அடிப்படைக் கொள்கைகளில் அசைந்து கொடுக்காத அதிமுக அரசு : இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம்..!

7 September 2020, 6:38 pm
Cm 06 - updatenews360
Quick Share

மத்தியில் ஆளும் பாஜக அரசை எந்தவிதத்திலும் எதிர்த்துக் கேள்வி கேட்காமல் திராவிட இயக்கத்தில் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதாக எதிர்க்கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களை எதிர்ப்பதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதம் அடிப்படைக் கொள்கைகளில் அசையாத உறுதியுடன் அதிமுக அரசு இருப்பதைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

தமிழும், ஆங்கிலமும் மட்டுமே தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் இருந்து வருகிறது. தமிழக அரசின் இந்த இருமொழிக் கொள்கை பேரறிஞர் அண்ணா 1967-ல் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் அவரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவருக்குப் பின்வந்த திராவிட இயக்க அரசுகள் அக்கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. அண்ணாவின் பெயரையே கட்சியின் பெயரில் தாங்கிய அதிமுக அரசும், நிறுவனர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலும் பின்னர் தலைவரான ஜெ.ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் இருமொழிக்கொள்கையை உறுதியாகப் பின்பற்றி வந்தன.

மத்தியில் 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு இந்திக்கு முக்கியத்துவம் தரும் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மத்திய அரசின் இப்போக்கை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் கடுமையாக எதிர்த்து வந்தார். தொடர்ந்து 2019-ல் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக புதிய கல்விக் கொள்கையை அறிவித்தது. மத்திய அமைச்சரவையிலும் அதை நடைமுறைப்படுத்தப்போவதாக அறிவித்தது.

இக்கொள்கையில் மூன்று மொழிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இரு இந்திய மொழிகளும் ஒரு அயல்நாட்டு மொழியும் சேர்த்து மூன்று மொழிகளை மாணவர்கள் பயில வேண்டும் என்று புதிய கல்விக்கொள்கையில் கூறப்பட்டுள்ளது. மொழிக் கொள்கையில் பல இடங்களில் சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இக்கொள்கையே சமஸ்கிருதத்தையும், இந்தியையும் தமிழ்நாட்டில் புகுத்தும் திட்டமென்று கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை வெளிவந்த நிலையில் திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு அண்ணாவின் அடிப்படைக் கொள்கையான இருமொழிக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக திமுக தலைவர் குற்றம் சாட்டினார். உடனடியாக இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநில அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாது என்றும் இருமொழிக் கொள்கையே தொடரும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்றாலும் புதிய கல்விக்கொள்கையின் இதர அம்சங்களில் பல தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எதிரானவையென்றும் அவற்றை அதிமுக அரசு எதிர்க்கவில்லை என்றும் கடும் விமர்சனத்தை வெளியிட்டார். தொடர்ந்து, தமிழக அரசைக் குற்றம்சாட்டி வந்த திமுக தலைவர்கள் மும்மொழிக்கொள்கையை எதிர்ப்பதில், அதிமுக அரசு உறுதியாக இல்லையென்றும், பாஜக அரசு சொல்வதை அதிமுக அரசு இறுதியில் தலையாட்டி கேட்டுக்கொள்ளும் என்றும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகத் தெரிவித்த முதலமைச்சர், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அமைப்பதாக அறிவித்தார். ஆனால், மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்குத் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஸ்டாலின் தொடர்ந்து பேசி வந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கும் விமர்சனங்கள் கடுமையாகின. நேற்று ட்விட்டரில் ‘இந்தி தெரியாது போடா’ என்ற பதிவு பெரிய அளவில் வரவேற்பைப்பெற்றது.

k-p-anbalagan - updatenews360

இன்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவித்து விட்டதாகக் கூறினார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக மக்களின் மனநிலையைத் தெளிவாக பிரதிபலிக்கும் வகையிலும், கட்சியின் அடிப்படைக் கொள்கையான அண்ணாவின் இருமொழிக்கொள்கையில் அதிமுக அரசு உறுதியுடன் இருப்பதை உலகுக்குப் அறிவிப்பதாகவும் அமைச்சரின் கடிதம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பாஜக அரசு சொல்வதைத் தலையாட்டிக் கேட்டுவரும் அரசு என்ற திமுகவின் விமர்சனத்துக்கு சரியான பதிலை கட்சி தந்திருப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், மும்மொழிக் கொள்கையின் பல அம்சங்கள் தமிழக மாணவர்களுக்கு எதிராக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ள கருத்து, தமிழ்நாட்டுக்குப் பாதகமான திட்டங்களை அதிமுக அரசு எதிர்க்கும் என்ற நம்பிக்கையையும் பரவலாக விதைத்துள்ளது.

Views: - 0

0

0