தமிழகத்தை பாலைவனமாக்கிவிட வேண்டாம்… அந்த திட்டத்தை உடனே வாபஸ் பெறுங்க : தமிழக அரசுக்கு விவசாய சங்கம் கோரிக்கை!!
Author: Babu Lakshmanan12 January 2022, 7:11 pm
சென்னை : தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டமான ஆற்று மணலை அள்ளுவதற்கான முடிவை கைவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, அண்மையில் மீண்டும் அனுமதியளித்தது. ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000மாக நிர்ணயம் செய்த தமிழக அரசு, மணல் விற்பனைக்கான புதிய விதிமுறைகளையும் வெளியிட்டது. அதன்படி, பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மணலை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு தமிழகத்தை பாலைவனமாக்கும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் கு.நல்லசாமி முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஆறுகளில் படிந்திருக்கும் மணல் பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையால் சேகரிக்கப்பட்டது என்றும், ஆற்று நீரை சுத்தம் செய்வது இந்த மணல், கண்ணுக்குத் தெரியாத நீர்த்தேக்கம் என கூறியுள்ளனர். சுதந்திர இந்தியாவில் ஆற்று மணல் கண்முடித்தனமாக அள்ளப்பட்டதால், பவானி, நொய்யல் போன்ற ஆறுகளில் மணல் முற்றிலுமாக அள்ளப்பட்டு விட்டது என்றும், இன்று பாறைகளுக்கு மேல் தான் தண்ணீர் ஓடிக்கொண்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மணல் கொள்ளையால் நீர் சுத்திகரிப்பு என்பது முற்றிலுமாக முடிந்து போய்விட்ட நிலையில், ஆலைகளின் வடிகாலாகவே ஆறுகள் ஆக்கப்பட்டுவிட்டதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள், கேரளாவில் ஆறுகளில் ஒருபிடி மணலைக் கூட அள்ள முடியாது என்பதையும், கேரளாவில் காவிரி ஆற்று மணல் கிடைக்கும் என்ற அறிவிப்பு இருப்பதுவும் தங்களுக்குத் தெரியும் எனக் கூறியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆற்று மணல் அள்ளப்படாமல், மணலுக்கு மாற்றாக கட்டுமானங்களில் எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் பயன்படுத்தப்பட்டதாகவும், மக்களும் இதனை ஏற்று தங்களை மாற்றிக் கொண்டு விட்ட நிலையில், மீண்டும் ஆற்று மணலை அள்ள முற்படுவது உள்கோக்கம் கொண்டதாகவே கருத வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், திமுக அரசு, ஆற்று மணலை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1000 என்ற அடிப்படையில் விற்பனை செய்ய எடுத்திருக்கும் முடிவு, தமிழகத்தின் சுற்றுச்சூழலை மேலும் மாசுபடுத்தும் என்றும், பாலைவனமாகுவதற்கான வழியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மணல் விற்பனையில் ஊழல், லஞ்சம், முறைகேடு நிறைந்ததாக இருக்கும் என்பது கடந்த காலத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்பதை நினைவில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்து வரும் தலைமுறையை முன்னிறுத்தி நல்லாட்சி நடத்தும் நோக்கில், ஆற்றுமணலை அள்ளி விற்கும் திட்டத்தை கைவிட
வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் இந்தக் கோரிக்கை சரியானதாக இருப்பதாகவும், எனவே, ஆற்று மணல் அள்ளும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சூற்றுச்சூழல் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
0
0