்காகவும் அனைத்து நேரங்களிலும் மின்சார ரயில்களில் ஒரு முறை பயணிக்க அனுமதிக்கப்படுவர். இதற்காக அவர்களுக்கு ஒரு வழி பயணசீட்டு மட்டுமே வழங்கப்படும்.

பெண் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் எந்த காரணத்திற்காகவும் பயணம் செய்யலாம். ஒரு வழி, இரு வழி மற்றும் சீசன் டிக்கெட்களை எந்த நேரமும் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இதேபோல பெண் பயணிகளுடன் வரும் 12 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளும் பயணிக்கலாம்.

வியாபாரிகள் ஏமாற்றம் ;

ஆண்கள் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே பயணிக்க முடியும். அதாவது காலை 7 மணி வரையிலும், பின்னர் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிவரையிலும், இரவு
7 மணிமுதல் கடைசி ரயில் செல்லும் வரையிலும் ஆண்கள் பயணிக்கலாம். இவர்களுக்கு இருவழி டிக்கெட் கிடையாது.

ரயில் நிலையங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையென்றால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், கூட்டநெரிசலை ஏற்படுத்தக்கூடாது. ரயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் பயணிகளை அறிவுறுத்தி இருக்கிறது.

நெரிசலான நேரங்களில் ஆண் பயணிகள், புறநகர் ரயில்களில் பயணம் செய்ய தெற்கு ரயில்வே நிர்வாகம் தடை விதித்திருப்பது புறநகர் பகுதி கூலித்தொழிலாளர்களையும், சிறு வியாபாரிகளையும் கொதிப்படையச் செய்துள்ளது.

mumbai local train - updatenews360

அரசின் முடிவால் ஏமாற்றம்

இதுகுறித்து செங்கல்பட்டு, திருவள்ளூர் நகரங்களிலிருந்து சென்னைக்கு புறநகர் மின்சார ரயில்களில் தினமும் பயணிக்கும் அவர்கள் கூறும்போது, “தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு கோமாளித்தனமாக உள்ளது. காலை 7 மணி முதல் கூலி வேலைக்காக சென்னைக்குள் செல்ல நாங்கள் மின்சார ரயில்களைத்தான் நம்பி இருந்தோம்.

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்காத நேரத்திலும், அரசு பஸ்கள் இயக்கப்படாத நிலையிலும் கூலி வேலைக்காகவும், பொருட்களை எடுத்துச் சென்று விற்கவும் சென்னைக்கு சென்றுவர தினமும் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலவு செய்தோம். மின்சார ரயில்களில் எங்களை அனுமதித்தால் விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினோம். ஆனால் அதற்கு ரயில்வே நிர்வாகம் ஆப்பு வைத்து விட்டது.

இதனால் எங்களைப் போன்றவர்கள், அவசர பயணமாக சென்னைக்கு செல்ல வேண்டியவர்கள் மீண்டும் பஸ்களில் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் நெரிசல் நேரங்களில் ஆண்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மனைவி குழந்தைகளுடன் குறிப்பிட்ட நேரத்தில் பயணம் செய்ய முடியாத அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியாது என்பதால் சென்னைக்கு வர 5 மணிக்கே மின்சார ரயில் ஏறவேண்டும். சென்னைக்குள் வந்துவிட்டாலும் கூட வேலைக்காகவும் வியாபாரத்திற்காகவும் நகர மக்களின் நடமாட்டம் வெளிப்படும் வரை ஒரு மணி நேரமோ 2 மணி நேரமோ காத்திருக்கவேண்டும்.

மாலையில் 5 அல்லது 6 மணிக்குள் கூலி வேலை முடிந்து ஊர் திரும்ப விரும்புபவர்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்யமுடியாது. இதனால் எங்களைப் போன்றவர்கள் இரவு
7 மணி வரை தேவையின்றி காத்திருந்துதான் சொந்த ஊர் செல்லவேண்டும். பின்பு ரயில் நிலையத்திலிருந்து வீடு போய்ச்சேர அரைமணி நேரம் ஆகும். எப்படிப்பார்த்தாலும் வீட்டுக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் போய்ச் சேர முடியும். ரயிலில் சீசன் டிக்கெட் எடுத்தால் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக300 ரூபாய்தான் கட்டணம் இருக்கும். ஆனால் ரயில்வே நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடு காரணமாக தினமும் குறைந்தபட்சம் 200 ரூபாய் வரை பஸ்சுக்காக செலவிட வேண்டிய கட்டாயம் உள்ளது.

எங்களால் உள்ளூரில் கூலி வேலை பார்த்தாலோ, பொருட்களை விற்றாலோ தினமும் 200 ரூபாய் சம்பாதிக்க முடியுமா என்பதே கேள்விக்குறி. தாம்பரம், ஆவடி,பெரம்பூர், எழும்பூர், பாரிமுனை போன்ற பகுதிகளுக்கு சென்றால்தான் ஓரளவு வருமானம் கிடைக்கும். அதில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்கள். விற்பனைக்கு கொண்டு செல்லும் பொருட்களை பஸ்களில் ஏற்றினால் லக்கேஜ் போட்டுத் தள்ளி விடுவார்கள். சம்பாதிக்கும் பணம் பஸ்சுக்கே போய்விடும்.

நெரிசலான நேரங்களில் ரயில்களில் ஆண் பயணிகள் அதிகம் இருப்பார்கள் என்பது உண்மைதான். அதை தவிர்ப்பதற்கு 10, 15 நிமிடத்திற்கு ஒருமுறை புறநகர் ரயில்கள் இயங்கும் நேரத்தை அதிகரிக்கலாம். இதைச் செய்தால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம். பெண்களுக்கான சிறப்பு மின்சார ரயில்களை கூடுதலாக இயக்கினாலும் இப் பிரச்சினை சுலபமாக தீர்ந்துவிடும். அதேபோல் ஆண்களுக்கு ரிட்டன் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதும், அநீதி. ரயில்வே நிர்வாக அறிவுறுத்தலின்படி ஆண்களுக்கான இப்படிப்பட்ட கெடுபிடிகளால் எங்களைப் போன்றவர்கள் மீண்டும் ஒரு முறை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன்மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்பும் உருவாகும். இதைத்தான் தெற்கு ரயில்வே நிர்வாகம் விரும்புகிறதா?

எனவே கூட்ட நெரிசல் நேரங்களில் அதிகமான புறநகர் மின்சார ரயில்களை இயக்கி கூலி வேலை பார்ப்போரும், வியாபாரிகளும் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கவேண்டும்.

இல்லையென்றால் எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரமே நொறுங்கிப் போய் நாங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும் நிலைதான் ஏற்படும். இதை ரயில்வே நிர்வாகம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும்” என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 163

0

0