டாஸ்மாக்கில் கரூர் கம்பெனி முறைகேடு…? பிரச்சனையை கிளறும் மார்க்சிஸ்ட்… திமுக அரசுக்கு திடீர் சிக்கல்?…

Author: Babu Lakshmanan
6 December 2022, 9:11 pm
Quick Share

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சமீபகாலமாக தோழமையின் சுட்டுதல் என்பதுபோல் அவ்வப்போது ஆளும் திமுக அரசின் தவறுகளை தட்டி கேட்பது வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. சில நேரங்களில் இது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குடைச்சலை கொடுப்பது போலவும் அமைந்து விடுகிறது.

அதற்காக அக் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான, முரசொலியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்வதும் உண்டு.

என்றபோதிலும் சொத்து வரி, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு உள்ளிட்ட மக்களை பாதிக்கும் பொது பிரச்சனைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்தியே வருகிறது.

முந்தைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து நடத்திய அளவிற்கு இப்போது தீவிரமாக இல்லை என்றாலும் கூட பெயரளவிற்கு தமிழக மார்க்சிஸ்ட் தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருவதும் உண்மைதான்.

இந்த நிலையில்தான் அக் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இரண்டு முக்கிய பிரச்சனைகளை தற்போது கையில் எடுத்து இருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் மின் கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கவில்லை. ஆதார் இணைப்பு மூலம் எவ்விதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தாலும், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எனவே மின் இணைப்புடன் ஆதார் இணைப்பை கைவிட வேண்டும்.

அடுக்குமாடி குடியிருப்புகள், இரண்டு மூன்று வீடுகள் உள்ள இடங்களில் பொது மின் இணைப்பிற்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.

2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூல் செய்வதை விடுத்து மாதம் தோறும் மின் கட்டணத்தை கணக்கீடு செய்து வசூல் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும் “என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இன்னொரு பதிவில் அவர் வைத்துள்ள வேண்டுகோள்தான், திமுக அரசுக்கு பெரும் தலைவலியை கொடுப்பதுபோல் அமைந்திருக்கிறது.

அதில் அவர் கூறும்போது, “தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும். நீதிமன்றமும் இதற்கான ஆணைகளை பிறப்பித்து இருக்கிறது. எனவே மது விற்பனையினை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் கரூர் கம்பெனி என்ற பெயரில் பல்வேறு சீர்கேடுகள் நடைபெறுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதனை தமிழக அரசு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்” என்று பட்டும் படாமலும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

இதுவரை சமூக ஊடகங்களில் மட்டுமே பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் கரூர் கம்பெனி விவகாரத்தை மார்க்சிஸ்ட் கையில் எடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏனென்றால் டாஸ்மாக் ஊழியர்களிடம், கடையில் விற்பனையாகும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ஒரு ரூபாய் கமிஷன் தரவேண்டும் என கரூர் கம்பெனியை சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நேரத்தில்
சட்டவிரோத மதுபான விற்பனையை அவர்கள் மேற்கொள்வதாகவும் பகீர்
குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில் இப்பிரச்சனையை மார்க்சிஸ்ட் தலைவர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள்?…

“ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கணக்கீடு எடுக்கப்பட்டு கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை நினைவூட்டும் வகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையை கண்டித்த முரசொலி நாளேடு “திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்?ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்’ என்று காட்டமாக சாடி இருந்தது.

இப்போது மின் நுகர்வோர் ஒவ்வொருவரும் தங்களது ஆதாரை மின் இணைப்புடன் கண்டிப்பாக சேர்க்கவேண்டும் என்பதை வேண்டாத ஒன்று என்பதுபோல் கூறி இருப்பதுடன், மாதம்தோறும் மின் கணக்கீடு எடுப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மறுபடியும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியை மார்க்சிஸ்ட் தலைவர் நினைவுபடுத்தி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி மின் கட்டண உயர்வை தாங்கள் ஏற்கவில்லை என்றும், அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் வர்த்தக ரீதியில் வசூலிக்கப்படுவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும், விற்பனை நேரத்தை குறைக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதைவிட டாஸ்மாக்கில் நடைபெறும் சீர்கேட்டுக்கு காரணமான கரூர் கம்பெனி பற்றி ஆய்வு நடத்தவேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதில் ஒரு ஒற்றுமையான விஷயம் என்னவென்றால் மின்சாரம், டாஸ்மாக் தொடர்பான இரண்டு முக்கிய துறைகளும் கரூரை சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வசம்தான் உள்ளது.

அதனால் முதலமைச்சர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கூறும் புகாரை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Views: - 294

0

0