டாஸ்மாக் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம்… ஆட்சியில் இல்லாதபோது எதிர்ப்பு, ஆட்சிக்கு வந்ததும் முழு ஆதரவு!!

12 June 2021, 10:03 pm
tasmac cover - updatenews360
Quick Share

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகள் அனைத்தையும் மூடுவோம் என்று கூறப்பட்டிருந்தது.

மதுக்கடைகளை மூடுவோம் :

அதே ஆண்டு ஏப்ரல்18-ந் தேதி கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, “மதுபான ஆலைகளை திமுகவைச் சேர்ந்தவர்கள் நடத்துகிறார்கள் என்பது அரசியலுக்காக சொல்லப்படுகிறது. நமது தலைவர் ஒரு விஷயத்தை மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் மதுவிலக்கு அமலான உடனே திமுகவினர், அவர்களது உறவினர்கள் மது ஆலைகள் நடத்தி வந்தால் அதை மூடிவிடுவோம். தமிழகத்தில் மதுவிலக்கு என்பதற்காக வெளி மாநிலத்துக்காக உற்பத்தி செய்யமாட்டார்கள்” என்று உறுதிபடக் குறிப்பிட்டார்.

அந்த தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அமைந்தபோதும், “டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும்” என்று கனிமொழி தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேதான் இருந்தார்.

பேனரை பிடித்த இன்றைய முதலமைச்சர் :

இந்த நிலையில்தான், கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. பின்பு மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது 44 நாட்கள் கழித்து,சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.

இதற்கு திமுக கடுமையான கண்டனம் தெரிவித்தது. அதிமுக அரசு மதுபான கடைகளை திறக்க கூடாது என்று தமிழகம் முழுவதும் ஒரு போராட்டத்தையும் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி தீவிரமாக நடத்தியது.

அன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தை விட்டு வெளியே வந்து, கொரோனா பரவல் காலத்தில், மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கருப்பு வண்ண உடையணிந்து, கருப்பு கொடி, பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த போராட்டத்தில் மிகவும் ஆச்சர்யப் படவைக்கும் விதமாக ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதி உள்ளிடோரும் பங்கேற்றனர். அப்போது ஸ்டாலின் ‘’கொரோனா பரவலின்போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும், குடியைக் கெடுக்கும் அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம். அடித்தட்டு மக்களுக்கு 5,000 ரூபாய் வழங்கு. ஊரடங்கு காலத்தில் மதுக்கடை எதற்கு?’’ என்ற பதாகையை ஏந்தி ஆவேசமாக கோஷமும் எழுப்பினார்.

கண்டனங்களும்… விவாதங்களும்…!!

இதேபோல் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் போன்றோரும் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினர்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், டாஸ்மாக் கடைகளை திறக்கும் முன்பாகவே அதிமுக அரசு மீது அத்தனை தலைவர்களும் பொங்கியெழுந்து கண்டன அறிக்கைகளை குற்றப்பத்திரிகை போல வாசித்தும் தள்ளினர்.

Erode Tasmac - Updatenews360

சென்னையில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி வழக்கம்போல் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணி கட்சித் தலைவர்களும் மீண்டும் கொந்தளித்தனர். அப்போது ஸ்டாலின் கூறுகையில் “சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது கொரோனா பரவலுக்கான பெருவழி. யார் பாதிக்கப்பட்டால் நமக்கென்ன, வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்” என கண்டனம் தெரிவித்தார்.

கனிமொழி ஒருபடி மேலே போய் “கொரோனாவை அதிகரிக்கவும் போட்டி போட வைக்கத்தான் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பா?”என கேள்வி எழுப்பினார்.

சில தனியார் தொலைக்காட்சி சேனல்கள் சூடான விவாதங்களை நடத்தி அதிமுக அரசு மீது மக்களிடையே கொதிநிலையையும், வெறுப்புணர்வையும் உருவாக்கின.

போராட்டத்தை மறந்த திமுக :

இதோ! சரியாக ஓராண்டு கடந்து தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியையும் கைப்பற்றிவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு இருந்ததைவிட இப்போது கொரோனா பல்லாயிரம் மடங்காக பல்கிப்பெருகி தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உயிர்களை காவு வாங்கி வருகிறது.

அதேசமயம், ஊரடங்கிற்கு இடையே, சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் வருகிற 14-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

stalin cm - updatenews360

கடந்த ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மதுபான கடைகளை திறக்கக் கூடாது என்று போராட்டம் நடத்திய அதே ஸ்டாலின்தான் இன்று முதலமைச்சராக டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளார்.

அப்போது அவருக்கு ஆதரவு குரல் எழுப்பிய கனிமொழி உள்ளிட்ட ஒருவரையும் இப்போது காணோம். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இது தோழமையின் சுட்டுதல் என்று ஒருவர் கூட நாசுக்காக கூறவில்லை. அத்தனை பேரும் வாய்மூடி மௌனிகளாக மாறிப் போய்விட்டதுதான் ஆச்சரியம்.

இப்படி கொடுத்து… அப்படி வாங்குவதா..?

அதேநேரம், மதுக்கடைகளை திறப்பதற்கு, கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது,”அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை விமர்சித்த திமுக இப்போது அதே தவறை செய்யலாமா? ஒருபுறம் கொரோனா நிவாரண நிதியாக 2000 ரூபாய் வழங்கிவிட்டு மறுபுறம் அதை பறிக்கும் விதமாக மதுக்கடைகளை திறப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், “மதுக்கடைகள் திறக்கப்பட்டால் ஏழை குடும்பங்களுக்கு கிடைக்கும், மிகக்குறைந்த வருமானமும் பறிபோய்விடும். குடும்பங்களில் வறுமை அதிகரிக்கும். வன்கொடுமை பெருகும். இவற்றை தடுக்க தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க கூடாது. மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் முருகன் விடுத்துள்ள அறிக்கையில் “கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவலின்போது மதுக்கடைகளை மூடவேண்டும் என திமுக போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளைத் திறக்க முயல்வது என்ன நியாயம்?

கொரோனாவை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் இந்த மதுக்கடைகளைத் திறக்கும் ஒரு நடவடிக்கையால் வீணாகப் போய்விடும். நோய்த் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால், பல மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும். தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன் வரட்டும்.” என்று கண்டித்து இருக்கிறார்.

Murugan Slams VCK -Updatenews360

சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “கொரோனா பரவல் தீவிரமாக உள்ள இந்த நேரத்தில் மட்டுமல்ல எப்போதுமே மதுக்கடைகளை திறக்க கூடாது. இன்று நடக்கும் பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு மதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 2016 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இப்போது அவருடைய வாரிசான ஸ்டாலின்தான் தமிழக முதலமைச்சராக உள்ளார். தந்தையின் வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் மகனுக்கு அழகு. எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை எத்தகைய சூழ்நிலையிலும் திறக்கவே கூடாது” என்று வேண்டுகோள் வைத்தனர்.

Views: - 151

2

0