4 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்த பிரச்சனை… மீண்டு(ம்) வந்தது அரசு கேபிள் சேவை ; இல்லத்தரசிகள் ஹேப்பி!!

Author: Babu Lakshmanan
22 November 2022, 9:48 pm
Quick Share

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சரி செய்யப்பட்டு, சிக்னல்கள் முறையாக இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல லட்சம் இணைப்புகளை கொண்ட தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு சேவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரசு கேபிள் டிவி சேவை தமிழகம் முழுவதும் முடங்கியது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக, இல்லத்தரசிகள் பொழுதை போக்க முடியாமல் தவித்தனர். அதுமட்டுமில்லாமல், அரசு கேபிள் டிவி மூலம் பயனடைந்து வந்த பொதுமக்கள், தனியார் கேபிள் இணைப்பிற்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேபிள் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்தாலும், தனியாருக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதால், கேபிள் சேவை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கான சேவையை இடையூறின்றி வழங்கிட உத்தரவு போடப்பட்டுள்ளது. கட்டணம் தரப்படவில்லை என்பதற்காக அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கான சேவையை துண்டிக்கக் கூடாது என்றும், பிரச்சனை தொடர்பாக மத்தியஸ்தர் மூலம் 90 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 4 நாட்களாக முடக்கப்பட்டிருந்த அரசு கேபிள் சேவை மீண்டும் வழங்கப்பட்டதாக அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சரி செய்யப்பட்டு, சிக்னல்கள் முறையாக இயங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 334

0

0