ஜுலை 18ம் இல்ல… நவ.,1ம் இல்ல… உண்மையில் தமிழ்நாடு தினம் எந்த நாள் தெரியுமா..? 3வது குண்டை போட்ட காந்திய மக்கள் இயக்கம்..!!!

Author: Babu Lakshmanan
2 November 2021, 8:15 pm
tn day - updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாடு நாள் தொடர்பாக ஆளும் திமுகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், காந்திய மக்கள் இயக்கம் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக, காந்திய மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பா.குமரய்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய தமிழ்நாடு தினம், தற்போது குழப்பங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தியாவில் 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இதனையடுத்து இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. அந்தத் தேதியைப் பல மாநிலங்கள், மாநில தினமாகக் கொண்டாடி வருகின்றன. இதேபோல மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்து சென்ற நவம்பர் 1ஆம் தேதியைக் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாகக் கொண்டாடுகின்றன.

மொழிவழி மாநிலப் பிரிவினை, தமிழகம் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என்ற கருத்து நிலவினாலும், வட எல்லையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. தலைமையும், தென் எல்லையில் மார்ஷல் நேசமணி தலைமையும் போராடியதன் விளைவாக, இன்றைக்குத் தமிழ்நாடு என்கிற நம் மாநிலம் குறைந்த சேதாரத்துடன், நவம்பர் 1, 1956-இல் மலர்ந்தது. ம.பொ.சி வற்புறுத்தலினால், 1981-இல் முதல்வர் எம்ஜிஆர், நவம்பர் 1-ஆம் தேதியை, தமிழ்நாடு தினமாகக் கொண்டாடினார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின் 2006-இல் முதல்வர் கருணாநிதி, தமிழறிஞர்கள் வற்புறுத்தியதால், தமிழ்நாடு பொன்விழாவைக் கொண்டாடினார்.

இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில், இனி ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்படும் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து கடந்த இரு ஆண்டுகளாக நவம்பர் 1-ஆம் தேதி, தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழறிஞர்கள் வேண்டுகோளின்படி, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியை, தமிழ்நாடு தினமாகக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் ஜனவரி 14, 1969 தேதியைத்தான் கொண்டாட வேண்டும். ஏனென்றால், அன்றுதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்குக் கிடைத்தது.If so, Tamil Nadu Day will be celebrated

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்குத் தமிழக எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், தமிழ்நாடு தினம் தொடர்பாக, அரசு அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு தினம் கொண்டாடிய அமைப்புகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக செய்திகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் பெருந்தன்மையோடு நடந்துகொண்டு, ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பு அளிக்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை, காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள், பிரச்சனைகளைத் திசை திருப்பும் முயற்சியாக அமைந்துவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தொடங்கும் முடிவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கிய நிலையில், கடந்த சில மாதங்களாகவே காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் காந்திய மக்கள் இயக்கத்தின் அறிக்கை பொதுச்செயலாளர் குமரய்யா பெயரில் அறிக்கை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 497

0

0