அன்றே சொன்னார் எடப்பாடி பழனிசாமி… டிரெண்டிங்கில் #தமிழ்நாடு… ரீவைன்ட் செய்து கொண்டாடும் அதிமுக!!!

Author: Babu Lakshmanan
6 January 2023, 1:37 pm
Quick Share

தமிழ்நாடு குறித்து ஆளுநர் கருத்து கூறிய நிலையில், அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏற்பாடுகளை செய்தோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை பாராட்டி, உரை நிகழ்த்தினார். அப்போது, பேசிய அவர், ஒரே பாரதம் தான் அதில் நாம் எல்லோரும் அங்கம் என்றும், இப்பொழுது எல்லாம் பலர் பாரதத்தை பற்றி பேசுவது கிடையாது என்றும் கூறினார்.

மேலும், பாரதம் என்பதை உடைப்பதற்கு, அழிப்பதற்கு பல முயற்சிகள் நடைபெற்றது ஆங்கிலேயர்கள் அதை அழிக்க நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும், தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்தில் திராவிட கட்சிகள், அமைப்புகள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடும் கண்டனங்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், டுவிட்டரில் தமிழ்நாடு என்னும் ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

இப்படியிருக்கையில், அண்மையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்ட பதிவை அதிமுகவினர் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.

டுவிட்டரில் ஒருவார்த்தை டிரெண்டிங்கின் போது, முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடம் என்றும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் மக்கள் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ஜனநாயகம் என்றும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழன் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழ்த்தேசியம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதேபோல, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அவரவர் ஒவ்வொரு வார்த்தை பதிவிட்டிருந்தனர். ஆனால், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தமிழ்நாடு எனக் குறிப்பிட்டிருந்தார். இதனை பகிர்ந்த அதிமுகவினர், அன்றே தமிழ்நாடு என்று சொன்னவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறி, வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 403

0

0