சென்னை குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்தி காட்சிப்படுத்தப்படும் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

Author: kavin kumar
18 January 2022, 9:42 pm
Quick Share

சென்னை: டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் பங்கேற்க வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உருவாக்கப்பட்ட ஊர்திக்கு இந்த நிபுணர் குழு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். எனினும் தமிழக ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்த அலங்கார ஊர்தி இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பிவைக்கப்படும். எந்தவித காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாடு அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டது குறித்து எனது வருத்தத்தை நேற்று பிரமருக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.

விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தையும், தீரத்தையும் நினைவுக்கூறும் விதமாக தமிழ்நாடு ஊர்தி வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பில் தமிழ்நாட்டின் பங்களிப்பு வரலாற்றில் மிகவும் முக்கியமானது. வேலூர் புரட்சி ஆங்கிலேயே எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். ஜான்சிராணி வாள் வீசும் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டவர் வேலு நாச்சியார். எந்த மாநிலத்துக்கும் சற்றும் சளைக்காத வகையில் விடுதலைப் போரில் 250 ஆண்டுகால தொடர் பங்களிப்பு செய்துள்ளது தமிழ்நாடு. முதல் சுதந்திரப் போர் எனக் கூறப்படும் சிப்பாய் புரட்சிக்கு அரை நூற்றாண்டுக்கு முன் வேலூர் புரட்சி நடந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 300

0

0