12 மாணவர்கள் தற்கொலை… நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்..!

14 September 2020, 1:18 pm
Quick Share

டெல்லி : நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிக்கள் டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களை கூடியது. அப்போது, மறைந்த எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, ஒரு மணி நேரம் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், மீண்டும் அவை கூடியதும் தமிழக அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர். அப்போது, தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு பேசியதாவது :- நீட் தேர்வினால் எழுந்த மன அழுத்தத்தினால் இதுவரை தமிழகத்தில் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் பிளஸ் 2 மாநில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆனால், நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. அதோடு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிய அடுத்த மாதமே நீட் தேர்வு வந்து விடுகிறது. எனவே, அதற்கு தயாராகும் கால அவகாசமும் மாணவர்களுக்கு இல்லை. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை. நமது நாட்டின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனையளிக்கிறது, என்றார்.

Views: - 0

0

0