நீட் தேர்வு, 1000 ரூபாய், மின்கட்டணத்தால் அடுத்தடுத்து சிக்கல்… சமாளிக்க முடியாமல் திண்டாடும் திமுக!!!

21 July 2021, 3:41 pm
Quick Share

வெற்றியை கொடுத்த வாக்குறுதிகள்

2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக கொடுத்த மிக முக்கிய வாக்குறுதிகளில் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதாமாதம் உரிமைத் தொகை 1000 ரூபாய், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்,
டீசல் 4 ரூபாயும் குறைப்பு, மாதம்தோறும் மின் கணக்கீடு, உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, கேஸ் சிலிண்டர் மானியம் நூறு ரூபாய் என்று 50-க்கும் அதிகமான முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

நீட் தேர்வு தவிர மற்ற எல்லாமே மக்களுக்கு நேரடியாக பணப்பயன் தரக்கூடியவை.

கடந்த 4 ஆண்டுகளாகவே நீட் தேர்வு தொடர்பாக திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும், தமிழகத்தில் மூலை முடுக்குதோறும் சென்று பிரச்சாரம் செய்து வந்தன. அதுவும் நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை சென்று இறுதிவரை போராடிய அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட பின்பு நீட் தேர்வு ரத்து என்னும் கோரிக்கையை பிரதான பிரசார ஆயுதமாக திமுக பயன்படுத்த தொடங்கியது.

அதன் கூட்டணி கட்சிகள் சில அனிதாவின் ஆன்மா உங்களை சும்மா விடாது என்று சாபம் விட்டதுடன் அதிமுக அரசை சகட்டு மேனிக்கு திட்டியும் தீர்த்தன.

இந்த நிலையில்தான் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் உள்ளூர் சாதாரண அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு போன்ற வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டன.

இதனால் மற்ற வாக்குறுதிகளின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியது. பள்ளி இறுதியாண்டு மாணவர்களும் அவர்களது பெற்றோரும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டத்தை திமுக சொன்னது போல நிறைவேற்றி அதற்கு எப்படியும் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுவிடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்த்தனர்.

stalin-udhayanidhi-updatenews360

ஏனென்றால், தேர்தல் பிரச்சாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுடைய முதல் வேலையே அதுதான் என்று ஆவேசமாக முழங்கினார். திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியும் நீட் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டோம் ஓட ஓட விரட்டுவோம் என்று கொந்தளித்து இருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் திமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் இயற்றப்படும் என்று எல்லா மேடைகளிலும் வாக்குறுதி அளித்தார்.

இப்படி 3 முக்கிய தலைவர்களும் உறுதிமொழி அளித்ததால் திமுக கூட்டணிக்கு வாக்கு குவிந்தன. தேர்தலில் வெற்றியும் கிடைத்தது.

திணறும் திமுக :

ஆனால் திமுக ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்வதற்காக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. இந்த நிலையில்தான் நீட் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

இதனால் மருத்துவ படிப்பு என்னும் லட்சிய கனவு கண்ட 4 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மாணவர்களை மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களையும் கடும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

EPS - stalin - updatenews360

தற்போது இதே பிரச்சனையை அதிமுக கையில் எடுத்துக்கொண்டு திமுக அரசை கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்து வருகிறது. அரியலூர் அனிதாவின் ஆன்மா பேசுகிறது என்ற பெயரில் ஒரு வீடியோவையும் வெளியிட்டு திமுக அரசை திணறடிக்கிறது.

மிக அண்மையில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், “நீட் தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அதிமுக அரசிடம் நாங்கள் கோரினோம். ஆனால் அவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீடுதான் செய்தனர்” என்று கூறியிருந்தார்.

இதைக் கேட்டு கொதித்துப் போன முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “இந்த சட்டத்தை இயற்றும்படி யாரும் அதிமுக அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. தான், அரசு பள்ளியில் படித்தவர் என்பதால் மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து எடப்பாடியார்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்து இயற்றினார்.

இதன் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் 435 பேரின் டாக்டர் கனவு நனவாகியுள்ளது.
ஆனால் சுகாதாரத் துறை அமைச்சரோ முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல நாங்கள் சொல்லித்தான் இதை செய்தோம் என்று கதை அளக்கிறார். அவர் சொல்வது
எவ்வளவு பெரிய பொய் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று ஒரு போடு போட்டார்.

குடும்பத் தலைவிகள் ஏமாற்றம்

அடுத்ததாக குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் மாத உரிமைத் தொகை.

இந்த வாக்குறுதியை திமுக தனது தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி அதற்கு முன்பாக திருச்சியில் நடந்த மாநாட்டிலும் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டது. இதனால் திமுகவுக்கு லட்சோபலட்சம் பெண்கள் தேர்தலில் வாக்குகளை அளித்தனர்.

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்று 2 மாதங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனாலும் 1000 ரூபாய் கிடைத்தபாடில்லை. கொரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்து அன்றாடம் அவதிப்படும் குடும்பத் தலைவிகள் திமுக அரசு இந்தத் தொகையை எப்படியும் மாதாமாதம் தங்களுக்கு வழங்கி விடும் என்ற நம்பிக்கையில் ரேஷன் அட்டைகளில் தங்களுடைய புகைப்படத்தையும் இணைத்தனர். ஆனால் தற்போது நிதி நிலைமை சரியில்லை என்று அரசு கையை விரித்துவிட்டது. வாக்குகளை வாரி வழங்கிய குடும்பத் தலைவிகளோ தற்போது துயரத்தில் மூழ்கிவிட்டனர்.

அடுத்து இன்னொரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்னும் வாக்குறுதி.

இருசக்கர வாகனம் வைத்திருக்கும் பெரும்பாலானோர், இந்த வாக்குறுதியை திமுக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். அதுவும் வாக்குறுதியை நிறைவேற்ற தேதி எதுவும் போட்டோமா? என்று தமிழக நிதியமைச்சர் செய்தியாளர்களிடம் எதிர் கேள்வி கேட்க, அந்த வாக்குறுதியும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.

மாதாமாதம் பெட்ரோலுக்கு செலவிடும் தொகையில் 300 முதல் 500 வரை ரூபாய்
மிச்சமாகும் என்று எதிர் பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகளின் முணுமுணுப்பு இன்னும் அடங்கவில்லை.

பியூஸ் போன மின் கட்டண வாக்குறுதி

மாதாமாதம் மின் கணக்கீடு செய்யப்படும் என்று மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு வாக்குறுதி.

இதனால் 4பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு ஒவ்வொரு மாதமும் 150 முதல் 250 ரூபாய் வரை மிச்சமாகும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இது எப்போது நிறைவேறும் என்பது தெரியவில்லை.

மாறாக, ஏப்ரல் மே ஜூன் மாதங்களில் மின் கணக்கீடு செய்யப்படாததால் ஒவ்வொரு வீட்டுக்கும் மும்மடங்கு நான்கு மடங்கு கட்டணம் செலுத்துங்கள் என்று மின்வாரியம் அனுப்பிய தகவலால் மக்கள் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

eb - updatenews360

வாடகை வீடுகளில் சப்-மீட்டர் வைத்து மின்சாரம் பயன்படுத்துவோர் நிலையோ இன்னும் படுமோசம். அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் ஒட்டு மொத்த மின் கட்டணத்தையும் தங்கள் தலையில் கட்டி விடக்கூடாதே என்ற பயம்.

இது ஒருபுறமிருக்க இன்று கிராமப்புறங்களில் தினமும் 5 மணி நேரம் மின்வெட்டு
சர்வ சாதாரணமாகிவிட்டது. நகர்ப்புறங்களில் குறைந்தது தினமும் 2 மணி நேரம் மின்தடை
என்பது வழக்கமாகிவிட்டது. ஆகமொத்தம் மின்சாரத்தைப் பொறுத்தவரை மும்முனைத் தாக்குதல் நடத்தப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.

திமுக மீது அவநம்பிக்கை

இதுபற்றி அரசியல் நோக்கர்கள் கூறும்போது,” திமுக அரசு இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுமா? என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழத் தொடங்கிவிட்டது. இதை திமுகவும் உணர்ந்துள்ளது. இதனால் தான் முதலில் 9 மாவட்ட ஊராட்சி தேர்தல்களையும், நகராட்சி தேர்தல்களையும் ஒரே நேரத்தில் சந்திக்க திட்டமிட்டிருந்த திமுக தற்போது ஊராட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதிக்குள் நடத்த முடிவு செய்திருக்கிறது.

CM Stalin Order - Updatenews360

நகராட்சி தேர்தல்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளது. ஊராட்சி தேர்தலில் அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பது வெளிப்பட்டால் ஏதாவது ஒன்றிரண்டு வாக்குறுதிகளை சிறு அளவிற்கு நிறைவேற்ற திமுக அரசு முன்வரலாம். மற்றவற்றை படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றும் சொல்லலாம்.

எதைச் செய்ய முடிகிறதோ இல்லையோ, இந்த ஆண்டு நீட் தேர்வு நடந்து விடும் என்பது மட்டும் நிச்சயம். இது தொடர்பாக திமுகவுக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை எளிதில் நீங்காது என்பதும் உண்மை” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

Views: - 174

0

0

Leave a Reply