தமிழகத்தில் தாமரையை மலரவைக்க ‘பக்கா பிளான்’ : சாணக்ய வியூகத்துடன் விஜயம் தரும் அமித்ஷா..!!

17 November 2020, 9:00 pm
Amit shah cover - updatenews360
Quick Share

சென்னை: அரசியல் சாணக்யன் என்று வர்ணிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகையின்போது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் கூட்டணி வியூகம் முடிவு செய்யப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கட்சியின் தொண்டர்கள் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கும் சூழலில், பீகார் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றியைக் குறிவைத்துள்ள அமித் ஷா, நவம்பர் 21-ல் பாஜக நிர்வாகிகளுடன் அரசியல் உத்திகுறித்து விவாதிப்பார் என்றும், பல அரசியல் தலைவர்களை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

modi - nithish - updatenews360

கொரோனாப் பாதிப்பாலும் அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட ஊரடங்காலும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி கடும் சவால்களை சந்தித்தது. அதையும் மீறி சரியான தேர்தல் உத்தியாலும், ராஜதந்திர அணுகுமுறையாலும், பீகாரில் பாஜக முதல்வர் நிதீஷ் குமாரின் கட்சியைவிட அதிக இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

அடுத்தகட்டமாக 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளையும், அதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளி பாஜக இரண்டாம் இடத்தைப் பெற்றது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சவால்விடும் நிலையில் இருக்கிறது. அசாமிலும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால், தென் மாநிலங்களான தமிழ்நாடும், கேரளாவும் பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது.

BJP_UpdateNews360

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின் நாடு முழுதும் தனது ராஜதந்திர நடவடிக்கைகளால் அமித் ஷா பாஜகவை வலுப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு இதுவரை செல்வாக்கு இல்லாத வடகிழக்கு மாநிலங்களையும் அந்தக் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் இதயப்பகுதியாகிய உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தியதால் பாஜக மீண்டும் 2019-ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தென் மாநிலங்களில் கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. தெலங்கானாவிலும் பாஜக வலுப்பெற்றுள்ளது. ஆனால், திராவிட இயக்கங்களால் தொடர்ந்து ஆளப்படும் தமிழகத்தில் இதுவரை பாஜகவால் காலூன்ற முடியாமல் இருப்பது அந்தக் கட்சியின் தலைவர்களுக்குப் பெரும் மனக்குறையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் காலூன்ற வேண்டும் என்று கடுமையான முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. பீகார் தேர்தல் முடிந்தவுடன் தனது முழு கவனத்தையும் தமிழ்நாட்டின் பக்கம் பாஜக திருப்பியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவின் தேர்தல் உத்தியையும், கூட்டணியையும் முடிவு செய்ய அமித் ஷா நவம்பர் 21-ஆம் தேதி தமிழகம் வருகிறார்.

Amit_Shah_UpdateNews360

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. ஆனால், கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசும் பாஜக தலைவர்கள் அடுத்த மாநில ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் என்று பேசிவருகிறார்கள். மேலும், பாஜக தனித்துப்போட்டியிட்டாலும் குறைந்தது 60 தொகுதிகளை வெல்லும் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் சொல்லிவருகிறார். ஆனால், இதுவரை தனித்துப்போட்டியிடப் போவதாக பாஜக தலைவர்கள் யாரும் சொல்லவில்லை. தமிழ்நாட்டில் மூன்றாவது அணி வெற்றிபெறாது என்று முருகன் பேசியிருப்பதன் மூலம் அப்படி ஒரு அணியை அமைப்பதை பாஜக விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஆனாலும், அதிமுகவுடனும் கூட்டணி உறுதிசெய்யப்படவில்லை.

உடல்நிலை பாதிப்பு இருக்கும்போது கொரோனாத் தொற்று குறையாமல் அரசியல் கட்சி தொடங்கமுடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். ஆனாலும் அவரை அரசியல் களத்தில் இறக்க பாஜகவின் முயற்சிகள் தொடர்கிறது. புதிய கட்சி தொடங்கக்போவதாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகன் அழகிரி அறிவித்துள்ள நிலையில், அவரைத் தனது கூட்டணியில் சேர்த்துக்கொள்ளும் என்றும் பேசப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அதிமுக ஒருமனதாக அறிவித்துள்ளது. இதை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என்றும் அதிமுக அறிவித்துவிட்டது. ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜகவின் மத்திய தலைமைதான் முடிவுசெய்யும் என்று சொல்லிவருகிறார். இதனால், வரும் தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடுமா அல்லது கூட்டணி சேருமா என்பது இதுவரை தெரியவில்லை. கூட்டணி அமைத்தால் யாருடன் கூட்டணி என்றும் இதுவரை முடிவுசெய்யப்படாத நிலை இருக்கிறது.

தமிழ்நாடு வரும் அமித் ஷா தமிழக முதல்வர் பழனிசாமியுடன் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையோ, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தையோ அவர் தனியாக சந்திப்பாரா என்பது தெரியவில்லை. அமித் ஷாவின் தமிழக பயணத்துக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அமித்ஷா ரஜினிகாந்தையோ அழகிரியையோ சந்திப்பாரா என்பதும் நவம்பர் 21-ஆம் தேதிதான் தெரியும்.

ஆனால், தமிழக பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து மாநிலத்தின் அரசியல் சூழலை அலசுவார் என்று கட்சியினர் தெரிவிக்கிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் கூட்டணியையும், தேர்தல் உத்தியையும் அமித் ஷா முடிவுசெய்வார் என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவரது வருகைக்குப் பிறகு தமிழகத்தின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

1 thought on “தமிழகத்தில் தாமரையை மலரவைக்க ‘பக்கா பிளான்’ : சாணக்ய வியூகத்துடன் விஜயம் தரும் அமித்ஷா..!!

Comments are closed.