தமிழகத்தில் தேர்தலும் வந்தாச்சு! புதுப்புது கூட்டணிகளும் முளைச்சாச்சு!! கமல் – சரத்குமார் சந்திப்பில் புதிய முடிவு
27 February 2021, 9:45 pmசட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்திலேயே தமிழக அரசியல் களம் இறக்கை கட்டிப் பறக்க தொடங்கிவிட்டது. தலைமை தேர்தல் கமிஷன் ஏப்ரல் கடைசி வாரத்தில்தான் தமிழகத்தில் தேர்தலை நடத்தும் என்று எல்லாக் கட்சிகளுமே நினைத்திருந்தன. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதில் தீவிரம் காட்டாமல் கொஞ்சம் சுணக்கமாகவும் இருந்தன.
நாட்டின் 23-வது தலைமை தேர்தல் கமிஷனரான சுனில் அரோரா
எதையும் மனிதநேய நோக்குடன் பார்ப்பவர்.
அதனால்தான் மே மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் என்பதால் அவர் 5 மாநில தேர்தலை ஏப்ரல் மாத இறுதிக்குள்ளாகவே நடத்தி முடிக்க முடிவெடுத்து அதற்கான பணிகளை திட்டமிட்டவாறு தொடங்கி வைத்தும் விட்டார். தமிழகத்தை பொறுத்தவரை தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, ஏப்ரல் முதல் வாரமே தேர்தல் நடக்கும் என்று அறிவித்து விட்டதால், அரசியல் கட்சிகள் சற்று அதிர்ந்துதான் போயின.
கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சு எதுவும் நடக்காத நிலையில், தற்போது தமிழக அரசியல் கட்சிகள் இதில் அதிதீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. அதிமுகவை பொறுத்தவரை பாஜக, பாமக கட்சிகளுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது. விரைவில் தொகுதி பங்கீடும் முடிந்து விடும். இதுதவிர திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் சில கட்சிகளும் அதிமுக அணியில் இணைய வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், 2 நாட்களுக்கு முன்பு திமுக காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சு நடந்தது. எப்படியும் இந்த இரு கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிடும். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் விரைவில் தொகுதிப் பங்கீட்டை திமுக பேசி முடித்து விடும் என்றும் எதிர்பார்க்கலாம். அதேபோல் வலுவான கூட்டணி அமைப்பதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் அதிரடி காட்டி வருகிறார்.
இந்த நிலையில் அவரை இன்று சென்னை ஆழ்வார்பேட்டை உள்ள அவருடைய வீட்டில் நடிகர் சரத்குமார் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக வலிமையான மூன்றாவது அணி அமைப்பது குறித்து அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
அண்மையில் நடிகர் ரஜினியை சந்தித்து கமல் உடல் நலம் விசாரித்தபோது மக்கள் நீதி மய்யம் இன்னும் சில கட்சிகளை இணைத்துக்கொண்டு வலுவான அணியை உருவாக்கவேண்டும் என்று ரஜினி கூறிய அட்வைஸ்படி சரத்குமாரை கமல் அழைத்துப் பேசியிருக்கிறார். எனவே இவர்கள் ஒரே அணியாக போட்டியிடப் போவது உறுதியாகி விட்டது. இந்த அணியில் இணையுமாறு பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, ஐதராபாத் எம்பி ஒவைசியின் AIMIM கட்சிக்கும் கமல் அழைப்பு விடுத்திருக்கிறார். இது தவிர மேலும் சில சிறு கட்சிகளும் மக்கள் நீதி மய்யம் அமைக்கும் அணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 54 ஆயிரம் ஓட்டுகள் பெற்ற வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்னும் ஒரு புதிய கட்சியை இரு தினங்களுக்கு முன்பு தொடங்கினார்.அப்போது அவர் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சரமாரியாக சாடினார்.
அவர் பேசும்போது “திமுக தனது ஆட்சி காலத்தில் 14 லட்சம் கோடி ரூபாயை கொள்ளையடித்து வைத்திருக்கிறது. சன் டிவி நிறுவனம் தமிழ் திரையுலகினருக்கு கொடுக்க வேண்டிய 2 ஆயிரம் கோடி ரூபாயை தராமல் பல ஆண்டுகாலமாக ஏமாற்றி வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
வரும் தேர்தலில் 60 இடங்களில் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்துள்ள மன்சூர் அலிகான், தேசிய கட்சிகள், மாநிலத்தின் பிரதான கட்சிகளுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். தற்போது நடிகர் மன்சூர் அலிகானின் கட்சியையும் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணிக்குள் கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ” தொகுதி பங்கீடு பேச்சுக்காக எங்கள் தலைவருக்கு ஸ்டாலின் நேரடி அழைப்பு விடுக்காமல், தனது மருமகன் சபரீசன் மூலம் தூதுவிட்டார். அந்த தவறை செய்துவிட்டு இப்போது நாங்கள் வலுவான அணியை உருவாக்குகிறோம் என்பது தெரிந்தவுடன் எங்களை பாஜகவின் B டீம் என்கிறார்கள்.
உண்மையில் அவர்கள்தான் பாஜகவின் நிழலாக இருக்கிறார்கள். அதனால்தான் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதியின் கொள்கைக்கு எதிராக திமுக நிர்வாகிகள் இன்று ராமர் கோவில் கட்டுவதற்கு பணத்தை வாரி வாரி கொடுத்து வருகிறார்கள். இப்படி இரட்டை வேடம் போடுவது திமுக தான்” என்று அவர் கடுமையாக சாடினார்.
மேலும் அவர் கூறும்போது, “ரஜினியின் ஆலோசனையை எங்கள் தலைவர் முழுமையாக ஏற்று நடக்கத் தொடங்கிவிட்டார். அதனால்தான் தனி அணி அமைத்து போட்டியிடப் போவதாக அறிவித்த நடிகர் சரத்குமாரை உடனடியாக அழைத்து பேசியிருக்கிறார். விரைவில் பாரிவேந்தர், மன்சூர் அலிகான் இருவரும் எங்கள் அணியில் வந்து சேருவார்கள். AIMIM கட்சியும் எங்கள் அணியில் இணையும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கமல் தனது அணியில் இணையும் கட்சியின் தலைவர்கள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புவது தெரிகிறது.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரான பாரிவேந்தர், தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், AIMIM கட்சியின் தேசிய தலைவர் ஒவைசி ஆகியோர் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்கள். இவர்களை ஒருங்கிணைத்து களம் இறக்கினால் வாக்காளர்களிடம் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்று கமல் நம்புவதும் தெரிகிறது.
அதைத்தொடர்ந்தே, இம்முயற்சியில் அவர் படு சுறுசுறுப்பு காட்டுகிறார். ஏற்கனவே, ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்தை எழுப்பிவரும் நடிகர் கமல், இடையில் நிறுத்தியிருந்த தேர்தல் பிரச்சாரத்தை வருகிற 3-ந்தேதி முதல் மீண்டும் தொடங்குகிறார்.
இந்த நிலையில் கமல் அமைக்கும் கூட்டணியில் தனது கட்சியையும் இணைத்துக் கொள்ளுமாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தூது விட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல்வர் வேட்பாளர் பற்றி தெளிவாக எதையும் அவர் குறிப்பிடவில்லையாம். இதற்கு கமல் சூசகமாக ஒரு பதிலை அளித்தார். “எத்தனை கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்தாலும் நான்தான் முதல்வர் வேட்பாளர்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
ஆக, தமிழக தேர்தல் பந்தய களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.
0
0