2021 தேர்தல் களம் : ஆட்சியில் 2 தசாப்தங்கள்….!! சகாப்தம் படைத்த அதிமுக !!!

1 January 2021, 4:32 pm
admk cover - updatenews360
Quick Share

அதிமுகவின் தமிழக ஆட்சி கால வரலாற்றில் 2021-ஆம் ஆண்டு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆம், தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் இதுவரை நிகழ்த்தாத ஒரு சாதனையை இந்த புதிய ஆண்டில் அடியெடுத்து வைத்த முதல் நாளிலேயே அதிமுக அரசு ஓசையின்றி நிகழ்த்தியுள்ளது.

அட ஆச்சர்யமாக இருக்கிறதா? என்னவென்று புரியவில்லையா?…
இன்னும் என்ன சஸ்பென்ஸ்?… நேரடியாகவே விஷயத்திற்கு வருவோம்.

தமிழ்நாட்டில் 1952 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 15 முறை தேர்தல் நடந்து முடிந்துள்ளன. இதில் 7 முறை அதிமுகவும், 5 தடவை திமுகவும், 3 முறை காங்கிரசும் ஆட்சியை பிடித்துள்ளன.

இதில் இரு தசாப்தங்கள், எளிதில் புரியும்படி சொன்னால் இரு பத்தாண்டுகள் தொடர்ச்சியாக தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்துள்ளது.

அதாவது 1977 முதல் 1987 வரை ஒரு தசாப்தமும், 2011 முதல் 2021 வரை இன்னொரு தசாப்தமும் என மொத்தம் இருமுறை பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அரிய சாதனையை அதிமுக படைத்து இருக்கிறது. அதுவும் இருவேறு நூற்றாண்டுகளில் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு மிகப்பெரிய சகாப்தம் என்றே சொல்லவேண்டும். இதில் முதல் 10 ஆண்டு காலம் அதிமுகவை நிறுவிய எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி ஆகும். அவர் இந்த பத்தாண்டுகளில் மூன்று முறை சட்டப் பேரவை தேர்தலை சந்தித்து, மூன்றிலுமே மாபெரும் வெற்றி கண்டு முதல்வர் ஆனவர்.

எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை யாராலும் சட்டப் பேரவை தேர்தல்களில் அவரை வெற்றிகொள்ள இயலவில்லை. மற்றவர்களால் இலவு காத்த கிளியாகத்தான் இருக்க முடிந்தது.

MGR-updatenews360

1980 ஆம் ஆண்டு அவருடைய ஆட்சியை, திமுகவின் வற்புறுத்தலால் மத்திய காங்கிரஸ் அரசு கலைத்தபோதிலும், அதே ஆண்டு நடத்தப்பட்ட சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரவுடன் எம்ஜிஆர் அமோக வெற்றி கண்டார். 1984 தேர்தலில் நோய்வாய்பட்ட நிலையிலும் அமெரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவாறே வெற்றி வாகை சூடினார்.

2011 தேர்தலில் வென்ற ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக 2016-ல் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவர், ஏற்கனவே 1991 மற்றும் 2001 சட்டப் பேரவை தேர்தல்களில் வென்று முதல்வர் ஆனவர் என்பதும் நினைவு கூரத்தக்கது.

2016-ல் ஜெயலலிதா மரணம் அடையாமல் இன்றுவரை உயிருடன் இருந்திருந்தால் எம்ஜிஆரைப் போலவே அவரும் தொடர்ந்து10 ஆண்டுகள் ஆட்சி செய்த சாதனையை நிகழ்த்தி இருப்பார். அப்படி நடக்காமல் போனது துரதிர்ஷ்டமே.

அதிமுகவின் இந்த தொடர் இரு முறை தசாப்த வெற்றிகளில் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்குமான அணுகு முறையில் ஒரு சிறிய வேற்றுமை மட்டுமே இருக்கிறது. எம்ஜிஆர் பத்தாண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த போதிலும் அவர் கூட்டணி அமைத்தே தேர்தல் களம் கண்டார்.

jayalaitha - updatenews360

ஆனால் 2016 ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எம்ஜிஆர் கண்ட சின்னமான இரட்டை இலையில் வேட்பாளர்களை நிறுத்தி136 தொகுதிகளில் வெற்றி கண்டு ஆட்சியை பிடித்தார், ஜெயலலிதா.

அதாவது சிறு சிறு கட்சிகளையும் கூட்டணியாக சேர்த்துக் கொண்டு அத்தனை தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட வைத்து ஜெயித்தது. இதுவும் தமிழக அரசியலில் யாரும் நிகழ்த்தாத சாதனை.

ஜெயலிதாவின் மறைவைத் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியும், மாபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா அடியொற்றியே ஆட்சி நடத்தி வருகிறார்.

எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தமிழகத்தை வெறுமனே ஆட்சி செய்து விட்டு போகவில்லை. அவர்கள் நிகழ்த்திய சாதனைகள் அளப்பரியவை. அவை தமிழக வரலாற்றிலும் இடம் பிடித்தவை.

எம்ஜிஆர் தனது ஆட்சியில் படைத்த சில சாதனைகள்.

 • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவு, இலவச சீருடை, காலணிகள் பாடப்புத்தகம் வழங்கும் திட்டம், தமிழ் எழுத்து சீர் திருத்தம்.
 • படித்துவிட்டு வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை, ஏழை முதியோருக்கு மாதாந்திர உதவித்தொகை.
 • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விதை மானியம், பயிர் பாதுகாப்பு வழங்கும் திட்டம்.
 • குடிசைவாழ் மக்களின் வீடுகளுக்கு இலவச மின் விளக்கு, நெசவாளர்கள் கடன் தள்ளுபடி, போலீசாரின் கெடுபிடியை தடுக்க சைக்கிளில் இருவர் பயணிக்க அனுமதி.
 • கிராம முன்சீப் பதவிகளை அடியோடு ஒழித்துக்கட்டி, கிராம நிர்வாக அதிகாரி பதவியை உருவாக்கி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.
jaya trend - updatenews360

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளில் சில.

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு.

*மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்.

 • ஏழைக் குடும்ப பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம், சீர்வரிசை வழங்கும் திட்டம்.
 • நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ விலையில்லா அரிசி.
  *தொட்டில் குழந்தை திட்டம் *கந்துவட்டி தடுப்பு சட்டம், நில அபகரிப்பு தடுப்பு சட்டம்.
  *இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்.
  *சென்னைக்கு வீராணம் குடிநீர் திட்டம். வீடுகள், கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டம்.
TN_CM_EPS_UpdateNews360

தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியிலும் பல்வேறு புதிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

 • அரசுப் பள்ளிகளில் பயிலும்
  மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு, மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள்.
 • தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு.
 • தொழில் முதலீடாக 3 லட்சத்து 431 கோடி ரூபாய் ஈர்ப்பு.
  *பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2500.
  *காவிரி டெல்டா பகுதிகளைப் பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலம் அமைப்பு.
 • மாநிலம் முழுவதும் ஏரி, குளங்கள், ஊரணிகள், குட்டைகள் ஆகியவற்றை தூர்வாரி மேம்படுத்தும் குடிமராமத்து திட்டம்.
 • 1532 கோடி ரூபாயில் அத்திக்கடவு-அவிநாசி பாசன பயன்பாடு, குடிநீர், நிலத்தடி நீர் செறிவூட்டும் நீரேற்று திட்டம்.
  *அரசு பேருந்துகளில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்துகள் இயக்கம்.

இப்படி எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசின் சாதனை பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது.

எனவே, வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக மூன்றாவது முறையாக வெற்றி கண்டு ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்கும் என்று நம்பலாம்.

Views: - 10

0

0