ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி : குறைந்த சதவீத ஓட்டுப்பதிவு யாருக்கு சாதகம்?

7 April 2021, 1:52 pm
political news cover - updatenews360
Quick Share

அப்பாடா!…

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. 12 மணி நேரம் நடந்த இந்த மெகா ஜனநாயக தேர்தல் திருவிழாவில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இது கடந்த தேர்தலை விட ஒன்றரை சதவீதம் குறைவு.
2016 தேர்தலில் 74.26 சதவீத ஓட்டு பதிவாகி இருந்தது, குறிப்பிடத்தக்கது.

72.78 சதவீதத்தை மிகவும் குறைந்த விழுக்காடு என்று கூறி விட முடியாது. தேர்தல் கமிஷன் 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததால் இந்த அளவிற்கு ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதிமுக, திமுக தவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுக-தேமுதிக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி என
5 முனை போட்டி நிலவியதாலும் இந்த அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

election meet - updatenews360

ஏனென்றால் 5 முனை மோதல் என்பதால் இந்த கூட்டணி கட்சியினர், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரித்தனர். தங்களுக்கு வாக்களிக்கக் கூடிய ஆதரவாளர்களை ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைப்பதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஓட்டு சதவீதம் வழக்கம்போல் இருந்ததை காணமுடிந்தது. அதிக வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டது, ஓட்டுப்பதிவுக்கு கூடுதல்நேரம் வழங்கப்பட்டது போன்றவையும் 73 சதவீத வாக்குப்பதிவை நெருங்கியதற்கு
காரணம்.

கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டதால் தங்களின் வீடுகளுக்கு அருகிலேயே பெரும்பாலானோருக்கு வாக்குச்சாவடிகள் அமைந்துவிட்டன. இதன் காரணமாகவும் வாக்காளர்கள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் திரண்டு வந்து வாக்களித்ததை பார்க்க முடிந்தது. இப்படி குறைந்த சதவீத வாக்குகள் பதிவாகும்போது, அது யாருக்கு சாதகமாக அமையும்? யாருக்கு பாதகமாக முடியும்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்து விடுகிறது.

இந்த தேர்தலைப் பொறுத்தவரை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் ஒரு அக்னிப்பரீட்சை.

ஏனென்றால் தமிழகத்தில் ஆளுமையின் அடையாளங்களாக திகழ்ந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் உயிருடன் இல்லாத நிலையில் நடைபெற்ற முதல் சட்டப் பேரவை தேர்தல். இதனால் ஓட்டுப்பதிவு சதவீதம் மிக மிகக் குறையும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் இந்த இரு தலைவர்களுமே 27 ஆண்டுகளில் 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் நேருக்கு நேர்மோதிக் கொண்டவர்கள்.

ஆனால் இருவரும் உயிருடன் இல்லாத நிலையிலும் கூட இந்த அளவிற்கு ஓட்டு பதிவாகி இருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாகும். அதேநேரம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் போயிருந்தால் இதை விட அதிக சதவீதத்தில் வாக்குகள் பதிவாகி இருக்கலாம்.

இப்படி ஓரளவு நல்ல சதவீதத்தில் ஓட்டு பதிவாகியிருப்பது, யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். தமிழகத்தில் கடந்த 7 தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

1989-ல் நடந்த தேர்தலில், 70 சதவீத வாக்குகள் பதிவானது. இது முந்தைய தேர்தலுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதம் குறைவாகும். நான்கு முனை போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றியது. திமுகவுக்கு 150 இடங்களும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணிக்கு 27 இடங்களும் கிடைத்தன. ஜானகி அம்மாள் அணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது விடுதலைபுலிகள் இயக்கத்தின் மனித வெடிகுண்டால் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட நிலையில் தேர்தல் நடந்தது. அப்போது 64 சதவீத வாக்குகளே பதிவானது. இது முந்தைய தேர்தலை விட
6 விழுக்காடு குறைவாகும்.

அதிமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்தத் தேர்தலில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 60 தொகுதிகளில் வென்றது.
திமுக கூட்டணிக்கு 7 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதில் திமுக வென்ற இடங்கள் இரண்டே இரண்டுதான்.

1996-ல் தமிழகத்தில் 67 சதவீத வாக்குகள் பதிவானது. இது முந்தைய தேர்தலை விட 3 சதவீதம் அதிகம். இந்தத் தேர்தலில் திமுக -தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி 221 இடங்களில் வெற்றி கண்டது. அதிமுகவால் 4 இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்தது. நான்கு முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் பாமக 4 இடங்களில் வென்றதும் குறிப்பிடத்தக்கது.

2001 தேர்தலில் 59 சதவீத வாக்குகள்தான் பதிவானது. தமிழகத்தில்1957-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக்குறைவாக பதிவான வாக்கு சதவீதம், இதுதான். 1957-ல் 47 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த 59 சதவீதம் என்பது, 1996 தேர்தலை விட 8 சதவீதம் குறைவாகும். இந்தத் தேர்தலில் அதிமுக- திமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் அதிமுக அணி 198 இடங்களில் வென்றது. அதிமுக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக 31 இடங்களில் வென்றது.

2006 தேர்தலில், 71 சதவீத வாக்குகள் பதிவானது. இது முந்தைய தேர்தலை விட 12 விழுக்காடு அதிகம். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதென்னவோ 163 இடங்களில். ஆனாலும் திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 96 இடங்களில் வென்ற திமுக, காங்கிரசின் உதவியுடன்தான் ஆட்சியை நடத்தியது. அதிமுக கூட்டணி 69 இடங்களில் வென்றது. அதிமுக மட்டும் கைப்பற்றிய இடங்கள் 60.

2011 சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 78 சதவீத ஓட்டுகள் பதிவானது. இது முந்தைய தேர்தலை விட 7 சதவீதம் அதிகம். இரு முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அதிமுக- தேமுதிக கூட்டணி 203 தொகுதிகளை கைப்பற்றின. இதில் அதிமுக மட்டும் 150 இடங்களில் வெற்றி பெற்றது. தேமுதிக 29 தொகுதிகளில் வென்றது. திமுகவுக்கு கிடைத்த இடங்கள் 23.

jayalalitha - vijayakanth - updatenews360

2016 தேர்தலில் 74.26 சதவீத ஓட்டுகள் பதிவானது. இது முந்தைய தேர்தலை விட சுமார்
4 சதவீதம் குறைவு. 5 முனை போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனித்து போட்டியிட்டு136 இடங்களில் வெற்றி கண்டது. திமுக கூட்டணி 98 இடங்களில் வென்றது. இதில் திமுக மட்டும் 89 தொகுதிகளில் வெற்றி கண்டிருந்தது.

1989 முதல் நடந்து முடிந்த 7 சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துக்கொண்டால் ஓட்டு விழுக்காடு குறைவாக பதிவான 1991, 2001, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் மற்றும் கூடுதல் வாக்கு சதவீதம் பதிவான 2011 தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

திமுகவைப் பொறுத்தவரை, வாக்கு சதவீதம் கூடுதலாக பதிவாகியிருந்த1996 மற்றும் 2006 ஆகிய 2 தேர்தல்களில் வெற்றி கண்டுள்ளது. குறைந்த வாக்கு சதவீதம் பதிவான 1989 தேர்தலிலும் வெற்றி அடைந்துள்ளது. அந்தத் தேர்தலில் அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில்தான் திமுக வெற்றி கண்டது, குறிப்பிடத்தக்கது.

Eps - stalin - updatenews360

தற்போதைய தேர்தல் முற்றிலும் மாறுபட்ட சூழலில் நடந்து முடிந்துள்ளது. அதனால் ஓட்டு சதவீதம் குறைவு என்ற கணக்கின் அடிப்படையில் தேர்தல் முடிவை தீர்மானிப்பது பொருத்தமாக இருக்குமா? என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

இதற்கு மே 2-ம் தேதி சரியான விடை கிடைத்துவிடும்.

Views: - 130

0

0