விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு ரத்து விவகாரம்… இப்போதாவது, அந்த ரகசியத்தை உடைப்பாரா உதயநிதி …?

Author: Babu Lakshmanan
7 January 2022, 8:04 pm
Quick Share

சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், அதன் மீதுதான் எங்களது முதல் கையெழுத்து இருக்கும் என்பதும் மிக முக்கியமான ஒன்று.

நீட் தேர்வு : குழு அமைப்பு

ஆனால் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்பு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனினும், அதில் சட்டச் சிக்கல் இருந்ததால் அதை ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட ஒரு குழுவை திமுக அரசு கடந்த ஜூன் மாதம் அமைத்தது. அந்தக் குழு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு நடத்தி ஜூலை மாத இறுதியில் அரசுக்கு
அறிக்கை தாக்கல் செய்தது.

ak rajan - neet - updatenews360

அதில்” நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதகங்களே அதிகம் எனப் பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கூறியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் சட்டமசோதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் அதற்கு மறுநாள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பெரும் பேசுபொருளாகவும் மாறியது.

நீட் தேர்வு முடிந்த நிலையில், சட்ட மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் திமுக ஆட்சிக்கு வந்ததுமே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்னும் வாக்குறுதி நிறைவேற்றப் படவில்லையே என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்தன.

மீண்டும் விஸ்வரூபம்

இது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய தமிழக அரசு பள்ளி மாணவர்களில் நூற்றுக்கணக்கானோர் நல்ல மதிப்பெண்கள் எடுத்து கட்-ஆப் தகுதியையும் பெற்றுள்ளனர் என்ற தகவலும் வெளியானது. மேலும் விரைவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தொடங்கவும் இருக்கிறது.

இந்த நிலையில்தான் தமிழகத்தில் நீட் தேர்வு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Ramnath_Govind_Republic_Day_UpdateNews360

கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நாடாளுமன்ற திமுக மக்களவை தலைவர் டி ஆர் பாலு எம்பி தலைமையில் தமிழக எம்பிக்கள் சிலர் நேரில் சந்தித்து நீட் விலக்கு தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக குடியரசுத் தலைவரை சந்திக்கும் சூழல் அமையாததால் அவருடைய அலுவலகத்தில் அந்த மனு வழங்கப்பட்டது.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டி ஆர் பாலு தலைமையில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன், முஸ்லிம் லீக் எம்பி நவாஸ் கனி உள்ளிட்ட சில எம்பிக்கள் கடந்த 10 நாட்களாக முயற்சி மேற்கொண்டனர். அதுவும் பலனளிக்கவில்லை.

ஆளுநர் மீது கோபம்

இதனால் டி ஆர் பாலு கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்தக் கோபம் அப்படியே தமிழக ஆளுநர் ரவி மீது திரும்பியதையும் காணமுடிந்தது.

செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “அமித்ஷாவை சந்தித்து பேச தொடர்ந்து முயன்றோம். ஆனால் முடியவில்லை. இதற்கு அரசியல் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. அவர் எங்களை தவிர்க்கிறார் என்று சொல்லமுடியாது.

இதற்கெல்லாம் ஒட்டுமொத்த பொறுப்பு மாநில ஆளுநர்தான். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அதைச் செய்யவில்லை. அவர் அரசியல் சட்டத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டார். எனவே ஆளுநர் பதவி விலகவேண்டும்” என்று ஆவேசப்பட்டார்.

அனைத்துக்கட்சிக் கூட்டம்

திமுகவின் தேர்தல் வாக்குறுதி தயாரிப்பு குழுவின் தலைவராக டிஆர் பாலு இருந்ததால், அவர் இப்படி தமிழக ஆளுநர் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள்.

அவருடைய இந்த கொந்தளிப்பிற்கு பின்பே நீட் தேர்வு விலக்கு பற்றி விவாதிக்க வரும் 8-ந் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

All Party Meeting - Updatenews360

நீட்தேர்வு விவகாரத்தை திமுக அரசு, ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டு அதற்காக தற்போது தீவிரம் காட்டி வருகிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

எளிதான காரியமல்ல

நீட் தேர்வு விலக்கு சாத்தியமா? என்பது குறித்து, சட்ட வல்லுனர்கள் கூறும்போது, “தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட மசோதா கடந்த 4 மாதங்களாக ஆளுநர் ரவியிடம்தான் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் முன்பாக அந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்யவேண்டிய கடமை அவருக்கும் உள்ளது. தனக்கு வரும் கோரிக்கைகளை அப்படியே குடியரசுத் தலைவருக்கு எந்த ஆளுநரும் அனுப்பி வைப்பதும் இல்லை.

மேலும் ஏகே ராஜன் குழு அறிக்கையை சுட்டிக் காண்பித்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

neet - updatenews360

அதாவது 2011 முதல் 2020 வரையிலான காலகட்டத்தை மட்டுமே ஏகே ராஜன் குழு கணக்கில் கொண்டுள்ளது. அதிலும் கூட பல புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை. ஆங்காங்கே நிரப்பப் படாமல் விடுபட்டுள்ளன.

குறிப்பாக 2007 முதல் 2016 வரை தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாத கால கட்டத்தில்
தனியார் பள்ளி மாணவர்கள் 30 ஆயிரம் பேருக்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்துள்ளது. ஆனால் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் வெறும் 300 பேருக்கு மட்டுமே இந்த பத்தாண்டு காலகட்டத்தில் இடம் கிடைத்திருக்கிறது.

இது தமிழக ஆளுநருக்கு தெரியாத விஷயமல்ல. தவிர அண்மையில் ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசிய தமிழக தலைவர்களில் சிலர், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் அதன் மூலம் தனியார் பள்ளி மாணவர்கள்தான் பெரும் ஆதாயமடைவார்கள். அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் ஏகே ராஜன்
குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் உள்ள ஏராளமான முரண்பாடுகளையும் ஆளுநரிடம் விளக்கமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

இந்த விஷயங்களையெல்லாம் சட்ட நிபுணர்கள் மூலம் ஆளுநர் ஆய்வு செய்வதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதனால்தான் தற்போதுவரை தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமசோதா ஆளுநரின் பரிசீலனையிலேயே உள்ளது.

ஒருவேளை, தமிழக அரசு கொடுத்துள்ள புள்ளி விவரங்கள் தவறானவை என்றால் அதனடிப்படையில் நீட் தேர்வுக்கு விலக்கு மசோதாவை மீண்டும் தமிழக அரசுக்கே ஆளுநர் அனுப்பி வைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தவிர குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் இந்த மசோதாவை அனுப்பி வைத்து அது ஏற்கப்பட்டாலும் கூட சுப்ரீம் கோர்ட்டில் யாராவது வழக்கு தொடர்ந்தால் நீட் தேர்வு நடத்துவதற்கு சாதகமாகவே தீர்ப்பும் வரலாம். ஏனென்றால் 2017-ல் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுதான் நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. அதனால் அந்தத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மறுபரிசீலனை செய்வது எளிதான காரியமல்ல” என்று சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

உடைப்பாரா உதயநிதி..?

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் திமுக காலக்கெடுவை நிர்ணயித்து தனக்குத் தானே நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக தலைவர்கள் அனைவருமே, திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்தனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஒருபடி மேலே சென்று, “நீட் தேர்வை எப்படி ரத்து செய்யவேண்டும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதற்கான ஆளுமை எங்கள் தலைவருக்கு மட்டுமே உண்டு. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று அதிரடி பிரச்சாரமும் மேற்கொண்டார்.

Courtesy :Stv news

ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், நீட் தேர்வு ரத்து என்பது கானல் நீராகத்தான் உள்ளது.

இதனால்தான் தங்களுக்கு மட்டுமே தெரிந்ததாக உதயநிதி கூறும் ரகசியத்தை
இப்போதாவது உடைக்கவேண்டும். அந்த ரகசியத்தை பயன்படுத்தி தமிழகத்தில் நீட் தேர்வை
அவர் ரத்து செய்யவேண்டும் என்று தற்போது எதிர்க்கட்சிகள் அவரைக் கேலி செய்து வருகின்றன.

அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வந்ததுமே 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். அதனால் தாய்மார்கள் இப்போதே வங்கிக்கு சென்று 5 பவுன் நகையை அடமானம் வைத்து கடன் வாங்குங்கள் திமுக அரசு அமைந்ததும் உங்கள் நகை கடனை அடைத்துவிடும் என்றும் ஊர் ஊராக உதயநிதி தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.

ஆனால் தற்போது திமுக அரசு கடும் நிபந்தனைகளை விதித்திருப்பதால் நகை கடன் வாங்கிய சுமார் 49 லட்சம் பேரில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது.

இந்த இரு பெரும் விவகாரத்திலும் உதயநிதியின் பெயர்தான் முன்னே நிற்கிறது. அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் மக்களின் இதுதொடர்பான சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தர்மசங்கட நிலை ஏற்படும் என்பதற்காகவே அமைச்சர் பதவியை வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டதாகவும் பேச்சு உள்ளது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

Views: - 534

0

0