தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது…? பெரியார் பல்கலை., வினாத்தாள் கிளப்பிய சர்ச்சை… வாய் திறக்காத திருமா.,!!

Author: Babu Lakshmanan
15 July 2022, 8:29 pm
Quick Share

சர்ச்சை கேள்வி

மிக அண்மையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் பருவத் தேர்வில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற வினா எழுப்பப்பட்டு, அதற்கு மகர்கள், நாடார்கள், ஈழவர்கள், அரிஜன்கள் ஆகிய நான்கில் இருந்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது!

இந்தக் கேள்வி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

periyar-university-salem - updatenews360

“தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்நாளெல்லாம் போராடியவர் தந்தை பெரியார், அவருடைய பெயரில் இயங்கும் ஒரு அரசு பல்கலைக்கழகத்தில் இப்படியொரு கேள்வி எழுப்பப்பட்டு இருப்பதுதான் பெரும் வேதனையாக இருக்கிறது” என்று சமூகநல ஆர்வலர்கள் மனம் குமுறுகின்றனர்.

இந்த விவகாரம் பொதுவெளியில் பெரும் விவாதப் பொருளாக மாறுவதை உணர்ந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் உடனடியாக ஒரு விளக்கம் அளித்தார்.

“முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். வினாத்தாள் பிற பல்கலைக்கழக கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. வினாத்தாள் வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே படித்து பார்க்கும் வழக்கம் இல்லை. இந்த கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

எனினும் சாதி பற்றிய கேள்வி, தமிழக அரசியலில் சூறாவளியை கிளப்பி விட்டிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி இதுதானா?

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசின் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாளில் சாதி பற்றி கேள்வி எழுப்பி இருப்பது வேதனையாக உள்ளது. சமூகநீதி பற்றி பேசும் திராவிட மாடல் ஆட்சி இதுதானா?… என்று கேலியாக கேள்வி எழுப்பி உள்ளார்.

கடும் கோபத்துடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு. இது வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது!

Jayakumar - Updatenews360

வினாத்தாள் வெளியிலிருந்து பெறப்பட்டதுதான் இந்த தவறுக்கு காரணம் என துணைவேந்தர் கூறுவது இந்த குற்றத்தை மூடி மறைக்கும் செயல். வினாத்தாளை பல்கலை. நிர்வாகம் சரிபார்த்திருக்க வேண்டும். அத்தகைய நடைமுறை பெரியார் பல்கலையில் இருக்கும்போது இந்த குற்றம் எப்படி நடந்தது?

சாதிக் கொடுமைகளுக்கு எதிராக போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலையில் இக்கொடுமை நடந்திருப்பதை மன்னிக்க முடியாது. வினாத்தாள் தயாரித்தவர்கள், அதை சரிபார்க்கத் தவறியவர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும்!” என்று வலியிறுத்தி இருக்கிறார்.

இனி கூடாது…

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒரு பக்கம் திமுக ஆட்சி என்கிறோம். சமூக நீதி என்கிறோம். ஆனால் திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பெரியாரின் பெயரில் இயங்கி வரும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் என்ன சமூக நீதியை திமுக பேசுகிறது. அங்கே பணிபுரியும் பேராசிரியர்கள் என்ன மனநிலையில் உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் வருத்தமளிக்கிறது. இனியும் இதுபோல் நடக்கக் கூடாது” என்று தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

சாதி ஆதிக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், குறிப்பிட்ட சாதி ஆதிக்கம் பத்து ஆண்டுகளாக மேலோங்கி நிற்கிறது. தற்போது நடைபெற்ற முதுகலை படிப்பு வரலாறு பாடத்தின் பருவத் தேர்வு வினாத்தாள் தயாரிப்பிலும் அந்த போக்கு வெளிப்பட்டுள்ளது.
பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அவர்களின் ஆர்எஸ்எஸ்-சாதிய அணுகுமுறையால் பல்கலைக்கழகத்தில் சமூகப் பதற்றம் உருவாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பான தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது தமிழ் நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்திடுக!” என்று கொந்தளித்துள்ளார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 27 துறைகளில் வேலை பார்க்கும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்களுக்கு, பதவி உயர்வு, பணி நியமனம் மற்றும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்ற புகார் ஏற்கனவே எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழக அரசுக்கும், உயர்கல்வித்துறை செயலாளருக்கும் புகார்களை அனுப்பியும் வைத்துள்ளனர். அதில் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும், பணி நியமனம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. இப்போது, சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கேள்வியும் வினாத்தாளில் எழுப்பப்பட்டு பிரச்சினையை பூதாகரமாக்கி உள்ளது.

அதுவும் சமூகநீதி பற்றி பேசும் திமுக ஆட்சியில் இது போன்றதொரு பிரச்சினை வெடித்திருப்பது, கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது.

சமூக நீதி கேள்விக்குறி

இதுபற்றி மூத்த அரசியல் நோக்கர்கள் கூறும்போது :- “முதுகலை இரண்டாம் ஆண்டு வரலாறு படிக்கும் 2 ஆயிரம் மாணவர்கள்தான் தேர்வை எழுதி இருப்பார்கள் என்றாலும் கூட தமிழக மக்கள் அனைவருடைய மனதை வெகுவாக பாதிக்கும் ஒரு விஷயமாக இது அமைந்துவிட்டது. சமூக நீதியை பின்பற்றுகிறோம் என்று திமுக அரசு வெளிப்படையாக கூறிவந்தாலும் அதை கல்வி நிறுவனங்களில் சரியான முறையில், கண்காணிக்க தவறி வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இல்லையென்றால் இதுபோன்ற கேள்வி, பல்கலைக்கழக வினாத்தாளில் எழுப்பப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்று கூறலாம்

Cm Stalin - Updatenews360

மேலும் கடந்த அதிமுக ஆட்சியின்போது தலைமைச் செயலாளரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த பின்பு, “எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வில்லை. நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?” என்ற கேள்வியை டி ஆர் பாலு முன்பாக திமுக எம்பி தயாநிதிமாறன் எழுப்பினார். அப்போது திமுக கூட்டணி கட்சிகளான விசிகவோ
மதிமுகவோ இதை கண்டிக்கவில்லை.

மவுனம் ஏன்..?

அதேபோல திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, 4 மாதங்களுக்கு முன் விருதுநகரில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது ஏழைப்பெண் ஒருவரை திமுக இளைஞரணியைச் சேர்ந்த இருவர் உள்பட 7 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையான செயலை பட்டியலின மக்களின் ஏகபோக பிரதிநிதி என்று தன்னை கூறி கொள்ளும் திருமாவளவன் கண்டிக்கவே இல்லை.

அதேபோல்தான் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், தனது துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரின் சாதியை குறிப்பிட்டு கோபமாக பேசியதாக கூறப்பட்ட விவகாரத்திலும் திருமாவளவன் வாயே திறக்கவில்லை. இதுபோன்ற சாதிய கொடுமை நிகழ்வுகள் குறித்து ஸ்டாலின் அரசை விசிகவும் மதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற திமுக கூட்டணி கட்சிகளும் கண்டிக்காத காரணத்தால்தான், அரசு பல்கலைக்கழகங்களில் சாதிய உணர்வோடு உள்ளவர்களின் கொடூர எண்ணம் இப்படி வினாத்தாள் மூலம் வெளிப்படுகிறதோ என கருதவும் தோன்றுகிறது.

எனவே பட்டியலின மக்களுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் அநீதியை குறிப்பிட்ட விஷயங்களில் மட்டும் கண்டிக்க மறந்துவிடும் போக்கை திமுக கூட்டணி கட்சிகள் கைவிடவேண்டும். குறிப்பாக சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை பற்றி பேசும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பட்டியலின மக்களுக்கு யார் மூலம் அநீதி நிகழ்ந்தாலும் அதை வன்மையாக கண்டிக்க முன்வர வேண்டும். பல்கலைக்கழக வினாத்தாள் பற்றிய விவகாரத்தில் தங்களது கொந்தளிப்பை தற்போது விசிக காட்டி இருப்பதுபோல் மற்றவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும். அதுதான் சமூகத்திற்கும் நல்லது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 539

0

0