எடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்!!

28 October 2020, 8:44 pm
eps - updatenews360
Quick Share

சென்னை: கொரோனா பாதிப்பையும் ஊரடங்கையும் மீறி தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பொருளாதாரம் விரைவாக மீண்டுவருவதைக் காட்டும்வகையில் வீடு, மனை விற்பனையும் அதனால் அரசுக்குக் கிடைக்கும் வருமானமும் உயர்ந்து வருகிறது.

ஏற்கனவே, கொரோனாவுக்குப் பின் தொழில் முதலீடுகளில் தமிழகம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பொருளாதார மறுமலர்ச்சியைக் காட்டும் வகையில் வாகன விற்பனையும் குறிப்பாக கிராமப் பொருளாதாரம் உயர்வதை எடுத்துக்காட்டும் டிராக்டர் உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியின் இன்னொரு அடையாளமாக கட்டுமானத்துறையும் வளர்ச்சிபெறுவதை அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள் காட்டுகின்றன.

கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக ரூ. 1,056 கோடி வருமானம் அரசுக்குக் கிடைத்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாத வருமானம் 1,064 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா அடுத்த ஆண்டு மார்ச் மாதந்தான் மீண்டு வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். ஆனால், ஒப்பீட்டளவில் தமிழகம் முன்னிலையில் இருப்பதையே தமிழகத்தில் தற்போது அதிகரித்துள்ள பத்திரப்பதிவு வருமானம் காட்டுகிறது. 2019-ஆம் ஆண்டு எந்தவித பாதிப்பும் இல்லாத ஆண்டாகும். மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த ஆண்டு பத்திரப்பதிவு குறைவதற்குப் பதில் உயர்ந்துள்ளது தமிழகம் தற்போதுள்ள அரசின் பொருளாதார நடவடிக்கைகளால் விரைந்து வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பவதையே எடுத்துக்காட்டுகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

TN Secretariat - Updatenews360

ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே தமிழகத்தில் பத்திரப்பதிவு வருமானம் உயரத்தொடங்கிருக்கிறது. 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ. 786 கோடியாக இருந்த பத்திரத்தாள் விற்பனை இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் ரூ.792 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ. 23 கோடி அளவுக்கே பத்திரப்பதிவு வருமானம் இருந்தது. தற்போது, இந்த வருமானம் பலமடங்கு அதிகரித்துள்ளது.

பத்திரங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு செப்டம்பரில் உயர்ந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு 2 இலட்சத்து 38 ஆயிரத்து 978 பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2 இலட்சத்து 98 ஆயிரத்து 956 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் இரண்டாவது காலாண்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளதாக பொருளாதாரத் தகவல்களிலும் ஆராய்ச்சியிலும் நாட்டில் முன்னணியில் இருக்கும் ‘ப்ரொஜெக்ட் டுடே’ வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை தெரிவித்தது. இரண்டாவது காலாண்டில் ரூ 23 ஆயிரத்து 332 கோடி அளவு முதலீட்டில் 132 திட்டங்களை ஈர்த்துள்ளது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

TN_CM_EPS_UpdateNews360

கொரோனாவுக்குப் பிறகு தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருவதைக்காட்டும் இன்னொரு அறிகுறியாக மாநிலத்தில் வாகன விற்பனை அதிகரித்துவருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையையோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டும் செப்டம்பர் மாத விற்பனை 17.18 சதவீதம் அதிகரித்துள்ளது. தானே விவசாயியாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழக விவசாயிகள் வளமாக இருப்பதை டிராக்டர் விற்பனை இரு மடங்காக உயர்ந்தது எடுத்துக்காட்டுகிறது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை சரிசெய்யும் விதத்தில் அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இதையே வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாகப் பேசுவோம் என்று கூறிவருகிறார். ஆனால் தமிழ்நாடு அரசு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் முன்னணியில் இருக்கிறது என்பதையே தொடர்ந்துவரும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

1 thought on “எடப்பாடியாரின் ஆட்சியில் எழுச்சிகாணும் கட்டுமானத்துறை : தமிழகத்தில் உயர்ந்துவரும் நில விற்பனை.. அதிகரிக்கும் பத்திரப்பதிவுகள்!!

Comments are closed.