ரஜினியின் முதல்வர் வேட்பாளர் கமலா? மய்யம் – ஆன்மீகம் கைகோர்த்தாலும் அதிமுக, திமுக இடையேதான் போட்டி! அரசியல் விமர்சகர்கள் கணிப்பு!

17 October 2020, 6:50 pm
Rajini_Kamal_ - updatenews360
Quick Share

சென்னை : முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கியுள்ள மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன், அவரது நண்பரும் நடிகருமான ரஜினிகாந்துடன் கூட்டணி அமைத்து அவரது ஆதரவுடன் முதல்வராக முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக வேறு எந்தக் கட்சியும் ஏற்காது என்பதால், கூட்டணி அமைப்போம் என்று அவர் கூறியிருப்பது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மனதில் வைத்துத்தான் என்று அவரது கட்சிக்காரர்களிடம் தீவிரமான பேச்சு எழுந்துள்ளது. ஆனால், அப்படி ஒரு கூட்டணி அமைந்தாலும் முக்கிய போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஜெயலலிதாவும், கருணாநிதியும் மறைந்த பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் தாம் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக 2017 டிசம்பர் 31-ல் அறிவித்தார் ரஜினிகாந்த். தான் கட்சி தொடங்கினாலும் முதல்வராக மாட்டேன் என்று அவர் திடீரென்று அறிவித்தார். அதன்பிறகு இன்று வரை கட்சி குறித்து ரஜினி எதுவும் பேசவில்லை என்றாலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவருக்கு நெருக்கமான தமிழருவி மணியன் அக்டோபர் 2-ஆம் தேதி மீண்டும் அறிவித்தார். ரஜினி காந்தீய வழியில் நடப்பார் என்றும் உறுதி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் அவர் கட்சி தொடங்குவார் என்ற செய்திகள் இறக்கைகட்டிப் பறக்கின்றன.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கமாட்டார் என்று தெரியவந்ததால், அவரை நம்பிருக்க வேண்டாமென்று பாஜகவும் முடிவெடுத்து அதிமுகவுடன் கூட்டணி என்று கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசத்தொடங்கிவிட்டார்.

ரஜினிகாந்த் தனியாகக் களம் இறங்கமாட்டார் என்றும் கூட்டணி அமைப்பார் என்றும், தமிழருவி மணியன் பலமுறை சூசகமாகக் கூறியிருப்பார் என்றும் சொல்லியிருப்பதால், அவருடன் அணி அமைத்து அவரது ஆதரவுடன் முதல்வர் ஆகிவிட பல கட்சித்தலைவர்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்க ரஜினிகாந்துடன் பாமக தலைவர் ச. ராமதாஸ் பேசிவருவதாகவும், விஜயகாந்தும் அந்த முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இரு கட்சிகளுமே ரஜினிகாந்துடன் கூட்டணி இல்லை என்று இதுவரை மறுக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி பேரத்தில் அதிக இடங்களைப் பெற அந்தக் கட்சிகளே இதுபோன்ற செய்திகளைப் பரப்பி வருவதாகவும் பேச்சு எழுந்துள்ளது. வெளிப்படையாக இரு கட்சிகளுமே ரஜினிகாந்துடன் கூட்டணி சேருவது பற்றி எதுவும் கூறவில்லை.

ஆனால், இந்த இரு கட்சிகளைவிட ரஜினிகாந்துடன் கூட்டணி சேரவும் அவரது ஆதரவுடன் முதல்வர் வேட்பாளராகக் களம் இறங்கவும் கமல்ஹாசனுக்கே வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்ட போது, ரஜினிகாந்த் தனது கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே ஆதரவு கேட்டார் கமல்ஹாசன். ஆனால், ரஜினிகாந்த் எதுவும் கூறவில்லை.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில்தான் களம் இறங்குவேன் என்று ரஜினிகாந்த் ஏற்கனவே கூறியிருந்தார். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் அமைதிகாத்தார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட முறையில் எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதையும், மக்கள் நீதி மய்யத்தின் பலத்தையும் கணிப்பதற்கு ரஜினிகாந்த் அந்தத் தேர்தலைப் பயன்படுத்திக்கொண்டார்.

நீண்டகாலமாக தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகியுள்ள நடிகர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியை விடவும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி 3.88 சதவீத ஓட்டுகளை வாங்கியது. கமல்ஹாசனின் புதிய கட்சியோ 3.72 சதவீத வாக்குகளையே பெற்றது. சென்னையிலும் கோவை, மதுரை ஆகிய இடங்களில் நகரப்பகுதிகளில் மட்டும் ஓரளவு ஆதரவைப் பெற்றது. எனவே, எந்த நம்பிக்கையுடன் கமல்ஹாசன் முதல்வர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டார் என்ற கேள்விகள் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதாலும், பாஜகவுடன் அவருக்குக் கூட்டணி இல்லை என்பதாலும், தன்னை அவர் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார் என்று கமல்ஹாசன் கருதுவதாக அவரது கட்சியினர் கூறுகிறார்கள். ஒருவரை முதல்வராக்கி அவரின் ஆட்சியை கண்காணிக்கலாம் என்று ரஜினி கூறியிருக்கிறார். வேறு யாரையாவது முதல்வர் ஆக்குவதைவிட அவருக்கு பல ஆண்டுகளாக பழக்கமான கமல்ஹாசனை ஆதரிக்க ரஜினி தயங்கமாட்டார் என்று கமல் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும், அதிமுகவும், திமுகவும் வலுவான முதல்வர் வேட்பாளர்களை அறிவித்துக் களம் காணும் நிலையில், முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்லாமலோ அல்லது மக்களிடம் எந்தவித அறிமுகமும் இல்லாத ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தோ, தேர்தலில் வாக்குகளைப் பெற முடியாது என்பதை ரஜினிகாந்த் உணர்ந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதை இதுவரை அவரது ரசிகர்களோ, ஆதரவாளர்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

ஆனால், ரஜினி ஆதரவுடன் கமல்ஹாசன் களம் இறங்கினாலும், கட்சிக் கட்டமைப்பும் பெருமளவு மக்கள் ஆதரவும் அவர்களுக்கு இருக்காது என்றும் ஓரளவு வாக்குகளை மட்டும் அவர்கள் பிரிக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் முக்கிய போட்டி, வழக்கம்போல திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையேதான் இருக்கும் என்றும், வழக்கம்போல மூன்றாம் இடத்துக்குத்தான் கமல்-ரஜினி கூட்டணி போட்டியிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கிறார்கள்.

Leave a Reply