தமிழகத்தைச்‌ சீரமைப்போம் : தேர்தல்‌ கோஷம்‌ அல்ல… கூட்டுக்‌ கனவு : கமல் அறிக்கை…!!!

Author: Babu Lakshmanan
7 April 2021, 1:34 pm
Kamal Sellur Raju-Updatenews360
Quick Share

சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தல் நிறைவடைந்த நிலையில், மக்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின்‌ பதினாறாவது சட்டமன்ற தேர்தலில்‌ 72% வாக்குப்‌ பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல்‌ தமிழக தேர்தல்‌ வரலாற்றில் இதற்கு முன்‌ இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும்‌ 72% வாக்காளர்கள்‌ தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின்‌ மீது மக்களுக்கு இருக்கும்‌ நம்பிக்கையைக்‌ காட்டுகிறது. அரசியலாளர்களின்‌ பொறுப்பைக்‌ கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என்‌ மனமார்ந்த பாராட்டுக்கள்‌ உரித்தாகுக.

100 சதவிகித பங்கேற்பே ஜனநாயகம்‌ சென்று சேர வேண்டிய இடம்‌. இனிவரும்‌ தேர்தல்களில்‌ நம்‌ பங்களிப்பு இன்னும்‌ சிறப்பாக இருக்கவேண்டும்‌ என்பதுதான்‌ ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என்‌ ஆசை. இந்தத்‌ தேர்தலில்‌ என்னோடு கைகோர்த்து களம்‌ கண்ட மக்கள்‌ நீதி மய்யத்தின்‌ உறுப்பினர்கள்‌, தோழமைக்‌ கட்சிகளின்‌ உறுப்பினர்கள்‌, நண்பர்கள்‌, நலம்‌ விரும்பிகள்‌, சக போட்டியாளர்கள்‌, வாக்காளர்கள்‌, தேர்தல்‌ ஆணையம்‌, ஊடகவியலாளர்கள்‌, அரசு ஊழியர்கள்‌, காவல்துறையினர்‌, சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட சகலருக்கும்‌ எனது மனமார்ந்த நன்றிகளைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

தேர்தல்‌ என்பது முடிவல்ல. மக்கள்‌ பணியில்‌ முடிவென்பதே இடையாது. என்னைப்‌ பொருத்தவரை இந்தத்‌ தேர்தல்‌ ஒரு புதிய தொடக்கம்‌. எனது கட்சியினருக்கும்‌ இது புதிய அனுபவம்‌. நிறைய அனுபவங்களைக்‌ கற்று முன்னகர்ந்திருக்கிறோம்‌. ‘மக்கள்‌ அன்பை விட மகத்தான பலம்‌ இல்லை’ என்பது அதில்‌ முதன்மையானது. தமிழகத்தைச்‌ சீரமைப்போம்‌ என்பது வெறும்‌ தேர்தல்‌ கோஷம்‌ அல்ல. அது ஒரு கூட்டுக்‌ கனவு. அதை நோக்கிய பாதையிலும்‌ பயணத்திலும்‌ சிறிதும்‌ விலகல்‌ இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக்‌ காக்க இன்று போல்‌ என்றும்‌ களத்தில்‌ நிற்போம்‌, எனத் தெரிவித்துள்ளார்

Views: - 251

0

0