அரசு பணிகளில் நேரடி நியமனம்… வயது உச்சவரம்பு 2 ஆண்டுகளாக உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

Author: Babu Lakshmanan
16 September 2021, 8:16 pm
TN Secretariat- Updatenews360
Quick Share

சென்னை : அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வயது உச்சவரம்பு மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த முடிவை அரசு எடுத்ததாகவும் அவர் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், அரசு பணிகளில் நேரடி நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வயது உச்சவரம்பு மேலும் 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது வரம்பு 30-ல் இருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கருணை அடிப்படையில் சேரும் பணியிடங்களுக்கான வயது உச்ச வரம்பில் தற்போதைய நிலையில் மாற்றம் இல்லை. மேலும் மாற்றுத்திறனாளி பட்டியலினத்தவர்களுக்கான சட்டப்படியான வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, மற்றும் தளர்வு உள்ளிட்டவை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Views: - 135

0

0