சசிகலாவின் பின்னால் பதுங்கும் ஓபிஎஸ்… தர்மயுத்தத்திற்கு மன்னிப்பு கேட்பாரா…? சந்திக்கத் துடிப்பதற்கான பின்னணி…!!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 7:42 pm
Quick Share

தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்கால அரசியல் நெருக்கடியால் இன்று
தனி மரம் ஆகிவிட்ட ஓ பன்னீர்செல்வம் வேறு வழியின்றி பாஜகவின் முழுநேர விசுவாசியாக மாறிவிட்டதை அதிமுக தொண்டர்களில் பெரும்பாலானோர் அறிந்தே உள்ளனர்.

இது அவருக்கு ஏற்பட்ட காலத்தின் கட்டாயம் என்றாலும் கூட கடந்த
9 மாதங்களாக அதிமுகவின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக அவர் பகீரத பிரயத்தனம் மேற்கொள்வதுதான், மிகுந்த வேதனை அளிக்கும் விஷயம்.

தர்மயுத்தம்

2017-ம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் விலகியபோது யார் யாரையெல்லாம் மிகக் கடுமையாக எதிர்த்தாரோ அவர்கள் எல்லோரும் இன்று தனக்கு ஆதரவு தர மாட்டார்களா?… என்று அவர் ஏங்கவும் செய்கிறார்.

2017 பிப்ரவரி 7ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி முன்பாக ஓபிஎஸ் திடீரென அமர்ந்து தியான கோலத்தில் தர்மயுத்தமும் நடத்தினார். அன்று அவர் ஆவேசமாக பேசியதன் சாராம்சம் இதுதான்.

“முதலமைச்சர் பதவியிலிருந்து விலகக் கோரி எனக்கு சசிகலா தரப்பிலிருந்து பலமுறை நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டு வருவதே நமது நோக்கம். ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை நடைமுறைகள் என்னை வேதனைப்பட வைத்தது. புரட்சித்தலைவி அம்மாவை வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து இருக்க வேண்டும். ஆனால் அது நடக்க விடாமல் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் தடுத்துவிட்டனர்.

அம்மாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தீரும் வரை எனது தர்மயுத்தம் தொடரும். ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தவேண்டும். நமது அடிப்படை கோரிக்கை சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்பதுதான். ஏனென்றால் சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதலமைச்சராகவோ ஆக்க வேண்டும் என்று ஜெயலலிதா ஒருபோதும் கூறியது இல்லை. மக்கள் ஆதரவோடு, பெண்கள் ஆதரவோடு தர்மயுத்தம் வெல்லும்.

சசிகலா

இப்போது சசிகலா பற்றி 10 சதவீதம் தான் சொல்லி இருக்கிறேன். மீதி 90 சதவீதத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன்” என்று கொந்தளிக்கவும் செய்தார். அதுமட்டுமின்றி 6, 7 மாதங்களுக்கு பின்பு தனது அணியை அப்போதைய முதலமைச்சர்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணைப்பதற்கான சமரச முயற்சியில் டெல்லி பாஜக மேலிடம் ஈடுபட்டபோது சில கடும் நிபந்தனைகளையும்
ஓ பன்னீர்செல்வம் விதித்தார். அதில் சசிகலாவையும், டிடிவி தினகரனையும் ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளவே கூடாது என்று கறார் காட்டவும் செய்தார்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்றைய அமைச்சர்கள், ஆதரவாளர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே, தனது அணியை அதிமுகவுடன் இணைக்கவும் செய்தார். அதன் பலனாக ஓபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

ஆனால் 2021தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு ஓபிஎஸ்சின் போக்கு அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.

கடந்த தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் இருந்த மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் அவருடைய போடிநாயக்கனூர் தொகுதி தவிர வேறு எங்குமே அவர் பிரச்சாரம் செய்ய செல்லவில்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக இன்று தென் மற்றும் மத்திய மாவட்டங்களில் தனக்கு அபரிமிதமான ஆதரவும் செல்வாக்கும் இருப்பதாக கூறிக்கொள்ளும் ஓபிஎஸ் அக்கறையுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தால் இன்னும்
46 தொகுதிகள் வரை அதிமுகவிற்கு கிடைத்திருக்கும். திமுக ஆட்சியும் அமைந்திருக்காது என்பது நிதர்சனமான உண்மை.

ஆனால் அதிமுக ஆட்சி அமைந்து விட்டால் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்ற நிலைப்பாட்டை கட்சி எடுத்திருந்ததால் ஓபிஎஸ் பிரச்சாரத்தில் ஈடுபாடு காட்டவே இல்லை என்பதும் நிஜம்!

யூடேர்ன்

இதனால் கட்சி தொண்டர்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு அடியோடு இல்லை என்பதை தாமதமாக உணர்ந்து கொண்ட ஓபிஎஸ், அதிமுகவில் யாரை இணைக்கக் கூடாது என்று 2017-ல் நிபந்தனை விதித்தாரோ அதையெல்லாம் அடியோடு மறந்துவிட்டு சசிகலாவையும் டிடிவி தினகரனையும் மீண்டும்
கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று ‘யூ டேர்ன்’ அடிக்கத் தொடங்கிவிட்டார்.

அதுமட்டுமின்றி ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் முன்பாக சசிகலாவுக்கு ஆதரவாகவே கருத்தும் தெரிவித்தார். முன்பு அவர் மீது குற்றம்சாட்டியதை மறந்தும் போனார்.

OPS - Updatenews360

அதிமுகவில் ஒற்றை தலைமை இருந்தால்தான் 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும், இரட்டை தலைமையால் எதுவும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் கட்சித் தொண்டர்களிடம் வலுவாக ஏற்பட்ட பிறகு தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சசிகலாவையும், டிடிவி தினகரனையும் சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று அவ்வப்போது கூறுவதை ஓபிஎஸ் வழக்கமாக்கியும் கொண்டார்.

அதுவும் கடந்த ஜூலை 11ம் தேதி காலை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்று, சூறையாடிய காட்சி அனைத்து ஊடகங்களிலும் வெளியான பின்பு அவருடைய நிலைமை இன்னும் மோசமாகிப் போனது.

அதனால் முன்பை விட சசிகலா, டிடிவி தினகரன் மீதான பாசம் பல மடங்கு பொங்குகிறது. இருவரையும் சந்திப்பேன் என்று தொடர்ந்து கூற ஆரம்பித்து விட்டார். என்ற போதிலும் இருவரையும் அவர் பலமுறை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் அவ்வப்போது தகவல் கசியவும் செய்தது. இதன்பிறகு தனிக்கட்சி நடத்தும் டிடிவி தினகரன் பற்றி பேசுவதை ஓபிஎஸ் குறைத்துக் கொண்டார்.

இப்போது சசிகலாவுடன் அரசியல் ரீதியாக கைகோர்த்து விட்டால் அதுவே தனது வாழ்நாள் புண்ணியம் என்ற நிலைக்கு அவர் வந்துவிட்டதும் தெரிகிறது.

அதனால்தான் சசிகலாவை இப்போது சந்திப்பேன், அப்போது சந்திப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஓபிஎஸ் மிக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். அதற்கு முன்பாக உங்களுக்கு முறைப்படி தகவலும் தெரிவிப்பேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எதற்காக அவர், இப்போது அப்படிச் சொல்கிறார்?… அதற்கான அவசியம் என்ன வந்தது?… என்ற கேள்விகளும் எழுகின்றன.

மாற்றம் நிகழாது

அரசியல் பார்வையாளர்கள் இது குறித்து கூறும்போது, “தனிப்பட்ட முறையில் இதுவரை ஓபிஎஸ் சசிகலாவை சந்தித்தது இல்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அவருடைய மனைவி மரணமடைந்தபோது சசிகலா நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகுதான், ஓபிஎஸ்சிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டது. இனியும் அவருடன் பகைமை கொள்வது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு ஓபிஎஸ் வந்திருக்க வாய்ப்பும் உள்ளது. அதேநேரம், அவரை தனது அணியில் சேர்த்துக் கொள்வதன் மூலம், கட்சியில் தனக்கு கூடுதல் பலம் கிடைக்கும் தென் மாவட்டங்களிலும் தனது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் கணக்கு போட்டிருக்கலாம்.

ஆனாலும் இருவரின் அதிகாரப்பூர்வ சந்திப்பின்போது, சசிகலா பற்றி 2017 பிப்ரவரி மாதம் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அடுக்கிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. அதேநேரம் ஓபிஎஸ் தன்னை சந்தித்தால் தீவிர அரசியலில் குதிக்கலாம் என்கிற எண்ணமும் சசிகலாவிடம் ஏற்படலாம்.

ஏனென்றால் சொத்து குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறை தண்டனை முடிந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சசிகலா காரில் திரும்பியபோது, இதோ ஒருவர் புறப்பட்டு விட்டார் இனி அதிமுக என்ன ஆகப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உற்சாகத்துடன் பேசும் அளவிற்கு சசிகலா அரசியலில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு அப்போது எழுந்தது. ஆனால் வழிநெடுக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தது எல்லாம் டிடிவி தினகரனின் ‘செட்டப்’ என்பதை பின்னர் அறிந்து கொண்ட சசிகலா அதன் பிறகு சில காலம் அரசியலில் ஈடுபடவில்லை. இப்போது அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஓபிஎஸ் மூலம் அவருக்கு ஒரு அரிய வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

இன்று ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா மூவருக்கும் தமிழக மக்களிடம் ஏதோ அமோக செல்வாக்கு இருக்கிறது என்பது போல சில முன்னணி அச்சு, காட்சி ஊடகங்கள் அன்றாடம் பிரேக்கிங் நியூஸ் போடுகின்றன. பல அரசியல் விமர்சகர்களும் வரிந்து கட்டிக்கொண்டு கோயபல்ஸ் பாணியில் டிவி விவாதங்களில் அள்ளியும் விடுகின்றனர். ஆனால் நடுநிலை நோக்கோடு அரசியலைப் பார்ப்பவர்களும், உண்மையான அதிமுக தொண்டர்களும் இதைப் பார்த்துவிட்டு வயிறு குலுங்க சிரிக்கத்தான் செய்கின்றனர்.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை நிறையவே டேமேஜ் செய்ய முடியும். எதிர்வரும் தேர்தல்களில் திமுகவுக்கு கடுமையான போட்டியாளர்களும் இருக்க மாட்டார்கள் என்ற குறுகிய எண்ணத்தோடுதான் இந்த விவாத நாடங்கள் அன்றாடம் நடத்தப்படுகின்றன என்பதை ஒவ்வொரு அதிமுக தொண்டனும் அறிவான். அதனால் ஓபிஎஸ் சசிகலாவை சந்தித்து பேசுவதால் தமிழக அரசியலில் எந்தவொரு மாற்றமும் நிகழப் போவதில்லை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 104

0

0