அரசு ஊழியர்களுக்கு அடித்தது பம்பர் பரிசு… அடுத்தடுத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Author: Babu Lakshmanan
7 September 2021, 10:42 am
CM stalin - updatenews360
Quick Share

அரசு ஊழியர்களுக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று கூடியதும் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் உரையாற்றினார். அப்போது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அவர் பேசியதாவது :- 2022 ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும். காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது உச்சவரம்பு அதிகரிக்கப்படுகிறது. அதாவது, 58ஆக இருக்கும் ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு உதவிபெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும். புதிதாக அரசு பணிகளில் சேரும் பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும். அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்களின் பணிக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 2017,18,19ம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் பணிநீக்க காலம், பணிக்காலமாக முறைப்படுத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கே மாற்றப்படுவார்கள்.

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பதவி உயர்வு தடைபட்டிருந்தால், அதை நீங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஊழியர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், என தெரிவித்தார்.

Views: - 412

1

0