தமிழகம் வரும் மோடியை எதிர்ப்பதா…? ஆதரிப்பதா…? திணறும் திமுக கூட்டணி கட்சிகள்…! ஆயத்தமாகும் அதிமுக…!!
Author: Babu Lakshmanan22 December 2021, 8:00 pm
தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க திட்டமிட்ட, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு, மத்திய பாஜக அரசிடம் அதற்காக அனுமதி கோரியது. அதை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு அனுமதி அளித்தார்.
11 மருத்துவக் கல்லூரிகள்
அது மட்டுமின்றி நாடு முழுவதும் மேலும் 64 மருத்துவக் கல்லூரிகளை கட்டுவதற்கும் மத்திய பாஜக அரசு 2 ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கியது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 25 அரசு மருத்துவ கல்லூரிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்ட தலைநகரங்களில் உள்ளன.
இதனால் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களான திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அப்போதைய அதிமுக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பெரும்பான்மையான பணிகள் முந்தைய ஆட்சி காலத்தில் முடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. கடந்த மே மாதம் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின்பு, புதிய மருத்துவ கல்லூரிகளின் எஞ்சிய கட்டுமான பணிகளையும் செய்து முடித்தது.
பிரதமர் மோடி வருகை
இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வுக்குழு நேரில் வந்து பார்வையிட்டு, புதிய மருத்துவக் கல்லூரிகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கியது.
11 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்படுவதன் மூலம் கூடுதலாக மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 1450 இடங்கள் கிடைக்கும். மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களை கணக்கில் கொண்டால் தமிழக மாணவர்களுக்கு ஒட்டு மொத்தமாக 4,277 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த ஆண்டு முதலே கிடைக்கும். இதனால் தமிழக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் வகையில் இந்த 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அடுத்த மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி விருதுநகரில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
இதற்கான விழா தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடியுடன், ஸ்டாலின் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ முதல் அரசு நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Go Back Modi
அதேநேரம் அரசியல் ரீதியாக மத்திய பாஜக அரசுடன் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்றவை மோதல் போக்கை கொண்டிருப்பதால் சில சிக்கல்களும் எழுந்துள்ளன.
தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தவரை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் #Go Back Modi என்று ட்ரெண்ட் செய்வது வழக்கம். அவர் பயணிக்கும் வழி நெடுக கட்சித் தலைவர்கள் கூடிநின்று எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்களையும் பறக்க விடுவார்கள்.
திமுகவைப் பொறுத்தவரை தற்போது அது மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருப்பதால் மோடியின் வருகைக்கு முன்பு போல எதிர்ப்பு தெரிவிக்காது. அப்படி செய்தால், அது முதலமைச்சர் ஸ்டாலினை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்பதால் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.
ஆனால் மோடி என்றாலே கொந்தளிக்கும் காங்கிரஸ், விசிக, மதிமுக போன்ற கட்சிகளுக்கும், தமிழகத்தில் முந்தைய காலங்களில் மோடி அரசுக்கு எதிராக போராடிய
நடிகர்கள் சூர்யா, சித்தார்த் மற்றும் திருமுருகன் காந்தி, சுந்தரவள்ளி மாதிரியான சமூக போராளிகளுக்கும் இது பெரும் இடியாப்ப சிக்கலாக அமைந்துவிட்டது.
தமிழக அரசு விழா என்பதால் அதில் கலந்துகொள்ள வரும் மோடிக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தால் அது திமுக அரசை அவமதிப்பதுபோல் ஆகிவிடும் என்று திமுக கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. அதேநேரம் ஊடகங்கள் வாயிலாக கண்டன அறிக்கை வெளியிடுவதும் சரியாக இருக்காது. அதுவும் திமுக அரசை விமர்ச்சிப்பது போலாகிவிடும்.
காங்., பரிதவிப்பு
இதில் மிகவும் திண்டாட்டத்திற்கு உள்ளாகி இருப்பது காங்கிரஸ்தான். ஏனென்றால் 11 மருத்துவக்கல்லூரிகளின் திறப்பு விழா விருதுநகரில் நடக்கிறது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர், எதற்கெடுத்தாலும் மோடியை குற்றம், குறை கூறுபவர். அவரும் இந்த விழாவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விழாவை புறக்கணித்தால், மாவட்ட மக்களுக்கு அவர் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் வரும். இதனால் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடி வருகிறார் என்கிறார்கள்.
விழிபிதுங்கிய தலைவர்கள்
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “பிரதமர் மோடி கடந்த காலங்களில் தமிழகத்தில் அரசு விழாவில் பங்கேற்க வந்தாலும் சரி, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, திமுக, காங்கிரஸ், விசிக மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், போன்ற கட்சியினர் அதை ஜீரணிக்க முடியாமல் கொதித்துப் போய் ஏதாவது ஒரு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு, கருப்புக் கொடி காட்டுவதையும், #Go Back Modi என்று ட்ரெண்ட் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படி மூன்று ஆண்டுகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
இப்போது தமிழக அரசு விழாவில் கலந்துகொண்டு 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க மோடி வருகிறார். இதன் மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இனி தமிழக மாணவர்களுக்கு 4277 இடங்கள் கிடைக்கும் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்கிற முழக்கம் இனி தமிழகத்தில் நீர்த்துப்போவதற்கும் வாய்ப்பு அதிகம்.
மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக ராகுல் எதிர்த்து வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் மோடியின் வருகையின்போது எது மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கிப் போயிருக்கிறது. புலிபோல் பாய்ந்த வைகோவும், சிறுத்தையாக சீறிய திருமாவளவனும் வேல்முருகன், ஈஸ்வரன் போன்றோரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அதிமுகவுக்கு அழைப்பு
இந்தக் கல்லூரிகள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதே கட்டிமுடிக்கப்பட்டவை என்பதாலும், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி அதிமுக என்பதாலும் இந்த விழாவில் பங்கேற்கும்படி தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
பிரதமர் கலந்து கொள்வதால் நிச்சயம் மாநில பாஜக தலைவர்களும் புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என்பது நிச்சயம். இதுவும் காங்கிரஸ், விசிக, மதிமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கு எரிச்சலை தரலாம்.
மொத்தத்தில் பார்த்தால் பிரதமர் மோடி தமிழக அரசின் விழாக்களில் கலந்துகொள்ள வருவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்கப்போவது நிச்சயம்.
தவிர, இதற்கு முன்பு தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களையெல்லாம் அவர் நிலைகுலையச் செய்து பதுங்க வைத்துவிடுவார் என்றே சொல்லவேண்டும். கருப்பு பலூனா?… கருப்பு கொடியா?… அப்படின்னா என்னங்க? என்று திமுக கூட்டணி கட்சிகள் கேட்கும் பரிதாப நிலைமைக்கும் தள்ளப்படலாம்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர்.
0
0