அரசியலில் குதிக்கும் நடிகர் சூர்யா… ? மைத்துனி நக்மா போட்டுக்கொடுத்த ‘ரூட்’…!!

Author: Babu Lakshmanan
18 August 2021, 1:49 pm
Surya - congress - updatenews360
Quick Share

கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகில் அரசல் புரசலாக ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. 47 வயது நடிகர் சூர்யா, எந்த நேரத்திலும் தமிழக அரசியல் களத்தில் குதிப்பார், என்பதுதான் அது.

அழைப்புக்காக காத்திருக்கும் சூர்யா..?

அவர் சீமான், கமல் போல தனிக்கட்சி தொடங்க போகிறாரா? என்ற கேள்வி எழுவதற்கு 100% வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவருக்கும், அவருடைய தந்தை சிவகுமாருக்கும் அது சொந்தக் காசில் சூனியம் வைத்த கதை என்பது நன்றாகவே தெரியும்.

நீட் தேர்வை எதிர்த்து,கடந்த 4 ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் சூர்யாவுக்கு திடீரென அரசியல் மீதான மோகம் அதிகரித்துள்ளது. அதற்காக ஒரு முன்னணி கட்சிக்கு இரண்டு ஆண்டுகளாக தூது வீட்டுக்கொண்டே இருந்தார். தனது அரசியல் ஆசையை ஜாடை மாடையாக சுட்டிக் காட்டவும் செய்தார்.

ஆனால், “இவரை உள்ளே அனுமதித்தால் கட்சியில் சூப்பர் ஹீரோ ஆகி விடுவார், பிறகு கட்சியில் உச்சபட்ச பதவியும் கேட்பார். எனவே நம் கட்சிக்கு அவருடைய பங்களிப்பு எதுவும் தேவை இல்லை. அவர் வந்தால் இங்கே இருக்கும் ஒன்றிரண்டு நடிகர்களுக்கும் எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்” என்று அஞ்சி அந்தப் பிரதான கட்சி சூர்யாவை சீண்டவே இல்லை.

சொகுசு காரால் வந்த ரவுசு

அதேபோல கடந்த ஜூன் மாதம் நடிகர் விஜய்க்கு, அவருடைய பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் ரசிகர் மன்றத்தினர் வைத்த, “தம்பி வா! தலைமை ஏற்க வா!” என்ற வாசகங்களுடன் அச்சிடப்பட்டு
திண்டுக்கல் நகர் முழுவதும் ஓட்டப்பட்ட போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் தேவையற்ற விமர்சனங்களை நடிகர் விஜய் சந்திக்க நேர்ந்தது. இதுவும் சூர்யாவுக்கு நன்றாகத் தெரியும்.

vijay - updatenews360

இந்த நிலையில்தான், சொகுசு கார் நுழைவு வரி பிரச்சனையில் நடிகர் விஜய் வசமாக சிக்கிக்கொண்டார். இதனால் அவருடைய பெயர் பெரிதும் ‘டேமேஜ்’ ஆனது. இதைக்கண்ட சூர்யா அரசியலை விட்டு சற்றே ஒதுங்கித்தான் இருந்தார்.

அதேநேரம் நீட் தேர்வு விவகாரத்தில் அவர் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. இதனால் நடிகர் சூர்யாவை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி விட்டனர்.

காங்., விழாவில் சிவக்குமார்

அவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியாமல் திணறி சூர்யா மௌனம் காத்து வருவதும் கண்கூடாகத் தெரிகிறது. இதனால்தான் தீவிர அரசியலில் இறங்கவேண்டும் என்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கி உள்ளது. அதற்கு அச்சாரமான ஒரு நிகழ்வு, இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை சத்தியமூர்த்திபவனில்
நிறுவப்பட்ட கைராட்டையை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திறந்து வைத்தார். இந்த விழாவில் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாரும் கலந்துகொண்டார். இது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

பொதுவாக இதுபோன்ற அரசியல் ரீதியான நிகழ்வுகளில் சிவகுமார் பங்கேற்பது கிடையாது. அதனால் அவர் எதற்காக கலந்துகொண்டார் என்பது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் புதிராக இருந்தது.

இக்கூட்டத்தில் சிவகுமார் எதுவும் பேசவில்லை. ஆனாலும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேசுகையில், “பழுத்த தேசியவாதியான சிவகுமார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது 100 சதவீதம் பொருத்தமானது” என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கோபண்ணாவுக்கு சிவகுமார் நெருங்கிய நண்பர். இதன் அடிப்படையில் சிவகுமாரை, கே.எஸ்.அழகிரி தொடர்புகொண்டு விழாவுக்கு அழைத்திருக்கிறார். சிவகுமாரும் அதை ஏற்றுக்கொண்டு வந்துவிட்டார் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் காங்கிரசில் இணைவதற்கு முன்னோட்டமாகத்தான், தனது தந்தையை இந்த விழாவிற்கு அனுப்பி அவருக்கு அங்கு வரவேற்பு எப்படி கிடைக்கிறது என்பதை நடிகர் சூர்யா நோட்டம் பார்த்திருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

நக்மாவின் தூண்டுதலா..?

இதுகுறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில், வேறு விதமாக பேசப்படுகிறது. அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவிகளில் ஒருவரான நடிகர் சூர்யாவின் மைத்துனி நக்மாவின் ஆலோசனையின் பேரில்தான் சிவகுமார் குடும்பம் காங்கிரசில் இணைவதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

தனது தங்கை ஜோதிகாவிடம் இதுபற்றி நக்மா தொடர்ந்து பேசி வருவதாகவும் இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விரைவில் சந்தித்து பேச வைப்பதாக நக்மா உறுதி அளித்திருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

இதனால் ராகுலிடம் விரைவில் அனுமதி பெற்று, சூர்யா காங்கிரசில் சேர்க்கப்படுவார் எனத்தெரிகிறது.

இதுபற்றி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறும்போது, “சமீப காலமாகவே புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளில் நடிகர் சூர்யா தனது ஆவேச கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தும் வருகிறார்கள். சூர்யாவின் மனைவி ஜோதிகா கோவில்கள், மருத்துவமனைகள் பற்றி பேசியதும் பாஜகவினரால் சர்ச்சையாக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஒளிப்பதிவு திருத்த சட்டத்துக்கு
எதிராகவும் சூர்யா குரல் கொடுத்து வருகிறார்.

இப்படி தேசிய சிந்தனை கொண்ட சிவகுமார், சூர்யா, ஜோதிகா மூவரும் காங்கிரசில் இணைவதில் எந்த தவறும் கிடையாது. இன்று தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய்,
சூர்யா, சித்தார்த், அர்ஜுன் என்று பலர் காங்கிரஸ் மனப்பான்மையோடுதான் இருக்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக இவர்கள் இருக்கிறார்கள் என்றால் காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளனர் என்றுதான் அர்த்தம்” என்று குறிப்பிட்டனர்.

காங்.,சில் சேர வாய்ப்பு

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும்போது, “நடிகர் சூர்யா முன்னணி கட்சி ஒன்றில் இணைவதற்குத்தான் முதலில் விரும்பினார். அதுதான் அவருடைய லட்சிய கனவாகவும் இருந்தது.
ஆனால் அவர் நினைத்ததுபோல் அங்கே நுழைவது லேசான காரியமாக இல்லை. மேலும்
அக்கட்சியின் கதவு கடைசி வரை சூர்யாவுக்கு திறக்கப்படவே இல்லை. இனி எந்த முன்னணி நடிகர்களுக்கும் அந்தக்கட்சியில் இடம் கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டதால்தான், காங்கிரசில் சேருவதற்கு அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்கு இணைப்பு பாலமாக அவருடைய மைத்துனி நக்மா உள்ளார். எனவே சிவகுமார் குடும்பத்தினர் காங்கிரசில் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அனேகமாக தமிழகத்தில் நகராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக அவர்கள் காங்கிரசில் இணையலாம்” என்று தெரிவித்தனர்.

நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் காங்கிரசில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 661

0

1