சட்டமன்றத்தில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் துரைமுருகன் : ஸ்டாலின் புகழாரம்.. கண்கலங்கிய துரைமுருகன்..!

9 September 2020, 3:43 pm
dmk 2- updatenews360
Quick Share

சென்னை : தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் புகழ்ந்து பேசிய போது, பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆனந்த கண்ணீர் விட்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க.வின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும், யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்கட்சி சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆ.ராசா, பொன்முடி ஆகியோர் தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வியில் சமூகநீதி உள்பட 12 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றவர்களை பாராட்டி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, தி.மு.க.வின் வேலூர் மாவட்டச் செயலாளராக இருந்த துரைமுருகன் தற்போது பொதுச்செயலாளராக உயர்ந்துள்ளார். அண்ணா, க.அன்பழகன் உள்ளிட்டோர் வகித்த பதவியை தற்போது துரைமுருகன் வகிக்கிறார். இங்குள்ளவர்கள், ஏன் சட்டசபையில் கூட மூத்த உறுப்பினர் இவர்தான். சட்டமன்றத்தில் சூப்பர் ஸ்டார் என்று கூட சொல்லலாம். 9 முறை எம்.எல்.ஏ.வாகவும், 3 முறை தமிழக அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார், எனக் கூறினார்.

Stalin_ duraimurugan tr baalu - updatenews360

கூட்டத்தில் தன்னை பற்றி ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்த போது நெகிழ்ந்து மேடையிலேயே துரைமுருகன் கண்கலங்கினார்.

இதைத் தொடர்ந்து, பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ஆர் பாலுவை பற்றி ஸ்டாலின் பேசினார். அதாவது, தி.மு.க.விற்கு கிடைத்த ஆற்றல் மிக்க போர்வாள், ஒரு போர் வீரன். கலைஞருக்காக கார் ஓட்டி சிறை சென்றவர். கலைஞருக்காக உயிரைக் கூட கொடுக்க தயாராக இருந்தவர் டி.ஆர்.பாலு. மாவட்டங்களில் இருந்து வரும் பல்வேறு பிரச்சனைகளை உடனடியாக தீர்க்கும் திறன் கொண்டவர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 6 முறை எம்.பி.யாகவும், 3 முறை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.

மிசா சட்டத்தில் நான் சிறைக்கு சென்ற போது, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். எனக்கு பக்கபலமாக கட்சியை வழிநடத்த இருவரும் பொறுப்பேற்றுள்ளனர். உங்கள் முழுத் திறமையையும் கட்சிக்கு தாருங்கள், எனக் கூறினார்.

Views: - 2

0

0